முதல் திருமொழி
(3009)
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.
(3010)
கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே.
(3011)
காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே
(3012)
கடலும்மலையும் விசும்பும் துழாயெம்போல்,
சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,
உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே.
(3013)
ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,
வாழியவானமே, நீயும் மதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே
(3014)
நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.
(3015)
தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்கு
எம்ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,
வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,
மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே.
(3016)
இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
உருளும்சகடம் உதைத்தபெருமானார்,
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே.
(3017)
நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,
அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே.
(3018)
வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,
மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே
(3019)
சோராத வெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்,
ஓராயிரம் சொன்ன அவற்றுளி வைப்பத்தும்,
சோரார் விடார்க்கண்டீர் வைகுந்தம் திண்ணெனவே.
