ஐந்தாந் திருமொழி
(1788)
தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்
துவள என் னெஞ்சகம் சோரவீரும் சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன்
இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார் என்னல மைந்துமுன் கொண்டுபோன
குவளை மலர்நிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
(1789)
தாதவிழ் மல்லிகை புல்லிவந்த தண்மதி யினிள வாடையின்னே
ஊதை திரிதந் துழறியுண்ண ஓரிர வுமுறங் கேன் உறங்கும்
பேதையர் பேதைமை யாலிருந்து பேசிலும் பேசுக பெய்வளையார்
கோதை நறுமலர் மங்கைமார்வன் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
(1790)
காலையும் மாலையொத் துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்,
போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும் பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி
மாலவன் மாமணி வண்ணன்மாயம் மற்று முளவவை வந்திடாமுன்கோல
மயில்பயி லும்புறவில் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
(1791)
கருமணி பூண்டுவெண் ணாகணைந்து காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும்
ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள ஓரிர வுமுறங் காதிருப்பேன்
பெருமணி வானவ ருச்சிவைத்த பேரரு ளாளன் பெருமைபேசி
குருமணி நீர்கொழிக் கும்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
(1792)
திண்டிமி லேற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற கோல இளம்பிறை யோடுகூடி
பண்டைய வல்லவிவை நமக்குப் பாவியே னாவியை வாட்டஞ்செய்யும்
கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
(1793)
எல்லியும் நன்பக லுமிருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார்
நல்லர் அவர்திறம் நாமறியோம் நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை
வல்லன சொல்லி மகிழ்வரேனும் மாமணி வண்ணரை நாம்மறவோம்
கொல்லை வளரிள முல்லைபுல்கு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
(1794)
செங்க ணெடிய கரியமேனித் தேவ ரொருவரிங் கேபுகுந்து என்
அங்கம் மெலிய வளைகழல ஆதுகொ லோ என்று சொன்னபின்னை
ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ டாடு மதனை யறியமாட்டேன்
கொங்கலர் தண்பணை சூழ்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
(1795)
கேவல மன்று கடலினோசை கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து என்
ஆவி யளவும் அணைந்துநிற்கும் அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு
ஏவலங் காட்டி இவனொருவன் இப்படி யேபுகுந் தெய்திடாமுன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
(1796)
சோத்தென நின்று தொழவிரங்கான் தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும்
போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான் போயின வூரறி யேன் என்கொங்கை
மூத்திடு கின்றன மற்றவன்றன் மொய்யக லம் அணை யாதுவாளா
கூத்த னிமையவர் கோன்விரும்பும் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
(1797)
செற்றவன் தென்னிலங் கைமலங்கத் தேவர்பி ரான்திரு மாமகளைப்
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரரு ளாளன் பெருமைபேசக்
கற்றவன் காமரு சீர்க்கலியன் கண்ணகத் தும்மனத் துமகலாக்
கொற்றவன் முற்றுல காளிநின்ற குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
