(3327)

(3327)

கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும் தொழாவகை செய்து,

ஆட்டுதிநீ யரவணையாய். அடியேனும் அஃதறிவன்,

வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் திருவடியே சுமந்துழல,

கூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே.

 

பதவுரை

அரவு அணையாய்

சேஷசாயியான பெருமானே!,

நீ

நீ

(அபிமதரான சிலரை)

நின் குரை கழல்கள்

ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே

கூட்டுதி

சேர்த்துக்  கொள்ளுகிறாய்;

(திருவுள்ள மில்லையாகில்)

இமையோரும்

(ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும்

தொழா வகை செய்து

கண்டு அநுபவியாதபடி பண்ணி

ஆட்டுதி

அலைக்கின்றாய்;

அஃது

இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை

அடியேனும்

நானும்

அறிவன்

அறிந்தேயிருக்கின்றேன்;

என்னை

எனக்குண்டான

வேட்கை எல்லாம் விடுத்து

விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து

உன் திரு அடியே

உனது திருவடிகளையே

சுமந்து உழல

நான் தலையால் சுமந்து திரியும்படி

கூட்ட அரிய திரு அடிக்கண்

துர்லபமான திருவடிகளிலே

கூட்டினை

சேர்த்துக் கொண்டாய்;

நான் கண்டேன்

இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக்கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம்.  கூட்டுநின் குரை கழல்கள்=சிலரைத் திருவடி சேர்த்துக்கொள்ளத் திருவுள்ளம்பற்றினால், அவர்கள் எவ்வளவு தண்ணியர்களாயிருந்தாலும் தன்னுடைய சக்தியே காரணமாக அவர்களைத் திருவடி சேர்த்துக்கொள்ளுகிறாயென்கை.  இன்னாரினையாரென்று பாராமல், உகந்தாரைத் திருவடி சேர்த்துக்கொள்ளுதல் உன்னுடைய இயல்வு என்றபடி.

இமையோரும் தொர்வகைசெய்து ஆட்டுதி=பிரமன் முதலிய பெரியோர்களேயாகிலும் உகப்புக்கு இலக்கு ஆகாதவர்களை வந்து கிட்டாதபடிபண்ணி அலைக்கின்றா யென்றபடி.

அடியேனும் அது அறிவன்=விருப்பமுண்டானால் சிலர்க்கு எளியனாகியும், விருப்பமில்லையாகில் சிலர்க்கு அரியனாகியும் போருகின்றா யென்கிற இந்த உன்படியை நான் அறிந்து கொண்டே யிருக்கின்றேன் என்று கூறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! இப்போது நீர் அறிந்துகொண்டது என்ன?’ என்று கேட்க; இப்போது என்னை நீ விஷயீகரிக்கத் திருவுள்ளம்பற்றினபடியாலே திருவடியோடே என்னைச் சேர்த்துக்கொண்டாயே!

இதுதான் நான் கண்டது என்கிறார்.

வேட்கையெல்லாம் விடுத்து=இவ்வுலகில் என்னுடைய ஆசைக்கு இலக்காகாத பொருளே இல்லை; கண்டபொருள்களிலெல்லாம் ‘எனக்கு, எனக்கு’ என்றே ஆசைவைத்துப் போந்தேன்.; அந்த ஆசைகளையெல்லாம் விடுவித்தருளினாய்.  அதுவன்றியும், (உன் திருவடியே சுமந்துழல) பரதாழ்வானுக்கு மரவடியைக்கொடுத்து உபச்சந்தனம் பண்ணினாய் போலன்றிக்கே ஸாகூஷாத் திருவடிகளையே என்தலைமீது வைத்தருளினாய்; இதைக் கேட்;டார்வாய்க் கேட்கையன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேனாகையாலே அறிந்தேன்-என்றாராயிற்று.

 

English Translation

O Lord on serpent couch, you make even gods roam without redemption.  I know this too, shearing me of my desires, you have made me bear your feet and roam, I now see that I am inseparable from your precious lotus feet!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top