(730)
வன்தாளி னிணைவணங்கி வளநகரம் தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு
என்றாள்எம் இராமாவோ உனைப்பயந்த கைகேசி தஞ்சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே உன்னை நானே
(731)
வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ எம்பெருமான் எஞ்செய் கேனே
(732)
கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே
(733)
வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று
நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறே
(734)
பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப வெம்பசிநோய் கூர இன்று
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய் கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன் எஞ்செய்கேன் அந்தோ யானே.
(735)
அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம்
என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே முழுசாதே மோவா துச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமும் காணாது
எம்மானை யென்மகனை யிழந்திட்ட இழிதகையே னிருக்கின் றேனே.
(736)
பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப் புனைந்துபூந் துகில்சே ரல்குல்
காமரெழில் விழலுடுத்துக் கலனணியா தங்கங்க ளழகு மாறி
ஏமருதோ ளென்புதல்வன் யானின்று செலத்தக்க வனந்தான் சேர்தல்
தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே விசிட்டனே சொல்லீர் நீரே
(737)
பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென் மருகிகையும் வனத்தில் போக்கி
நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட் டென்னையும்நீள் வானில் போக்க
என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில் இனிதாக விருக்கின் றாயே.
(738)
முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையுமுன் னருமையையு முன்மோயின் வருத்தமுமொன் றாகக் கொள்ளாது
என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே.
(739)
தேன்நகுமா மலர்க்கூந்தல் கெளசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே.
(740)
ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய் வனம்புக்க அதனுக் காற்றா
தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான் புலம்பியஅப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார் தீநெறிக்கண் செல்லார் தாமே.
