ஏழாந் திருமொழி
(1508)
ஆளும் பணியு மடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணிவெய்தச் சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயு மனையாரும் வேற்க ணாரும் பயில்வீதி
நாளும் விழவி னொலியோவா நறையூர் நின்ற நம்பியே.
(1509)
முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்ன ருடல்துணிய
தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான், வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப் பான லொருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.
(1510)
தெள்ளார் கடல்வாய் விடவாய சினவா ளரவில் துயிலமர்ந்து
துள்ளா வருமான் விழவாளி துரந்தா னிரந்தான் மாவலிமண்
புள்ளார் புறவில் பூங்காவி புலங்கொள் மாதர் கண்காட்ட
நள்ளார் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.
(1511)
ஓளியா வெண்ணெ யுண்டானென் றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் மென்மலர்மேல்
களியா வண்டு கள்ளுண்ணக் காமர் தென்றல் அலர்தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே.
(1512)
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே.
(1513)
வள்ளி கொழுநன் முதலாய மக்க ளோடு முக்கண்ணான்
வெள்கி யோட விறல்வாணன் வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்
பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா யலவன் முகம்நோக்கி
நள்ளியூடும் வயல்சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே.
(1514)
மிடையா வந்த வேல்மன்னர் வீய விசயன் தேர்கடவி,
குடையா வரையொன் றெடுத்தாயர் கோவாய் நின்றான் கூராழிப்
படையான் வேதம் நான்கைந்து வேள்வி யங்க மாறிசையேழ்
நடையா வல்ல அந்தணர்வாழ் நறையூர் நின்ற நம்பியே.
(1515)
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
செந்தா மரைமே லயனோடு சிவனு மனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே!
(1516)
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமே லணிந்து,
உடலம் நீறும் பூசி யேறூரும் இறையோன் சென்று குறையிரப்ப
மாறொன் றில்லா வாசநீர் வரைமார் வகலத் தளித்துகந்தான் நாறும்
பொழில்சூழ்ந் தழகாய நறையூர் நின்ற நம்பியே.
(1517)
நன்மை யுடைய மறையோர்வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதில்சூழ் வயல்மங்கைக் கலிய னொலிசெய் தமிழ்மாலை
பன்னி யுலகில் பாடுவார் பாடு சார பழவினைகள்
மன்னி யுலகம் ஆண்டுபோய் வானோர் வணங்க வாழ்வாரே.
