(905)
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே.
(906)
தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியே னுன்னை யல்லால்சிக் கெனச் செங்கண் மாலே
ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே.
(907)
மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதேஉன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே.
(908)
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே.
(909)
மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி
காம்பறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்துவாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே.
(910)
அடிமையில் குடிமை யில்லாஅயல்சதுப் பேதி மாரில்
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்
அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே.
(911)
திருமறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும்
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே.
(912)
வானுளா ரறிய லாகா வானவா என்ப ராகில்
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய் என்ப ராகில்
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே.
(913)
பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே.
(914)
அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே.
(915)
பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்
எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறாஉன்னை யென்னோ களைகணாக் கருது மாறே.
(916)
வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல்
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே.