(3254)

(3254)

பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,

வாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே,

தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே,

ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே.

 

பதவுரை

ஈசன்

ஸர்வேச்வரனாயும்

ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை

(ஒரு காலத்தில்) உலகங்களையுண்டு (மற்றொரு காலத்திலே) வெளிப்படுத்தின ஸ்வாமியும்

ஏகமூர்த்திக்கு

ஒப்பற்ற திவ்யமங்கள் விக்ரஹத்தையுடையனாயுமிருக்கிற பெருமானுக்கு

பூகம் சாந்து

பூசுவதற்குரிய சந்தனம்

என் நெஞ்சமே

என் மனமேயாகும்;

புனையும் கண்ணி

அணிந்து கொள்ளுதற்கு உரிய மாலை

எனதுடைய

என்னுடைய

வாசகம் செய் மாலை

வாக்கினால் தொடுக்கப்படுகிற் சொல்மாலையேயாம்;

வான் பட்டு ஆடையும்

சிறந்த திருப்பரி வட்டமும்

அஃதே

அந்தர் சொல்மாலையேயாம்;

தேசம் ஆன

தேஜஸ்கரமான

அணி கலனும்

அணியப்படும் ஆபரணமும்

என் கை கூப்பு செய்கை ஏ

எனது அஞ்சலிபந்தமேயாம்;

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தமது மனமொழி மெய்களாகிற முக்கரணங்களும் எம்பெருமானுக்குப் பரம யோக்யமாகின்றமையை வியந்து கூறுகின்றார்.  எம்பெருமானது திருமேனியின் வைலக்ஷண்யத்தையும், அவன்றனக்குத் தம்மிடத்து உண்டான விருப்பத்தையும் சிந்தனை செய்து, முன் சொன்னதையே மீண்டும் வாய்வெருவுகிறபடி.

எனதுடைய வாசகஞ்செய்மாலையே புனையுங்கண்ணி  எம்பெருமான் பூமாலைகள் அணிந்துகொண்டால் என்ன ஔஜ்ஜ்வல்யமிருக்குமோ அது தமது சொல்மாலைகளை ஏற்றுக் கொண்டதனால் இருக்கின்றதென்றபடி.

வான்பட்டாடையும் அஃதே  தமது அருளிச்செயலே எம்பெருமானுக்குப் பீதாம் பரமென்கிறார். அழகிய வஸ்த்ரமில்லாதவனுக்கு உலகில் மதிப்பு ஏற்படுவதில்லை; எம் பெருமானுக்கு ஆழ்வாரருளிச் செயல் இல்லையாகில் மதிப்பு ஏற்படாதென்பது உய்த்துணரத்தக்கது.  இங்கே நம்பிள்ளையீடு காண்மின்;-“ஆழ்வாருடைய உக்திதானே அவனுக்கு சோபாவஹதமான பரிவட்டமும்.  இவருடைய பா நல்ல நூலாகையாலே வான் பட்டாடையாயிற்றுக்காணும். ‘நல்ல நூலாகவேணும்’ என்று அடியிலே நோற்று நூற்றவரிறே.”

என்கைகூப்புச்செய்கையே தேசமானவணிகலனும்  ஆழ்வார்தம் ஓர் அஞ்ஜலி பண்ணினால் அதுதன்னால் எம் பெருமான் தன்னை ஸர்வபரண பூஷிதனாகக் கருதுகிறான் போலும்.  அஞ்ஜலி என்பதற்கு “அம் ஜலபதி” என்று வ்யுத்பத்தி கூறுவர்; அகாரவச்யனான எம்பெருமானை நீர்ப்பண்டமாக உருக்குவது என்றபடி. “நின்தலையைத் தாழத்து இருகை கூப்பென்றால் கூப்பாது பாழ்த்த விதி” என்கிறபடியே ஓர் அஞ்ஜலிமாத்திரமும் அரிதான இந்நிலத்தில் அது கிடைக்கப் பெற்றால் எம்பெருமான் மிக்க புகர்பெற்று விளங்குவனென்பதில் ஐயமில்லை.

ஸர்வேச்வரானாயும், ஜகத்துக்கு ஸர்வப்ரகார ரக்ஷகனாயும், அந்தத் தன்மையினால் என்னை யீடுபடுத்திக் கொண்டவனாயும் அத்விதீயமான திருமேனியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான் இப்படியெல்லாம் திருவுள்ளம் பற்றுவதே! என்பது ஈற்றடியின்  கருத்து.

 

English Translation

For my Lord, -who swallowed the Universe, then made it, -my heart is the Sandal paste, my poem is a fitting garland and also his radiant vestment.  My folded hands are his big radiant jewels

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top