(2655)
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்.
(2656)
முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் மென்பர் – முதல்வா,
நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே,
புகரிலகு தாமரையின் பூ.
(2657)
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
(2658)
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று
குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே!
புடைதான் பெரிதே புவி.
(2659)
புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
(2660)
உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்?
உலகளந்த மூர்த்தி! உரை.
(2661)
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை.
(2662)
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும்,
சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், – கணைநாணில்
ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
ஓவாத வூணாக உண்.
(2663)
உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே,
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்
பேராயற் காளாம் பிறப்பு.
(2664)
பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்
இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்.