(957)

(957)

மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,

செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,

துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,

நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.

 

பதவுரை

மஞ்சு உலாம் சோலை வண்டு

மேகங்கள் உலாவுகின்ற சோலைகளையுடையதும்

வண்டுஅறை மா நீர்

வண்டுகள் படிந்து ஒலிசெய்கின்ற சிறந்த தீர்த்தத்தை யுடையதுமான

மங்கையார்

திருமங்கையென்னும் நாட்டிலே உள்ளவர்கட்குத் தலைவரும்

வாள்

வாளை உடையவருமான

கலிகன்றி

திருமங்கையாழ்வார்

செம் சொலால் எடுத்த

செவ்விய சொற்களைக்கொண்டு அருளிச்செய்த

தெய்வம்

திவ்யமான

நல்மாலை இவை

இந்த நல்ல சொல் மாலையை

சிக்கென கொண்டு

நாவிலே த்ருடமாகக்கொண்டு

தொண்டீர்

பாகவதர்காள்!

துஞ்சும் போது அழைமின்

சரீரம் முடியுங் காலத்தில் இத்திருநாமங்களைச் சொல்லுங்கோள்;

துயர்வரில் நினைமின்

மற்றும் துக்கங்களுண்டான போதும் இவற்றையே நினையுங்கோள்;

துயர்இலீர் சொல்லிலும் நன்று ஆம்

துக்கமொன்று மில்லாதவர்கள் இவற்றை அநுஸத்தித்தாலும் நன்மையாகும்;

நாராயணா என்னும் நாமம்

நாராயண நாமமானது

நம்முடை வினைக்கு

நமது பாபங்களை முடிப்பதற்கு

நஞ்சு தான் கண்டிர்

விஷமேயாமென்பது தின்ணம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *- (மஞ்சுலாஞ்சோலை.) இது திருநாமப்பாட்டு எனப்படும். கலியன் சொன்ன இப்பாசுரங்கள் வழியாக நாராயணா வென்னும் நாமத்தை எப்போதும் அநுஸந்தியுங்கள்; பாவங்களெல்லாம் பறந்தோடிப்போம் – என்று தலைக்கட்டுகிறார்.

மஞ்சுலாஞ்சோலை யென்பதும் வண்டறைமாநீர் என்பதும் மங்கைக்கு அடைமொழிகள் . மேகங்கள் படிந்து உலாவும்படியான உயர்த்தியையுடைய சோலைகளையுடைத்தாய், வண்டுகள் மொய்க்கின்ற நீர்ப்பெருக்கையுமுடைத்தான மங்கை என்கை. அன்றியே, மஞ்சுலாஞ்சோலைகளிலே உள்ள வண்டுகள் வந்து மொய்க்கின்ற நீர்ப்பெருக்கையுடைய மங்கை என்னவுமாம். வண்டறைமாநீர் எனவே தீர்த்தங்கள் மதுவோடு கூடிப் பெருகு மென்க. மதுவில் நசையாலேயாம் வண்டுகள் வந்து மொய்ப்பது. *“ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து , ஊக்கமேமிகுந்து உள் தெளிவின்றியே, தேக்கெறிந்து வருதலிற் றீம்புனல், வாக்கு தேனுகர் மாக்களை மானுமே.” என்றதை நோக்குக.

நீர்வளம் பொருந்திய திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவராய் வாளை நிரூபகமாக கொண்டவரான கலியன் வேதார்த்தங்கள் எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லாலே அருளிச் செய்ததாய், திவ்யமான மாலைபோலே பரமபோக்யமாக அநுபவிக்கத் தக்கதான இத்திருமொழியைக் கொண்டு,

பகவத் பக்தராயுள்ளவர்களே! சரீரம் முடியும்போது யமபடர்களால் நேரிடக் கூடிய துன்பங்களுக்குப் பரிஹாரமாகவும், மற்றும் தாபத்ரயங்கள் வந்து மேலிடும் போது அவற்றுக்குப் பரிஹாரமாகவும் இத்திருநாமத்தையே வாய் வெருவியிருக்கக் கடவீர்கள். துயரங்களுக்குப் பரிஹாரமாகவேதான் இதனைச் சொல்ல வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை; ஒரு துயரும் இல்லாவிடினும் ஸ்வயம்ப்ரயோஜநமாக அநுஸந்திக்கத்தகும். “எனக்கென்றும் தேனும் பாலுமமுதுமாய திருமால் திருநாமம் – நமோ நாராயணமே” என்று நமக்கு அமுதாகிய இதுதானே கொடுவினைகட்குக் கொடிய விஷமாயிருக்கும்; ஆகையாலே, இத்திருமந்திரந்தவிர மற்றதெல்லாம் ஸம்ஸாரத்திலே வேர் பற்றுகைக்கு உறுப்பாயிருக்குமென்றும், இஃதொன்றுமே ஸம்ஸாரத்தை வேரறுக்கவல்லது என்றும் தெளிந்து கொண்டு எப்போதும் இதனை அநுஸந்திப்பதிலேயே ஊன்றியிருங்கள் என்று அன்பர்க்கு உபதேசித்துத் தலைக்கட்டினாராயிற்று……


இத்திருமொழி – எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் (௰)

அடிவரவு:–வாடினேன் ஆவியே சேமம் வென்றி கள்வனேன் எம்பிரான்இற்பிறப்பு கற்றிலேன் குலம் மஞ்சு வாலி.

English Translation

Monsoon-filled tanks with gardens of nectar, –bumble bees hovering in Mangai, –Kalikanri sang this decad of pure songs, with words of choicest delight pure. Call when you go to sleep, recall in distress, distress will flee, the song will remain, Medicine for all ills, come O Devotees, Narayana is the good name.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top