(956)

(956)

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,

வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,

நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

பதவுரை

நாராயணா என்னும் நாமம்

நாராயண நாமமானது (தன்னை அநுஸந்திக்கு மவர்கட்கு)
குலம் தரும்

உயர்ந்த குலத்தைக் கொடுக்கும்;
செல்வம் தந்திடும்

ஐச்வரியத்தை அளிக்கும்;
அடியார் படு துயர்ஆயினஎல்லாம்

அடியவர்கள் அனுபவிக்கிறதுக்கமென்று பேர்பெற்றவையெல்லாவற்றையும்
நிலம் தரம் செய்யும்

தரை மட்டமாக்கிவிடும்
நீள் விசும்பு அருளும்

பரமபதத்தைக் கொடுக்கும்:
அருளொடு

எம்பெருமானுடைய கிருபையையும்
பெரு நிலம்

கைங்கரியமாகிற மஹாபதவியையும்
அளிக்கும்

உண்டாக்கும்;
வலம் தரும்

(பகவதநுபவத்துக்குப் பாங்கான) சக்தியைக் கொடுக்கும்;
மற்றும்

இன்னமும் வேண்டிய நன்மைகளை யெல்லாம்
தந்திடும்

செய்து கொடுக்கும்;
பெற்ற தாயினும்

பெற்று வளர்க்கும் தாயைக் காட்டிலும்
ஆயின செய்யும்

ஹிதங்களைச் செய்து கொடுக்கும்;  (ஆக இப்படி)
நலம் தரும் சொல்லை நான்

வேண்டிய நன்மைகளைத்தருமதான நாராயண நாமத்தை
கண்டு கொண்டேன்

அடியேன் லபிக்கப் பெற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

** *- (குலந்தரும்) “நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் ” என்று பலகால் அருளிச் செய்கின்ற ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘நீர் ஆதரித்துப் போருகிற இத்திருநாமம் என்ன பலனைத் தரக்கூடியது?’ என்று கேட்க, இது தரமாட்டாத பலனே உலகில் இல்லை யென்கிறார்.

”தொண்டக்குலத்திலுள்ளீர் ! வந்தடி தொழுது ஆயிரநாமஞ் சொல்லிப் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே ” என்றபடி எம்பெருமானுடையவையான விச்வம் விஷ்ணு வஷட்கார இத்யாதி திருநாமங்களைச் சொன்னாலே பழைய இழிகுலம் நீங்கிப் புதியதோர் சிறந்த குலம் உண்டாகுமென்றால், நாராயணா வென்னும் நாமம் நற்குலத்தைத் தருமென்பதில் என்ன ஸந்தேஹம்? இத்தால்- ஒருவன் நற்குலமுடையோனென்பதற்கு பகவத் ஸம்பந்தம் காரணமேயொழிய பிராமண யோனிப் பிறப்பு முதலியன காரணமல்ல என்றதாயிற்று. இங்கே உரைக்க வேண்டுமவற்றையெல்லாம் ஸம்ப்ரதாய ஸித்தாஞ்ஜனத்திலே விரித்துரைத்தோம்.

செல்வம் தந்திடும் = ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியைத் தருமென்றபடி. இலங்கைச் செல்வமனைத்தையும் விட்டிட்டுப் புகலற்று வானத்திலே வந்து நின்ற விபீஷ ணாழ்வானை (அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்) என்றார் வால் மீகி முனிவர். அப்போது அவ்விபீஷணரிடத்து இருந்த ஸ்ரீயாவது ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயேயாம். இராமபிரான் பின்னே காட்டுக்குப் புறப்பட்ட இளையபெருமாள் (லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:) எனப்பட்டார்; அப்போது லக்ஷ்மணனுக்கிருந்த லக்ஷ்மியாவது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியே யாம். முதலையின் வாயிலே அகப்பட்டுத்துடியாநின்ற கஜேந்திராழ்வான் (ஸது நாகவர: ஸ்ரீமாந்) என்னப்பட்டான் ; அப்போது கஜேந்திராழ்வானுக்கிருந்த ஸ்ரீயாவது ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயேயாம்.

செல்வம் என்பதற்கு இங்ஙனே பொருள் சொல்லுகையல்லாமல், உலகத்தார் புருஷார்த்தமாக நினைக்கிற ஐச்வர்யத்தையே அர்த்தமாகச் சொல்வது முண்டு. சிறந்த ஐச்வரியத்தைத் தருமென்கை. ”நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் றன்னையே தான் வேண்டுஞ் செல்வம் ” என்ற பெருமாள் திருமொழிப் பாசுரங்காண்க.

அடியார் படுதுயராயின வெல்லாம் நிலந்தரஞ் செய்யும் – ப்ராயச்சித்தங் களாலே தொலைந்து போகக்கூடிய பாபங்கள் பலவுண்டு ; அவையல்லாமல் கட்டாயமாக அநுபவித்தே தீரவேண்டிய பாவங்களும் பலவுண்டு; அவற்றை இங்கே படுதுயர் என்கிறார்; படுதல் – அநுபவித்தல்; அநுபவித்தே தீர வேண்டிய துயர் என்றவாறு. அப்படிப்பட்ட துயரங்கள் எத்தனையிருந்தாலும் அடியவர் திறத்தில் அவை ஒன்றுமில்லாமே போம். துயராயின எல்லாம் = துயரென்று பேர் பெற்ற எல்லாவற்றையும்; நிலம்தரம் செய்யும் = தரை மட்டமாக ஆக்கி விடும்; சூந்யமாக்கிவிடும் என்கை. மற்றொருவகையாகவும் பொருள் கூறலாம்; அதாவது – தரணம் என்கிற வடசொல் கடைக்குறைப் பட்டுத் தரமென்று கிடப்பதாகக் கொண்டு (தரணமாவது விலகிப்போதல்) துயர்களை இடம் விட்டு விலகிப்போம்படி செய்யும் என்கை. ”வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ , கானோ ஒருங்கிற்றுங் கண்டிலமால்” (பெரிய திருவந்தாதி -) என்று போனவிடம் தெரியாதபடி பறந்தோடிப் போய்விடு மென்றவாறு.

நீள்விசும்பருளும் = துயரங்களைப் போக்குகை மாத்திரமல்ல; ஒப்பற்ற ஆந்தமயமான ஸ்தானத்தையும் (மோக்ஷபதவியையும்) தருமென்கை

அருளொடு பெருநிலமளிக்கும் = அருளையும் பெருநிலத்தையும் அளிக்கும் என்கை. அருளையளிக்கையாவது – எம்பெருமானுடைய கிருபைக்கு விஷய மாக்குகை. இனி, பெரு நிலமளிக்கையாவதென்? கீழே சொல்லப்பட்ட நீள் விசும்பென்ற பரமபதத்திற் காட்டிலும் வேறுபட்டவொரு பெருநிலமுண்டோ? என்னில் ; பரமபதஞ்சென்ற பின்பும் அங்கே குணாநுபவம் பண்ணுகையென்றும் கைங்கரியம் செய்கையென்றும் இரண்டு படிகள் உண்டே ; அவற்றுள் கைங்கரியஞ் செய்யப் பெறுகையைப் பெருநிலமென்கிறது இங்கு.

வலம் தரும் = బలమ్ (பலம்) என்ற வட சொல் வலமெனத்திரியும் ; பலமாவது சக்தி; நித்யஸூரிகளைப் போல இடைவிடாது பகவதநுபவம் பண்ணுகைக்குப் பாங்கான வலிமையை உண்டாக்கும் என்றபடி. “அருளொடு பெரு நிலமளிக்கும் வலந்தரும்” என்று சேர்த்து யோஜிப்பது முண்டு; அப்போது அளிக்கும் என்றவிது வினைமுற்று அல்ல ; வலத்துக்கு அடைமொழி. கருத்து யாதெனில், நாராயணாவென்னும் நாமத்தை யார் சொல்லுகிறார்களோ அவர்கள் தாங்கள் பரமபதத்தைப்பெறுகிற மாத்திரமல்லாமல் பிறர்க்கும் அருள் கூர்ந்து பரமபதமளிக்க வல்லாராம்படியான சக்தியைத் தருமென்பதாம்.

மற்றும் தந்திடும் = இவனுக்கு ஹிதமாய் இவனறியாதவற்றையும் தானே கொடுக்கு மென்கை.

பெற்றதாயினும் ஆயின செய்யும் = பல சொல்லுவதேன்? பத்து மாதஞ்சுமந்து மெய் நொந்து பெற்ற தாயானவள் செய்யும் நன்மைகளிற் காட்டிலும் அதிகமாகச் செய்யுமென்கிறார். ஆக இப்பாட்டால்,(நமோ நாராயணாயேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த ஸாதக:) என்றதை விவரித்தாராயிற்று…………………………………………………………………………..……….(௯)

English Translation

It gives a good life, of wealth and family, and rages to ground all travails, facing devotees, then grants the rule of the Sky and Earth with benign grace. It gives a man strength, and all that there is, with love that exceeds a mother’s. It gives the pure good, I know the Mantra, Narayana is the good name.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top