(1042)
தூணாயதனூ டரியாய் வந்துதோன்றி *
பேணா வவணனுடலம் பிளந்திட்டாய்! *
சேணார் திருவேங்கட மாமலைமேய *
கோணாகணையாய்! குறிக்கொள்ளெனைநீயே.
பதவுரை
தூணாயதனூடு | – | வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே |
அரி ஆய் | – | நரஸிம்ஹமாகி |
வந்து தோன்றி | – | திருவவதரித்து, |
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய் | – | (தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே! |
சேண் ஆர் | – | மிக்க உயர்த்தி பொருந்திய |
திரு வேங்கடம் மா மலை மேய | – | திருமலையிலே எழுந்தருளியிருப்பவனும் |
கோள் நாகம் அணைபாய் | – | மிடுக்கையுடைய திருவனந்தாழ்வானைப் பள்ளியாகவுடையனுமான பெருமானே! |
எனை | – | அடியேனை |
நீயே குறிக்கொள் | – | நீயாகவே திருவுள்ளம் பற்றியருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1042:
தூண் ஆய் அதனூடு அரியாய், வந்து தோன்றி,
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய
கோள் நாகணையாய்! குறிக்கொள் எனை நீயே. [1-10-5]
***-[தூணாயதனூடு.] பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவைஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன் மீதும் அருள் செய்யவேணு மென்கிறார்.
“தூணூடு அரியாய் வந்து தோன்றி” என்னுமளவே போதுமாயிருக்க, ‘தூணாயதனூடு = தூணாயிருக்கிற வஸ்துவினுள்ளே’ என்று சொல்லுகைக்குக் கருத்து என்னென்னில்; ‘முன்பே நரஸிம்ஹத்தை உள்ளே அடக்கி வைத்துக் கட்டின கம்பமிது’ என்று சொல்லவொண்ணாதபடி வெறும் தூணானவதனுள்ளே என்பதாம். அரி-சிங்கம், பேணா அவுணன் – ஸர்வேச்வரனை மதியாத இரணியன் என்றும், பாகவத சிகாமணியான ப்ரஹ்லாதனை மதியாத இரணியன் என்றும் உரைக்கலாம்.
சேண் = அகலம், ஆகாசம், உயர்ச்சி, தூரம், நீளம். கோள்நாகணையாய்! கோள் – மிடுக்கு; திருவனந்தாழ்வானுக்கு மிடுக்காவது – சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம்” என்றபடி பலவகையடிமைகளுக்கும் உரிய வடிவங்களைக் கொள்ளுதற்குப் பாங்கானசக்தி. குறிக்கொள் – ஓரடியானுமுளனென்று திருவுள்ளத்தில் வைத்திரு என்றபடி. திருவனந்தாழ்வானைப் போலே என்னையும் அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ளாய் என்பது உள்ளுறை. …… …. …. …. ….. …… (5)
English Translation
O Serpent-reclining Lord, Resident of Venkatam hills rising high! You appeared as a man-lion froin out of a pillar, and split the mig’hty chest of the haughty Hiranya. Pray take notice of me.
