(1043)
மன்னாவிம்மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னின்னருள் செய்யும் தலைவன் *
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானையென்னப்ப னென்னெஞ்சிலுளானே.
பதவுரை
மன்னா | – | நிலைத்திராத |
இ மனிசப் பிறவியை | – | இந்த மநுஷ்யஜன்மத்தை |
நீக்கி | – | போக்கடித்து |
தன் ஆக்கி | – | தனக்கு ஆளாக்கிக்கொண்டு |
தன் இன் அருள் செய்யும் | – | தனது பரமகிருபையைச் செய்கின்ற |
தலைவன் | – | ஸ்வாமியும், |
மின் ஆர் முகில் சேர் | – | மின்னலோடுகூடிய மேகங்கள் வந்து சேரப்பெற்ற |
திருவேங்கடம் | – | திருமலையிலே |
மேய | – | எழுந்தருளியிருக்கிற |
என் ஆனை | – | எனது ஆனை போன்றவனுமான |
என் அப்பன் | – | எம்பெருமான் |
என் நெஞ்சில் உளானே | – | எனது நெஞ்சிலே எழுந்தருளி விட்டான் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1043:
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி, தன் ஆக்கி,
தன் இன் அருள் செய்யும் தலைவன்
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய
என் ஆனை, என் அப்பன் என் நெஞ்சில் உளானே. [1-10-6]
***-[மன்னாவிம்மனிச.] கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி மேற்பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக்கட்டினபடியைச் சொல்வதாகச் செல்லுகிறது. ”அடியேனிடரைக்களை யாயே” என்றும் “அடியேற்கருளாயே” என்றும் “அடியேனுக்கருள் புரியாயே” என்றும் “குறிக்கொள் எனை நீயே ” என்றும் பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான் அடியார்களைத் தேடித் திரிகிற நான் இங்ஙனே பிரார்த்திக்கிற உம்மை உபேக்ஷித்திருப்பேனோ?’ என்று சொல்லி ஆழ்வார் திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்; அதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அநுபவிக்கிறார். எம்பெருமான் தமது நெஞ்சிலே வந்து புகுந்தவாறே தாம் ஸம்ஸாரத்தில் நின்றும் விலகிவிட்ட தாகவே நினைத்துப் பேசுகிறார்.
மன்னா என்பது மனிசப்பிறவிக்கு அடைமொழி. ”மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்” என்றபடி மின்னலைக்காட்டிலும் அஸ்திரமான இந்த மானிடப்பிறவியில் நின்றும் என்னை நீக்கித்தன்னையே யொக்க அருள் செய்யுமெம் பெருமான் என்னெஞ்சிலே வந்து புகுந்துநிற்கிறான் காண்மின் – என்கிறார்.
தன்னாக்கி = தன்னைப்போலே என்னையும் மலர்ந்த ஞானாநந்தங்களையுடையவனாக்கி என்றாவது, தனக்கு சேஷமாக்கி என்றாவது உரைக்கலாம். மின்னார் முகில்சேர் = பெருமாளும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்திக்கு உவமையிட்ட படி…..(6)
English Translation
My Elephant, my Lord, Resident of Venkatam hills lit by the lightning of dark clouds!-he is my master, he rid me of my lowly mortal birth, made me his, and gave me service to his feet. He is now in my heart.
