(910)

(910)

அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்

குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்

முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்

அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே.

பதவுரை

முடியினில் துளபம் வைத்தாய்

–

திருமுடியிலே திருத்துழாய் மாலையை அணிந்தவனே

அரங்கம் மாநகர் உளானே!-:

அடிமையில்

–

(உனக்குக்) கைங்கரியம் செய்வதில்
குடிமை இல்லா

–

உயிர்குடிப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கமில்லாத
அயல்

–

(அடிமைக்கு) அயலான
சதுப்பேதிமாரில்

–

நான்கு வேதங்களையு மோதின அந்தணர்களைக் காட்டிலும்.
குடிமையில் கடைமைபட்ட

–

குடிப்பிறப்பினால் இழிவடைந்த இழிமுலத்திற் (பிறந்த மிகவும்)
குக்கரில்

–

பரமசண்டாள ஜாதியில்
பிறப்பர் ஏனும்

–

பிறப்பர்களானாலும்
மொய் கழற்கு

–

(உனது) நெருங்கிய திருவடிகளிடத்து
அன்பு செய்யும்

–

பக்தி செய்கின்ற
அடியரை

–

அடியார்களையே
உகத்தி போலும்

–

நீ விரும்புவாய் போலும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இனிமேல், கீழ்ப்பாட்டில் சொன்ன ஞானமுடைய பாகவதர்களின் வைபவம் கூறுகிறது. எம்பெருமான் தன் திருவடித்தாமரைகளில் பக்திசெய்யாதவர்கள் உயர்குலத்திற் பிறந்தவர்களாயிருந்தபோதிலும் அவர்களை ஒருபதார்த்தமாகவும் நினையாமல் உபேஷித்துவிட்டு, தனது திருவடிகளில் பகதி செய்பவர் மிகவும் இழிகுலத்தவராயினும் அவரையே விரும்புவன் என்கிறது இப்பாட்டில்.

மேன்மைக்குக் காரணம் -எம்பெருமான் பக்கல் தொண்டு பூண்டு ஒழுகுவதே தவிர, உயர்குடிப்பிறப்பு அன்று. அவ்வாறு தொண்டுபூண்டு ஒழுகாமலிருப்பதே தாழ்ச்சிக்குக் காரணம்; இழிகுலப்பிறப்பு அன்று, ஆகையால் யோநிஜந்மத்தைச் சிறிதும் பாராட்ட வேண்டாவென்க.

குடிமை-குடிப்பிறப்பிற்கு ஏற்ற நல்லொழுக்கம். அயலாதலாவது ‘எம்பெருமானுடைய கைங்கர்யத்தைச் செய்தற்கு அநுகூலமாக வேதமோதுகிறோம் என்று அறியாதிருக்கை. அத்யயநத்திற்குப் பலன் வேதத்தின் பொருளை உள்ளபடி அறிந்து நடப்பதுதான்’ என்று உணராதவர்கள் நான்கு வேதங்களிலும் வல்லவரானாலும் பயனில்லை என்பது முதலடியில் விளங்கும்.

சதுப்பேதிமார் -சதுர் வேதிமார்; இருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களை ஓதினவர்களென்கை. குக்கர் – மிகவும் தாழ்ந்தவர் என்பது பொருள் (க்ஷுத்ர) என்ற வடசொல் குக்கர் எனத்திரிந்தது. ஏனும்-எனினும் என்பதன் மரூஉ.               (நு.கூ)

English Translation

O Tulasi-wreathed Lord with lotus feet! Rather than a life of high birth and Vedic proficiency bereft of the spirit of service, you are pleased with a life of devotion, — even if it be from one born of the lowest rungs of the society. O Lord of Arangama-nagar!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top