(3275)
வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர்,
ஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை,
போற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்,
ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே?
பதவுரை
| வீற்றிருந்து |
– |
(பரமபதத்திலே) எழுந்தருளியிருந்து |
| ஏழ் உலகும் |
– |
எவ்வுலகங்களிலும் |
| தனி கோல் செல்ல வீவு இல் சீர் |
– |
அத்விதீயமான செங்கோல் நடக்கும்படி |
| ஆற்றல் மிக்கு ஆளும் |
– |
சாந்தியுடனே ஆள்கின்ற |
| அம்மானை |
– |
ஸ்வாமியாய் |
| வெம் மா பிளந்தான் தன்னை |
– |
கொடிய (கேசி என்னும் அசுரனான) குதிரையை வாய்பிளந்து கொன்ற பெருமானை |
| போற்றி என்றே |
– |
போற்றி போற்றி என்று வாழ்த்திக்கொண்டே |
| கைகள் ஆர தொழுது |
– |
கைகளின் விடாய் தீரும்படி அஞ்சலி பண்ணி |
| சொல் மாலைகள் |
– |
சொற்களாகிற மாலைகளை |
| ஏற்ற |
– |
(அவன் உகக்கும்படி) ஸமர்ப்பிக்கைக்கு |
| நோற்றேற்கு |
– |
புண்ணியஞ் செய்துள்ள எனக்கு |
| இனி |
– |
இனிமேல் |
| எழுமையும் |
– |
ஏழேபடியான ஜன்மங்களிலும் |
| என்ன குறை |
– |
என்ன குறையுண்டாம்! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எல்லாவுலகங்களையும் நிர்வஹிக்க வல்லவனான எம்பெருமாளை ஏத்தப்பெற்ற வெனக்கு ஒரு காலத்திலும் ஒரு குறையுமில்லை யென்கிறார்.
திருநாட்டில் திருவனந்தாழ்வான் மீது பெரியபிராட்டியாரோடுகூட எழுந்தருளியிருந்து “பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்” என்கிறபடியே உலகமெல்லாம் செங்கோல் செலுத்தி நியமிப்பவனாய், இங்ஙனம் நியமிப்பதற்குறுப்பான ஞானம் சக்திமுதலிய திருக்குணங்கள் நிரம்பப்பெற்றவனாய் தன்னுடைய ப்ரபுத்வத்தினால் கொடுங்கோன்மை காட்டாதே சாந்தியோடே யிருந்து ஆள்பவனாய், ஸ்ரீக்ருஷ்ணாய்த் திருவததரித்துக் கேசிவதம் பண்ணினவெனக்கு எற்றைக்கு மேழேம்பிறவிக்கும் ஒரு குறையில்லை யென்றாராயிற்று.
திருநாட்டில் அநுபவத்தையும் இங்கிருந்தே யநுபவிக்கப் பெற்ற நான் ‘அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறையுடை யேனல்லேன் என்றவாறு.
ஆற்றல்மிக்கு என்பதற்கு “அநுத்ரிக்த ஸ்வபாவனாய்” என்று ஆறாயிரப்படி. உபய விபுதிக்தனான செருக்காலே தன்பக்கல் சிலர்க்குக் கிட்டவொண்ணாபடி யிருக்கையல்லாமல் ஸவிநயமாக அரசுபுரிகையைச் சொன்னபடி. ஸ்ரீராமபிரான் அரசாண்டபடியைச் சொல்லுமிடத்து “……………..-ராமோ ராஜ்ய முபாஸித்வா” என்றார் வால்மீகிமுனிவர். இங்கு உபாஸித்வா என்ற ப்ரயோகம் மிகவழகியது. தன்பக்கலில் குடிமக்கள் அஞ்சுகையன்றிக்கே குடிமக்களிடத்தில் தான் அஞ்சிவர்த்திப்பன் போலும் ஸ்ரீராகவன். அப்படியேயாயிற்று எம்பெருமான் ஏழுலகும் தனிக்கோல் செலுத்தும்படி. ஆறுதல் என்கிற பொருளிலே ஆற்றல என்றிருப்பதாகக்கொள்க. அதாவது-சாந்தி. ஆற்றல் என்று மிடுக்குக்கும் போராதலால், இவ்வளவையும் ஸாமர்த்தியம் மிகுந்தவன் என்றதாகவுமாம்..
வெம்மாபிளந்தா னென்று இங்கு அருளிச் செய்ததைப்பற்றி இரண்டு வகையான நிர்வாஹமுண்டு; கீழே “ஆற்றல் மிக்காளும்” என்றதற்கு மிடுக்கோடே கூடியாளும்படியைப் பொருளாகச் சொல்லும் பகூஷித்தில் அதற்கு இந்த வெம்மா பிளந்த சரிதை த்ருஷ்டாந்தமாகக் கடவது. ‘இது உபலக்ஷணமாய் இப்படி மிடுக்குடையனாய்ச்செய்த செயல்களையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம். இது பட்டருடைய நிர்வாஹம்.
“வெம்மா பிளந்தான்” என்றதை அந்தக் காரியத்தில் நோக்காகக் கொள்ளாமல் கண்ணபிரான் என்று வ்யக்தியைக் காட்டுவதற்காகச் சொன்ன சொல்லாகக்கொண்டு, ஆற்றல்மிக்காளுமவன் யாவனென்றால் கண்ணபிரான்=என்று காட்டுவதாகக்கொள்க. ஆற்றல் என்பதற்கு ‘சாந்தி’ என்னும் பொருளில் இந்த நிர்வாஹம். சாந்தியோடே ஆளுந்தன்மை ஸ்ரீ பிரானிடத்திலு மிருந்தாலும் கண்ணபிரானிடத்தில் இது செவ்வனே காணத்தக்கதாம். பிறந்தவன்றே கம்ஸனைக்கொன்று முடிக்க வல்லமையிருந்தும் நெடுநாள் ஒளித்து வளர்ந்ததும், அடியவர்களுக்கு இழிதொழில் செய்து திரிந்ததும் முதலானவை காண்க. இது அம்மங்கியம்மாளுடைய நிர்வாஹம்.
English Translation
My Lord who tore the horse kesin’s jaws sits in command over the seven worlds in eternal good, and rules patiently. He wears on his crown the garland of poems that I have sung in joy, praising him with folded hands. Now what do I lack for seven lives?
