(958)

(958)

வாலிமாவலத்தொருவனதுடல்கெட வரிசிலைவளைவித்து,அன்று

ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,

ஆலிமாமுகிலதிர்தர அருவரை அகடுறமுகடேறி,

பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே.

 

பதவுரை

முதற்பத்து

இரண்டாந் திருமொழி வாலிமாவலத்து

நெஞ்சே

ஓ மணமே!,

அன்று

முன்பு ஸ்ரீராமாவதாதரத்தில்

வாலி

வாலி யென்னும்பெயருடையவனான

மா வலத்து  ஒருவனது

மஹா பலசாலியான ஒரு வாநரராஜனுடைய

உடல் கெட

சரீரம் சிதறும்படியாக.

வரிசிலை வளைவித்து

அழகிய வில்லை வளையச் செய்து

(அந்த வாலியை ஒழித்த பெருமான்)

ஏலம் நாறு

பரிமளம் வீசுகின்ற

தண்தடம் பொழில்

குளிர்ந்து விசாலமான சோலைகளிலே

இடம் பெற இருந்த        எழுந்தருளியிருக்கப்பெற்ற

பாங்காக

நல்இமயத்துள்

நல்ல இமயமலையினுள்

ஆவி மா முகில் அதிர்தர

சிறுதுளியையுடைய காளமேகங்கள் அதிராநிற்க,

பீலி மா மயில்

தோகைகளையுடைய பெரிய மயில்களானவை

அரு வரை முகடு

ஏறமுடியாத படி உன்னதமான மலையினுச்சியிலே

அகடு உற ஏறி

கீழ்வயிறு தழுவும்படியாகச் சென்று ஏறி

நடம் செயும்

கூத்தாடா நிற்கு மிடமாயும்

தடம் சுனை

பரந்த சுனைகளையுடையதாயுமிருக்கிற

பிரிதி

திருப்பிரிதி யென்கிற திவ்ய தேசத்தை

சென்று அடை

சென்று சேரக்கடவை.

 


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை


முதற்பத்து – இரண்டாந் திருமொழி.

வாலி மாவலத்து.

அவதாரிகை :– கீழ்த்திருமொழியில் திருமந்திரத்தின் சிறப்பை அநுஸந்தித்த இவ்வாழ்வார், இனி அத்திருமந்திரத்தின் அர்த்தத்துக்கு எல்லைநிலமான திவ்ய தேசங்களிலேபுக்கு அநுபவிக்க இழிகிறார். எம்பெருமான் ஸர்வ ஸ்வாமி என்பதும் ஸர்வஸுலபன் என்பதும் திருமந்திரத்தின் தேர்ந்த பொருள். அடியவர்கள் இவ்வுடம்போடே அடிமை செய்து மகிழும்படிக்குப் பாங்காக எம்பெருமான் பலவிடங்களிலும் கோயில்கொண்டு தன்னுடைய ஸ்வாமித்வத்தையும் ஸௌலப்யத்தையும் விளங்கக் காட்டிக்கொண்டு நிற்கிறானாகையாலே திவ்யதேசங்கள் திருமந்திரப்பொருளுக்கு எல்லைநிலமாம். அப்படிப்பட்ட திவ்யதேசங்களை மற்றுள்ள ஆழ்வார்களும் அநுபவித்தார்களெனினும், திவ்ய தேசாநுபவமே யாத்திரையாகத் திரிந்தவர் இவ்வாழ்வாரொருவரேயாவர். தமிழ்ப்பாஷை நடமாடுமிடங்களுக்கு எல்லையான திருவேங்க டத்தளவிலே நின்றுவிடாமல், அவ்வருகே இமயமலைச் சார்பிலுள்ள திவ்ய தேசங்களையும், மற்றும் சோழநாடு, பாண்டிநாடு, தொண்டைநாடு, நடுநாடு, மலைநாடுகளிலுள்ள திவ்ய தேசங்களையும் ஒருங்கே அநுபவிக்க ஆவல்கொண்டு இமயமலையிலுள்ள திருப்பிரிதி யென்னுந் திவ்யதேசத்தை முந்துற முன்னம் அநுபவிக்கிறார்.

இத்திருப்பதியின் திருநாமம் பிருதி என்றும், பிரிதி என்றும் வழங்கப்படும். திவ்யகவி பிள்ளைப்பெருமாளையங்கார் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியில் இத்தலத்தைப்பற்றிப் பாடும்பாட்டில், ”பொருப்பிருதிக்குங் கிடந்தாற் போற் றுணித்து வீழ்த்தான், திருப்பிருதிக் கென்னெஞ்சே செல்” என்றது காண்க. இத்தலம் நந்தப்ரயாகை என வழங்கப்படுமென்பர். (ஆல்மோராவுக்கு 135-மைலில் உள்ளது.) …

(அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.)

வாலிமாவலத் தொருவன துடல்கெட வரிசிலை வளைவித்து *

அன்று ஏலநாறு தண்தடம் பொழி லிடம்பெற இருந்த நலிமயத்துள் *

ஆலிமாமுகி லதிர்தர அருவரை அகறே முகடேறி * பீலிமாமயில்

நடஞ்செயும் தடஞ்சுனைப் பிரிதி சென்றடை நெஞ்சே!


(வாலிமாவலத்து.) வாலியை வதை செய்தருளின பெருமான் இனிதாக எழுந்தருளியிருக்குமிடமான இமயமலையினுள் பரமபோக்யமாக அமைந்துள்ள திருப்பிரிதியைச் சென்று சேருமாறு நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார்.

‘மாவலத்தொருவனான வாலியினது உடல்கெட’ என்று கூட்டிக்கொள்ளலாம். மாவலத்தொருவன் – மஹாபலசாலிகளுள் அத்விதீயன் என்கை. வெள்ளிமலை பறித்த பெருவீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்தவனிறே வாலி. அன்னவனுடைய உடல் அழியுமாறு வில்லை வளைத்தவன் இராமன். ஸுக்ரீவன் இராமபிரானோடு ஸ்நேஹஞ் செய்துகொண்டு அவனது நியமனத்தினால் கிஷ்கிந்தைக்குச் சென்று வீரநாதஞ்செய்ய, அதைக் கேட்டு வாலி பொறுக்கமாட்டாதவனாய் வெளிக்கிளம்பிவந்து ஸுக்ரீவனோடு யுத்தஞ் செய்யத் தொடங்க, அப்போது இராமன் அவ்விருவரில் இன்னான் ஸுக்ரீவன், இன்னான் வாலி யென்று வாசிகண்டறியாமையால் அம்பு எய்யா தொழியவே, ஸுக்ரீவன் வாலியிடத்துப் பராஜயப்பட்டு வேதனை பொறுக்க மாட்டாமல் ரிச்யமூக பர்வதத்துக்கே மீண்டு ஓடிவந்துசேர, இராமன் அம்பு எய்யாத காரணங்கூறி இப்போது உனக்கு ஓர் அடையாளமிடுகிறேன்; மறு படியும் வாலியை யுத்தத்துக்கு அழை’ என்று சொல்லி அவன் கழுத்தில் ஒரு பூமாலையைச் சுற்றிக் கிஷ்கிந்தைக்குப் போகவிட, ஸுக்ரீவன் சென்று முன்போலவே வீரநாதஞ்செய்ய, அதைக்கேட்டு வாலி போர்க்குப் புறப்பட அப்போது அவன் மனைவியாகிய தாரை ‘ஓ பிராணநாதா! சற்று முன்பு அடிபட்டு ஓடினவன் திரும்பி இப்போதே சண்டைக்கு அழைக்கின்றமையால் இது வெறுமனன்று; ஏதோ ஒரு பெருத்த ஸஹாயத்தை அண்டைகொண்டு வந்திருக்கவேணும்; நீ இப்போது திடீரென்று போர்க்குப்போவது தகுதியல்ல’ என்று சொல்லித் தடுத்தவளவிலும் அவள் வார்த்தயைச் செவியிலுங் கொள்ளாமல் சடக்கெனப் புறப்பட்டுவந்து ஸுக்ரீவனுடன் பிணங்கினான். அந்த வாலிஸுக்ரீவர்களிருவரும் ஒருவர்க்கொருவர் கீழேதள்ளுவது மேலே பாய்வது கட்டிக்கொண்டு நெருக்குவது கடிப்பது குத்துவது அடிப்பதாய் வலிதான யுத்தஞ் செய்யுங்காலத்தில், இராகவன் ஒரு மரத்தடியில் மறைந்திருந்து வாலியைப் பாணத்தினாலடித்தார். அந்த பாணத்தினால் வாலி மார்பு பிளந்து கீழே விழுந்து விட்டான். இதைத் தாரை கேள்விப்பட்டு அங்கதனென்னும் புத்திரனுடன் கூட ஓடிவந்து வாலியைத்தழுவிக்கொண்டு பலவாறு புலம்பி, பிறகு எதிரில் நின்ற இராமனைப் பார்த்து அவருடைய மஹாபுருவ லக்ஷணங்களைக்கண்டு இவர் ஸாக்ஷாத் பரமாத்மாவென்று நிச்சயித்துத் துதித்தனள். வாலியும் இராமனோடு வாதாடிப் பல ஸ்மாதானங்கள் சொல்லக் கேட்டு நன்மதிபெற்றுக் கைகூப்பி இராகவனைத் தொழுது ‘ஸுக்ரீவனைப் போல் அங்கதனையும் நோக்கிக்கொள்ள வேணும்’ என்று பிரார்த்தித்து விட்டு ப்ராணனையும் விட்டான்.

இராமன் வாலியைக் கொன்றவிதனில் ஸாமந்யர் சில ஆக்ஷேபங்கள் கூறுவதுண்டு; அவையும் அவற்றுக்கு ஸமாதானங்களும் வருமாறு:- இராவண வதத்திற்கு உதவி தேடுகிற இராமன் இராவணனை எளிதில் வெல்லவல்ல வாலியைக் கொன்றுவிட்டு, பயங்கொள்ளியான ஸுக்ரீவனை உதவிசெய்து கொண்டது என்ன புத்திசாலித்தனம்! என்று சிலர் சங்கிப்பர்கள்; கேண்மின்:-வாலி முன்னமே இராவணனுடன் அக்நிஸாக்ஷிகமாக ஸ்நேஹங்கொண்டிருந்தமை பற்றி, அவனைத் தான் உதவி கொண்டால் இராவணன் முதலிய துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமையால் இராமன் ஸுக்ரீவனை நண்பனாகக் கொண்டு அவன் வேண்டுகோளின்படி வாலியை வதைத்திட்டனன். இனிச் செய்ய வேண்டிய ராவண ஸம்ஹாரமாகிற தேவகாரியத்திற்கு இவ்வாலிவதம் அங்கமெனக் கருதத்தக்கது; எவ்வகைப் பெருந்தீங்கு செய்திருந்தாலும் சரணமடைந்தால் அவர்களைப் பாதுகாப்பதென்ற சிறந்த தருமத்தை மேற்கொண்டு நடப்பவனான இராமபிரான், அத்தருமத்தை முழுதும் விட்டு ஸுக்ரீவன் சரணமடைந்த பின்னரும் அவனை மிக வருந்திக் கொல்லத்தொடங்கி அந்தத் தருமத்திற்கு எதிரானமைபற்றி வாலியைக் கொல்லலாயிற்று. அன்றியும், பிறர் மனைவியைக் காதலித்துக் கவர்தலும், தம்பியினிடம் பகைபாராட்டுதலும், வலியழிந்து புறங்கொடுத்து ஓடுகின் றவனைத் துரத்தித் துரத்திக் கொல்லத் தொடங்குதலும் முதலிய தீச்செயல்கள் வாலியினிடம் இருந்ததனாலும் பரம தார்மிகனான இராமன் வாலியை அழிக்கலானான், இராமபிரான்றான் ஏகபத்நீவிரதமுடையுவனாய், தம்பியரைத் தன்னுயிர்போலக் கொள்பவனாய், வலியிழந்த பகைவனை ‘இன்று போய் நாளை வா’ என்று அன்போடு சொல்லிவிடுத்தருளும் மஹா வீரனாவான்.

இஃதெல்லாமிருக்கட்டும்; மறைந்து நின்று அம்பு எய்தது கூடுமோ? எனின்; இது அரசர் கொடிய விலங்குகளைப் பதுங்கிநின்று அழிக்கும் வேட்டை முறைமையாலென்பர்.” యద్వా మృగం మృగయువన్మృగయాప ధేన ఛన్నో జఘస్థ నతు శత్రువదాభిముఖ్యాత్ |

తద్యుక్తమేవ తవ రాఘవవంశజస్య తిర్యక్షు నైవహి విషకుతయోపచారు. ” என்று அதிமா நுஷஸ்தவத்தில் ஆழ்வானருளிச்செய்ததுங் காண்க.

வேறுவகையான ஸமாதானங்களுமுள்ளன ;- முதலில் சரணமடைந்த ஸுக்ரீவனுக்கு அபயமளித்து வாலியைக் கொல்வதாக வாக்குதத்தஞ்செய்து விட்ட பெருமாள் பின்னர் வாலியினெதிரில் நின்று போர் செய்தால் இப்பெருமானது திறத்தைக்கண்டு அஞ்சி வாலியும் அவனைச் சரணமடைந்திடுவனாயின் தஞ்ச மடைந்தவனைக் கொலை செய்யக்கூடாமைபற்றி அவனைக் கொல்லாதுவிட நேர்ந்தால் முன்னைய வாக்குத் தவறிவிடுமேயென்ற நோக்கம் முக்கிய காரணமாம். அன்றியும், எதிர்ந்தார் வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வாலி சிவபிரானிடத்துப் பெற்றிருக்கின்ற வரம் பழுதுபடாமலிருக்குமாறு மறைந்து நின்று அம்பெய்தனன் என்றலுமொன்று ; அவரவர்கள் தேவதாந்தரங்களிடத்துப் பெற்ற வரங்கள் பழுதுபடாதபடியன்றோ எம்பெருமான் காரியஞ்செய்வது. இங்ஙனம் பல காரணங்களுள. இங்கு விரிப்பிற் பெருகும். ஸ்ரீராமாயணம் அதன் வியாக்கியானங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்க. கடவுளரது நியாயம் நுட்பமானதும் அறிதற்கு அரியதுமாதலால் அது மனிதரது நியாயத்தோடு ஒப்புநோக்கி ஆராய்தற்கு உரிய தன்றென்பது உணரத்தக்கது. நிற்க.

அன்று வாலியைக் கொன்றவன் இன்று நீரும் நிழலும் மரமும் மணமுங் கண்டு உகந் திருந்து நித்யஸம்ஸாரிகளுக்கெல்லாம் காட்சி கொடுத்துக்கொண்டி ருக்கிறவிடமான ஹிமவானில்.–இந்த ஏழாம் வேற்றுமை நான்காமடியில் பிரிதியில் அந்வயிக்கும். இமயமலையின்கணுள்ள பிரிதியைச் சென்று அடை என்றபடி.

பின்னடிகளில் பிரிதியை வருணிக்கின்றார். மேலுள்ள பாசுரங்களிலும் இவ்வாறே காண்க. மேகங்களானவை சிறு துளிகளைப் பெய்து கொண்டு அதிரா நிற்க அம்முழக்கத்தைக் கேட்ட மயில்களானவை மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக மலையினுச்சிமீது ஏறிக்கொண்டு கூத்தாடுகின்றனவாம்; அப்படிப்பட் டதும் பெரிய சுனைகளையுடையதுமான பிரிதியைச் சென்று சேர்’ என்று தம் திருவுள்ளத்துக்கு உரைத்தாராயிற்று,

ஆலி என்று சிறு துளிக்குப் பெயர். ”மாமுகில் அதிர்தர மாமயில் நடஞ் செயும் ” என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செயல்;-“வாத்யங்கள் வாய்த்தால் கூத்தாடுவாருடம்பு பேசாதிராதிறே. காலுக்கீடாக வாய்த்தவாறே ஆடுவாரைப்போலே அவை முழங்க இவை ஆடாநிற்குமாயிற்று. ”

அருவரை அகடுற முகடேறி =கீழ்வயிறானது மலையிலே தழுவ, கொடுமுடி யின் மீதேறி – என்கிறவிதற்குக் கருத்து யாதெனில், பீலிமா மயில்களாகையாலே தோகையின் கனத்தாலே பறந்து சென்று ஏறமாட்டாமல் மெல்லத் தவழ்ந்து சென்று ஏறுகிறபடியைக் கூறியவாறு.

அஃறிணைப் பொருள்களும் ஆநந்தமாக வாழும் திவ்ய தேசத்திலே உயர் திணைப்பொருளான நீ போய்க் களித்து வாழவேண்டாவோ நெஞ்சே! என்ற கருத்துக் காண்க. … … …

English Translation

Vali, mighty strong fell to the arrow of the bow-wielding Lord in the yore, Bees resounding in the fragrance-wafting groves of the Resident of Himavan peaks, Dark big laden clouds rumble in the sky over lakes of the mountain high. Where the dancing peacock caresses the belly over Piriti, –O, Go to, my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top