(3328)
கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்,
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே.
பதவுரை
|
ஒண் தொடியாள் |
– |
அழகிய கைகளையுடையளாகிய |
|
திரு மகளும் |
– |
பெரிய பிராட்டியாரும் |
|
நீயுமே |
– |
அவளுடைய நாயகனான நீயுமே |
|
நிலா நிற்ப கண்ட சதிர் |
– |
களித்து வாழ்கிற அழகிய இருப்பை |
|
கண்டு |
– |
இப்போது காணப்பெற்று |
|
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் |
– |
காண்பது கேட்பது தொடுவது மோருவது உட்கொள்ளுவதாகிற வேலைகளைச் செய்துகொண்டு அலைகின்ற பஞ்சேந்திரியங்களுக்கும் வாய்த்த விஷய சுகங்களையும் |
|
தெரிவு அரிய அளவு இல்லா சிறு இன்பம் |
– |
கைவல்ய ஸூகத்தையும் |
|
ஒழிந்தேன் |
– |
தவிர்க்கப் பெற்றேன்; |
|
உன் திரு அடியே அடைந்தேன் |
– |
உனது திருவடிகளை அடையவும் பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
கீழ்ப்பாசுரத்தில் ப்ரஸங்கித்தபேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னியுரைக்கின்றாரிதில்.
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்கண்ட சதிர்கண்டு-கண்டுகேட்டுற்று மோந்துண்டுழலுமைங் கருவிகண்ட வின்பமும் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பமும் ஒழிந்தேன், உன்; திருவடியே அடைந்தேன்-என்று அந்வயிப்பது.
*** = வைகுண்ட து பரே லோக ச்ரியா ஸார்த்தம் ஜகத் பதி:இ ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா.” என்கிறபடியே தன் திருமாதுடனே தான் தனியரசாயுறைகின்ற விருப்பை எம்பெருமான் ஆழ்வார்க்குக் காட்டிக் கொடுத்தருளினனாதலால் “ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்கண்ட சதிர்கண்டு” என்கிறார். தொடி என்று கைவளைக்குப்பெயர்; ஒளிபொருந்திய கைவளைகளையுடையவள் என்று பிராட்டிக்கு இவ்வடைமொழி கொடுத்ததனால். க்ஷணகாலமும் விட்டுப் பிரியாதவள் என்பது பெறப்படும். இவ்விடத்தில் *** = யாமி ந யாமீதி தவே வததி புரஸ்தாத் க்ஷணேந தந்வங்க்யா:. களிதாநி புரோவலயாநி அபராணி புநஸ் ததைவ தவீதாநி,” என்ற சுலோகத்தின் தாற்பரியம் நினைக்கத்தகும். அதாவது, தலைமகன் தலைமகளைநோக்கி, ‘என் கண்மணி! நான் உன்னைப் பிரிந்து ஓர் ஊர்க்குச் செல்கின்றேன்’ என்று சொன்ன நொடிப்பொழுதிலேயே அவளது கையில் அணியப்பட்டிருந்த வளைகளில் முன்னேயிருந்த வளைகள் கழன்று கீழே விழ்ந்தன. அதனைக்கண்ட கணவன் ‘இவள் நமது பரிவைப் பொறுத்திருக்க மாட்டாதவளாகையாலே இவளைப் பிரிந்து நாம் வெளியேறலாகாது’ என்று நினைத்து உடனே ‘நயாமி’ என்றான்; இதற்கு இரண்டுவகையான பொருள்; ந, யாமி என்று இரண்டு பதமாகக்கொண்டால் ‘நான்போகிறதில்லை’ என்று பொருள்படும்; ‘நயாமி’ என்று ஒரு சொல்வடிவமாகவே கொண்டால் உன்னையும் உடனழைத்துக்கொண்டு போகிறேன்’ என்று பொருள்படும். இரண்டுவகையான பொருளும் இங்குத்தலைமகனுக்கு விவகூஷிதமே. நாயகிக்கு அச்சொல் செவிப்பட்ட நொடிப்பொழுதிலேயே, கையில்நின்றும் கழன்றவைபோக நின்ற வளைகள் படீல் என்று வெடித்துத்துகளாய் விழுந்தன என்பது மேற்காட்டி சுலோகத்தின் கருத்து. நாயகனுடையபிரிவு ப்ரஸ்தாவத்தில் வந்த மாத்திரத்திலேயே உத்தம நாயகியினது உடல் மெலிந்துபோகும் என்பதும், அந்த விச்லேஷவார்த்தை மாறினவாறே உடம்பு பூரிக்குமென்பதும் உள்ளுறை. பெரிய பிராட்டியார்க்கு ஒருபோதும் பிரிவைப்பற்றின ப்ரஸ்தாவமேயில்லாமலிருக்கு மாதலால் ஒண்தொடியாள் திருமகள் எனப்பட்டது.
“திருமகளும் நீயுமே நிலாநிற்ப” என்கிறது பொருந்துமோ? பல கோடி நூறாயிரம் நித்ய முக்தர்களும் அங்கு இருக்கும்போது “திருமகளும் நீயுமே” என்று பரிநிலையேகாரம் இட்டுப்பேசுவது கூடாதே என்று சங்கைபிறக்கும்; இதற்குப்பரிஹாராமாக நம்பிள்ளை யருளிச்செய்வது காண்மின்;-“இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே த்ரிபாத் விபூதியாக அடங்கிக்கிடக்கும்; வாசல்தோறும் ஈச்வரர்கள் இங்கேயிறே.” என்பதாம். அங்கு நித்ய முக்தர்கள் சேஷத்வாநுஸந்தான வுறைப்பினால் தனிப்பட்டுத் தோன்றாமே திவ்யதம்பதிகளின் அபிமானத்துக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றமையாலே அவர்களைப் பிரித்துச்சொல்லவேண்டிய அவசியமில்லை; இந்நிலத்தில் மனைதோறும் ‘நானே கடவுள், நானே கடவுள்’ என்றிருப்பதுபோல, திருநாட்டில் அஹம்பாவமடித்துத் திரிகிறவர்; ஒருவருமில்லையாதலால் திவ்யதம்பதிகளைச் சொன்னதுவே போதுமென்றபடி.
நிலாநிற்ப=அழகுற நிற்ப. இந்த திவ்யஸேவையை இங்கே காட்டிக்கொடுக்கக் கண்டதனால் இந்நிலத்து விஷயபோகங்களையும் கைவல்ய மோக்ஷமென்கிற அல்பானந்தத்தையும் காரியுமிழ்ந்தேனென்கிறார். கண்ணாலே சில ரூபங்களைக் கண்டும், காதாலே சில சப்தங்களைக்கேட்டும்இ த்வகிந்திரியத்தாலே சிலவற்றைக் தொட்டும், மூக்காலே சிலவற்றை மோந்தும், நாவினால் சிலவற்றை உட்கொண்டும் இங்ஙனே பஞ்சேந்திரியங்களாலும் பெறப்படுகிற இஹலோக விஷய ஸூகங்களில் வெறுப்படைந்தேன். தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் என்பது கைவல்ய ஸூகத்தை. கீழ்ச்சொன்ன கண் முதலிய இந்திரியங்களினால் க்ரஹித்து அநுபவிக்க அரிதாகையாலே தெரிவரி என்றது. நித்யமோக்ஷமாகையாலே அளவில்லா என்றது. பகவதனுபவத்தை யபேகூஷித்து அற்பமாகையாலே சிற்றின்பம் என்றது.
English Translation
I have experienced the pleasure of seeing, hearing, touch, smell and taste, and the limited joy of heaven that lies beyond the senses, Only you and the fair-bangled Lakshmi are permanent, My Lord, what a wonder that I have attained your lotus feet!
