ஆறாந் திருமொழி
(1698)
தொண்டீர். உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன்,
வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம் கண்டாள்,
கண்டு கொண்டு கந்த கண்ண புரம்நாம் தொழுதுமே.
(1699)
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து,
பெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,
இருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
(1700)
வல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை,
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,
வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை,
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
(1701)
மல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ் சிலைகால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
(1702)
ஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம்
ஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி
சேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன்
காமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
(1703)
வருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,
பெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி முன்
கருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
(1704)
இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு,
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான்,
அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி,முன்
கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
(1705)
மாலாய் மனமேயருந்துயரில் வருந்தா திருநீ வலிமிக்க
காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்,
மாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து,
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
(1706)
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக,
வன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன்,
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்து,
கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
(1707)
கருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை,
திருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன்,
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார்
இருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
