(2614)

(2614)

இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய

செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே

மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண்

டடியெடுப்ப தன்றோ அழகு?

 

பதவுரை

இங்கு

என்னுடைய இந்த நெஞ்சில்

பண்டுபோல்

இத்தனை நாளும் போலே

என்னுடைய செம் கண் மால்

என்மேல் வாத்ஸல்யத்தாலே வெந்த திருக்கண்களையுடையனான பெருமானுடைய

சீர்க்கும்

கல்யாண குணங்களுக்கே

உள்ளம் சிறிது

எனது நெஞ்சு இடம்போராத தாயிருக்கின்றது.

அங்கே

முன்பு விசாலமாக வாழ்ந்தவிடத்திலே

வீற்றிருத்தல் இல்லை

(பாவங்கள் இனி) தங்கியிருக்க முடியாது (ஏனென்றால்)

வல்வினையார் தாம்

கொடிய பாவங்கள்

மடி அடக்கி நிற்பதனில்

துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதைவிட

ஈண்டு

இவ்விடத்தில் நின்றும்.

அடி எடுப்பது அன்றோ அழகு

கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.

 

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இங்கில்லைபண்டுபோல்) கீழ்ப்பாட்டில் “எனக்கெளிய னெம்பெருமானிங்கு” என்று எம்பெருமானுடைய ஸௌல்ப்யகுணத்தை அநுஸநதித்தார்; அந்த குணாநுபவம் வர வர அதிகரித்துத் திருவுள்ளத்தில் தாங்கமுடியாதபடி விஞ்சிற்று; விஞ்சவே, அந்த ஆநந்தத்தினால் பாவங்களைக் குறித்துப் பேசுகின்றார். ஓ பாவங்களே! பகவத்குணாநுபவத்திற்கே என் நெஞ்சில் இடம் போரவில்லை; அதற்கே இன்னும் இடம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது; அப்படியிருக்கும்போது உங்களுக்கு இங்கே இடம் ஏது?; ஒரு மூலையில் சுருங்கிக்கொண்டு கிடக்கிறோமென்று நீங்கள் சொல்லக்கூடும்; அப்படி வருத்தப்பட்டுக்கொண்டு இங்கு இருக்கவேண்டா; விசாலமாகக் கிடப்பதற்குரிய வேறிடந் தேடி ஓடிப்போங்கள் என்கிறார்.

பண்டுபோல் வீற்றிருந்தால் இங்கில்லை = பாவங்களே! இதுவரையில் நீங்கள் என்னுடைய நெஞ்சை உங்களுக்கு வாஸஸ்தானமாக ஆக்கிரமித்துக் கொண்டு உங்களுடைய பெருமையெல்லாந் தோற்ற விசாலமாகக் கிடந்தீர்கள்; நான் பக்வத் விஷயவாஸகையறியாத காலத்தில் நீங்கள் என் நெஞ்சில் குடியிருந்தீர்களத்தனை; இனி அப்படியிருக்க முடியாது; ஏனென்றால், இப்போது என்னெஞ்சு பகவத் குணாநுபவம் பண்ணத் தொடங்கிவிட்டது. *“உயர்வறவுயர் நலமுடையவன்” என்றபடி அநந்த கல்யாண குணாத்மகனான அப்பெருமானுடைய குணங்களுக்கே இங்கு இடம் அற்பமாயிருக்கும்போது உங்களுக்கு இங்கே இடம் கிடைக்க ப்ரஸக்தி எது? – என்றிப்படி ஆழ்வார் பாபராசிகளை சேதநஸமாதியாலே விளித்துச் சொன்னவாறே. அவை “ஆழ்வீர்! நெடுநாள் இங்கே பழிக்கிடந்த எங்களை இன்று இப்படி அடித்துத் துரத்தி விடலாகாது; உமது நெஞ்சில் எங்களுக்கு முன்போல் விசாலமாக இடம் கிடைக்காவிட்டாலும் ஒரு மூலையில் பதுங்கி நிற்கும்படி மிக்க சுருக்காமன இடம் கிடைத்தாலும் எங்களுக்குப் போதும்; அரைத் துணிகளை இடுக்கி நெருக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு மூலையிலே மழைக்கு ஒதுங்கி நிற்பாரைப்போலே நாங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டாகிலும் ஒரு பக்கமாகக் கிடக்கிறோம்; எங்களை விலக்காமல் இடங்கொடுத்துக் காத்தருளவேணும்” என்று பணிந்து வேண்டிக்கொள்ள, பின்னடிகளால் அதற்கு மறுமொழி கூறுகின்றார்- பெருமை தோற்ற நன்றாக வாழ்ந்தவர்கள் அப்படி வாழ முடியாமல் கஷ்டப்பட நேர்ந்த காலத்துக் கண்மறைய ஓடிப்போய்விடுவதன்றோ அழகு என்கிறார்.

வல்வினைகாள்! என்று முன்னிலையாகக் கூறாமல் வல்வினையார்தாம் என்று படர்க்கையாகக் கூறியதனால் அவற்றின்மேல் ஆழ்வார்க்குள்ள கோபமும் த்வேஷமும் நன்கு விளங்கும். முகம் நோக்கி வார்த்தை சொல்லக் கூசுகின்றாரென்க.

“இங்கே மடியடக்கி நிற்பதனில்” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று சிலர் சொல்லுவர்; அது வேண்டா; அங்கே என்றிருப்பதே அழகியது ஆழ்வாருடைய நெஞ்சுக்கும் பாவங்களுக்கும் இப்போது நெடுந்தூரம் உள்ளமை உணர்க. தூரமான இடத்தைக் குறிப்பிடும்போது அங்கே என்றே குறிப்பிட வேண்டும். தவிரவும், “அங்கே மடியடக்கி நிற்பதனில் மீண்டடியெடுப்பதன்றோ வழகு” என்று உலகவழக்கச் சொல்லாகவும் கருதத்தக்கது. ‘தாங்கள் பெருமையாக வாழ்ந்தவிடத்திலே தங்களுக்கொரு குறை நேரிட்டால் அவ்விடத்திலேயே பிறர் சிரிக்கும்படி வருந்தி வாழ்வதிற்காட்டிலும் அவ்விடத்தைவிட்டுக் கண்மறைய ஓடிப்போவது நலம்’ என்று உலகில் ஸாமாந்யமாக வழங்குவதுண்டிறே; அந்த வார்த்தையை அநுவதிக்கிறபடியாகவுமிருக்கின்றது.

இங்கு, மடியடக்கி நிற்பதனில் என்றது எங்ஙனே பொருந்தும்? ‘பாவங்களுக்கு மடியென்று ஒன்றுண்டாகின்லன்றோ அதையடக்கி நிற்க வேண்டா என்னலாம்- என்று சிலர் சங்கிக்கக்கூடும்; வல்வினையார் என்று உயர்திணையாகச் சொன்னதுக்குச் சேர உலகவழக்க சொல்லையும் கூட்டிக்கொண்டு அருளிச் செய்கிறபடி மூன்றாமடியின் இறுதியில் மீண்டு என்றும் ஈண்டு என்றும் பதம் பிரிக்கலாம். ஈண்டு என்பதற்கு சீக்கிரமாக என்றும் பொருள் கொள்ளலாம்.

 

English Translation

My heart is too small to contain my adorable red-eyed Lord’s glory.  Hence no longer can my past karmas sit here like old, Rather than stand in a comer and cringe. Let them find their way out and leave.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top