(1041)
உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக,
கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே,
விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய,
அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே!
பதவுரை
உறி மேல் | – | உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த |
நறு நெய் | – | நல்ல நெய்யை |
அமுது ஆக உண்டாய் | – | அமுதமாகக் கொண்டு புஜித்தவனே! |
குறள் ஆய் | – | வாமநனாகி |
நிலம் | – | பூமியை |
ஈர் அடியாலே | – | இரண்டடியாலே |
கொண்டாய் | – | அளந்து கொண்டவனே! |
விண் தோய் சிகரம் | – | பரமபதம் வரையில் சென்று ஓங்கின சிகரத்தையுடைய |
திருவேங்கடம் மேய | – | திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற |
அண்டா | – | தேவாதி தேவனே! |
அடியேனுக்கு அருள் புரியாய் | – | அடியேன் மீது கிருபை செய்தருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1041:
உண்டாய் – உறிமேல் நறு நெய் அமுது ஆக ;
கொண்டாய் – குறள் ஆய், நிலம் ஈர் அடியாலே ;
விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே. [1-10-4]
* * * –[உண்டாயுறிமேல்.] திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்ன வேண்டி இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார். திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகள் உறிகளின் மேலே சேமித்துவைத்த நெய் முதலிய கவ்யங்களை அமுது செய்தாயென்று சொன்ன முகத்தால் ஸௌலப்ய குணத்தையும், குறளாகி மாவலியிடத்துச் சென்று நீரேற்றுப் பெற்று ஈரடியாலே உலகளந்தாயென்று சொன்ன முகத்தாலே பரத்வத்தையும் பேசினாராயிற்று.
திருவேங்கடமலை பூமண்டலத்திலே உள்ளதாகையாலே நம்போன்ற மனிசர்கள் சென்று ஸேவிப்பதற்குப் பாங்காயிருப்பது போல, * விண்தோய் சிகரத் திருவேங்கடமாகையாலே நித்யஸூரிகள் வந்து ஸேவிப்பதற்கும் பாங்காயிருக்கும். ஆனதுபற்றியே “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப்பிரானும் “மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் அருளிச்செய்தது. நித்யஸூரிகள் பரத்வத்திலே ஸர்வகாலமும் பழகினவர்களாகையாலே ஸௌலப்யத்தைக் காண விரும்பி வருவர்கள்; மனிசர்கள் பரத்வத்தைக்காண விரும்பிச் செல்லுவர்கள்; இரண்டு குணங்களும் அங்கே குறையற்றவை என்று இப்பாசுரத்தினால் காட்டினாராயிற்று.
”திருவேங்கடம் மேய அண்டா“ என்ற விளியும் இங்கே பொருத்தமாக அமைந்தது. ‘அண்டன்‘ என்று இடையனுக்கும் தேவனுக்கும் பெயர். ”உறி மேல் நறுநெய் அமுதாக உண்ட அண்டா” என்று யோஜித்து, இடையனே! என்னுதல்; “குறளாய் ஈரடியாலே நிலம் கொண்ட அண்டா” என்று யோஜித்து, ‘தேவனே!- பரம புருஷனே!’ என்னுதல். இரண்டு யோஜநையாலும் பரத்வ ஸௌலப்யங்கள் விளியிலும் விளங்கினபடி. ….. ….. … (4)
English Translation
O Universe-Lord, Resident of Venkatam hills whose peaks pilerce the sky! You ate the fragrant butter from the rope shelf, your came as a manikin and took the Earth in two steps! Pray shower your grace on me, your servant.
