(3274)
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குரு கூர்ச்சட கோபன்,
சொல்வினை யால்சொன்ன பாடல் ஆயிரத் துள்ளிவை பத்தும்,
நல்வினை யென்றுகற் பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி,
தொல்வினை தீரவெல் லாரும் தொழுதெழ வீற்றிருப் பாரே.
பதவுரை
| வல்வினை |
– |
ஸகல பாபங்களையும் |
| தீர்க்கும் கண்ணனை |
– |
போக்குமியல்வினனான க்ருஷ்ணனை |
| வண் குருகூர் சடகோபன் |
– |
வளப்பமுடைய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் |
| சொல் வினையால் |
– |
சொல்லுந் தொழில் வன்மையால் |
| சொன்ன பாடல் |
– |
அருளிச் செய்த பாட்டுக்கள் |
| ஆயிரத்துள் இவை பத்தும் |
– |
ஆயிரத்துள் இவை பத்துப்பாட்டுக்களையும் |
| நல் வினை என்று கற்பார்கள் |
– |
இது நல்ல செய்கை என்று கருதிக் கற்குமவர்கள் |
| நலன் உடை |
– |
(பகவதநுபவமாகிற) ஆனந்தத்தை யுடைத்தான |
| வைகுந்தம் நண்ணி |
– |
பரமபதத்தைக் கிட்டி |
| தொல்வினை தீர |
– |
அநாதியான பாபங்கள் மறுவிலடாதபடி ஒழிய |
| எல்லாரும் தொழுது எழ |
– |
பெரியகிளர்த்தியை யுடையராம்படியாக |
| வீற்றிருப்பார் |
– |
இருக்கப்பெறுவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருவாய்மொழி கற்பவர்கள் எல்லாத்துன்பங்களும் தொலையப்பெற்றுத் திருநாட்டிலே நித்யஸூரிகள் ஆதரிக்கும்படியான பெருமைபெற்று மகிழ்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
கீழ்ப்பாட்டிற் கூறியபடி ஆழ்வார்க்கு ஆற்றாமை மீதூர்ந்தாவறே இனி யிவரை இங்ஙனே துடிக்கவிட வொண்ணாதென்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமான் பதறி ஓடிவந்து ஸேவை ஸாதித்து இவருடைய துயரங்களைப் போக்கியருளினானென்பது விளங்க வல்வினை தீர்க்குங் கண்ணனை யென்கிறார். இங்கு நம்பிள்ளை யீட்டில்-“பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்களே’ என்றுள்ள ஸ்ரீஸூக்தி மிகவும் ரஸிக்கத்தக்கது. கீழ்ப்பாட்டில் “மயற்பெருங்காதலென் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே” என்று தாய் சொல்லித் தலைக்கட்டுகையாலே பெற்றவர்கள் கைவிட்டமை விளங்கிற்று. உடனே “வல்வினை தீர்க்குங் கண்ணனை” என்கையாலே பிடித்தவர்கள் கைவிட்டிலாமை விளங்கிற்று. பிடித்தவர்கள் என்றது-பரகத ஸ்வீகாரமாகப்பற்றின எம்பெருமான என்றபடி.
“வண் குருகூர்ச் சடகோபன்” என்றவிடத்து வண்மையைக் குருகூர்க்கு விசேஷணமாக்கியுரைத்தார்; பன்னீராயிரத்தில்; சடகோபனுக்கு விசேடணமாக்கியருளினர் மற்ற பேராசிரியர்கள். உதாரரான ஆழ்வார் என்றபடி. இன்றுநாமுங்கூட பகவத்குணாநுபவம் பண்ணுகைக்குப் பாங்காகப் பாசுரம்பாடிவைத்த ஔதார்யத்தை என்னென்போம்.!
சொல்வினையால் சொன்னபாடல் என்றது-வாசிக கைங்கர்யமாகப்பாடின பாசுரம் என்றபடி. நல்வினை என்று கற்பார்கள்-இப்பாசுரங்களில் இனிமை நெஞ்சிலே பட்டால் இவற்றையொழிய வேறொன்றால் போதுபோக்கவரிது; அப்படி இனிமையிலே தோற்றுக் கற்காவிடினும் ‘இது நமக்கு நன்மை பயக்குமது’ என்று கொண்டாகிலும் கற்பவர்கள் என்றபடி.
தொல்வினைதீர நலனிடை வைகுந்தம் நண்ணி” என்று அந்வயிப்பது. ‘நலனிடை, நலனுடை” என்று இருவகையான பாடம் காண்கிறது. பொருள் ஓங்கும். ஆனந்த ப்ரசுரமான வென்றபடி. எல்லாரும் தொழுதெழ வீற்றிருப்பார்-இப்பாசுரம் பயின்றவர்கள் பரமபதத்தேறச் சென்றால் அங்குள்ள நித்யமுக்தர்கள் இவர்களை ஆதரிக்கும் பரிசு வாசாமகோசுரம். “பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்” என்கிறபடியே மஹோபசாரங்கள் செய்யப்பெற்று முடியுடை வானராய் வீற்றிருப்பார்கள் என்கை. திருநாட்டிலுள்ளார் இவ்வருளிச்செயல்களிலே ஈடுபட்டிருக்கும்திறம் “கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்ற திவ்யஸூக்தியாலும் அறியத்தக்கது.
English Translation
This decad of the thousand songs by Kurugur satakopan is addressed to benevolent Krishna. Those who learn it as good words will end misery, enter Vaikunta, and reign worshipped by all
