(2613)

(2613)

உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,

இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்

தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,

எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.

 

பதவுரை

இணரும் துழாய் அலங்கல் எந்தை

(திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன்மேலும் தழைத்தோங்கு கின்ற திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமான்

தனக்கு எளியர்

தனக்கு அடிமைப்பட்டவர்கள்

எவ்வளவர்

(தன்மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ

அவ்வளன்

தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்)

ஒருவர்க்கு

(தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது

செவ்வே

நேராக

உணர  எளியனே?

அறியக்கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக்கூடியவைனல்லனாயினும்)

ஆனால்

ஆகையினாலே

இங்கு

இவ்விடத்தில்

எம்பெருமான்

எம்பெருமான்

எனக்கு

என்னாவறிந்து

உணர எளியன்

கொள்ளக்கூடியவன்.

 

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உணரவோருவர்க்கு.) “இன்றே நாம் காணதிருப்பதுவும்” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் பேசின பேச்சு எம்பெருமானது திருச்செவியில் விழுந்தவாறே “ஆழ்வாருடைய திருவாயினாலே இப்படி சொல்லும்படி நாம் அருமைப்பட்டிருக்கலாமோ? ‘நான்காணாதிருப்பதுவும்’ என்கிற வார்த்தை சொல்ல வேண்டியவர்கள் * உடனடியே உடையே உகந்தோடும் ஸம்ஸாரிகளேயொழிய, *உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன் என்றிருக்கிற ஆழ்வார் இவ்வார்த்தை  சொல்லும்படி ஆகலாமோ? ஆழ்வார்க்கு நாம் எளிமைப்பட்டு நம்மை அவர்க்குக் காட்டிக் கொடுக்க வேண்டாவோ” என்று திருவுள்ளங் கொண்ட எம்பெருமான் தன்னுடைய ஸௌலப்ய குணத்தை ஆழ்வார் நெஞ்சிலே பிரகாசப்படுத்த, அதனை அநுபவித்துப்பேசுகிறாரிதில்.

இணருந்துழாயலங்கெலந்தை ஒருவர்க்கு செவ்வே உணர எளியனே? (எளியனல்லன்.) (ஆனபோதிலும்) எம்பெருமான் தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவன்; ஆனால் எனக்கு இங்கு உணர எளியன் என்று அந்வயம்.

“தோளிணை மேலும் நன்மார்பின்மேலுஞ் சுடர்முடிமேலும் நாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்” என்றபடி திருத்துழாய் மாலைகளைப் பரமபோக்யமாக அணிந்துகொண்டுள்ள எம்பெருமான் யாராலாவது உள்ளபடி அறிந்துகொள்ளக்கூடியவனோ? ஸ்வப்ரயத்நத்தால் ஒருவராலும் அறிந்துகொள்ளக் கூடியவனல்லன்; ஒருவனுடைய ஞானத்துக்கும் எம்பெருமான் விஷயமாகிறதில்லை என்று சொல்லிவிட்டால், ஆகாசத்தாமரை, முயற்கொம்பு, மலடிபிள்ளை முதலான வஸ்துக்கள்போல் ப்ரஹ்மமும் அடியொடு இல்லாத பொருள் என்று தேறிவிடுமே என்று நினைக்க வேண்டா; ஒருவருடைய ஞானத்துக்கும் எம்பெருமான் விஷயமாகிறதில்லையென்று யாரும் சொல்லவரவில்லை. எவரெவர்கள் எவ்வௌவெவ்வளவு அன்பு பாராட்டுவர்களோ அவரவர்களுக்கு அவ்வளவவ்வளவு எம்பெருமான் தன்னைக்காட்டிக்கொடுப்பவன் என்றே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருப்பதால் நானும் என்னுடைய அன்புக்குத் தக்கவளவு எம்பெருமானை ஸபிக்க உரியேன் என்கிறார்.

முதலடியில் “ஒருவர்க்குச் செவ்வே உணர எளியனே” என்றது- அன்பு  அற்ற ஒருவர்க்கும் ருஜுவாக அறியக்கூடாதவன் என்றபடி. புத்தி சாதுரியத்தாலே சாஸ்த்ரங்களையெல்லாம் ஸந்தேஹமறக் கற்றுணர்ந்தவர்களுக்கும் பக்தியில்லாதயளவில் ப்ரஹ்மஜ்ஞான முண்டாகாமட்டதென்ற பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. *** யெது க்வதங்க்ரி ஸரஸருஹபக்தி ஹீநா தேஷாம் அமீபிரபி நைவ யதார்த்தபோத:- பித் தக்க மஞ்ஜந மநாபுஷி ஜாது நேத்ரே நைவப்ரபாபிரபி சங்கஸிதத்வபுத்தி:” (எம்பெருமானே! உனது திருவடித் தாமரைகளில் அன்பு இல்லாதவர்கள் எவரோ அவர்களுக்கு சாஸ்த்ரங்களாலும் உண்மையுணர்ச்சி உண்டாகமாட்டாது; பித்தம் கொண்டவனுடைய கண்ணில் பித்தஹரிமான அஞ்ஜனம் இடாவிடில் ஆயிரம் ஸூரியர்கள் காய்ந்தாலும் சங்கு மஞ்சள் நிறமாகக் காணப்படுமேயன்றி வெண்ணிறமாகக் காணப்படாதன்றோ, அதுபோல.) என்று ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் கூரத்தாழ்வானருளிச் செய்தது இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

இணருந்துழாயலங்கல் என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த அர்த்தவிசேஷம் குறிக்கொள்ளத்தக்கது; “(இணரும்) தன்னிலத்திற் காட்டிலும் இவன் தோளில் விகஸியாநிற்கும்; தேவர்கள் தோளில் மாலை வாடாது; ஸர்வாதிகனாகையாலே இவன் தோளிலிட்டது அரும்பியாநிற்கும்” என்று. தேவர்கள் மாலை அணிந்துகொண்டால் அந்த மாலைதோளில் வாடாமல் வதங்காமல் விளங்கிக் கொண்டிருக்கும் என்பது மாத்திரமேயுள்ளது; ஸர்வாதிகனான எம்பெருமானுடைய திருத்தோளிலோ வென்னில்,  மாலை வாடாதிருப்பதுமாத்திரமேயன்று; மேன்மேலும் அரும்புவிட்டு விகஸிப்பதும் செய்யும் என்று, இணரும் என்ற பதஸ்வாரதஸ்யத்தை நோக்கி இங்ஙனே அருளிச் செய்யப்பட்டதென்க. இணர்தலாவது கொத்துக்கொத்தாக அலர்தல்.

எம்பெருமான் தனக்கு எளியர் எவ்வளவர்; (தானும்) அவ்வளவன் = “ பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே பாச மலர்த்துழாய் மாலையான் – வடிவு.” என்று பேயாழ்வாரருளிச் செய்ததை ஒரு புடையொத்திருக்கின்றது இதுவும். தாழ்ந்தவர்களைச் சொல்வதான எளியர் என்ற சொல் இங்கு தாத்பர்ய வ்ருத்தியால் சேஷ பூதர்களைச் சொல்லுகிறது. தனக்கு அடிமைப்பட்டவர்கள் எவ்வளவு அன்பையுடையவர்களாக இக்கின்றார்களோ அவ்வளவாகத் தானிருப்பன்; “பசிக்குத்தக்க ப்ரஸாதம்” என்னமாபோலே, ஸ்நேஹத்துக்குத்தக்க ஸ்வரூபாவிஷ்காரஞ் செய்வனாம் எம்பெருமானும். ஆனால் எனக்கெளியனென்பெருமானிங்கு = ஆனால் என்றது ஆனதால், என்றபடி. அன்புக்குத் தக்கவளவு தன்னைக் காட்டிக்கொடுப்பவனாகையாலே என்னுடைய அன்புக்குத் தக்கவளவு எனக்கு அவள் எளியனாகத் தடையில்லை என்றாராயிற்று.

 

English Translation

The Lord my father wears a sprightly Tulasi garland, can anyone understand him fully? The more humble one is, the more one understands his glory, He comes to me with ease.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top