(2609)
ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை
ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான்.
பதவுரை
|
ஆரானும் ஆதானும் செய்ய |
– |
யாராவது எதையாவதுசெய்து கொள்ளட்டும்; |
|
அகல் இடத்தை ஆராய்ந்து |
– |
விசாலமான இப்பூமியை ஆராய்ந்து |
|
அது திருத்தல் ஆவதே |
– |
அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ? |
|
யான் |
– |
நானோவென்றால் |
|
சீர் ஆர் மனத்தலை |
– |
(எனது) சிந்த மனத்திலுள்ள |
|
வன் துன்பத்தை |
– |
வலிய துன்பங்களை |
|
வானோர் இனம் தலைவன் கண்ணனால் |
– |
நித்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ணபிரானால் |
|
மாற்றினேன் |
– |
நீக்கிக்கொண்டேன். |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (ஆரானுமாதானுஞ் செய்ய.) கீழ்ப்பாட்டில் விரித்துரைத்தபடி எம்பெருமானே ஸ்வரக்ஷகனாயிருக்கவும் இதனைப் பலர் தெரிந்துகொள்ளாமல் புறந்தொழுகின்றபடியைக் கண்ட ஆழ்வார், இவ்வுண்மைப் பொருளைப் பலர்க்கும் உபதேசித்துத் திருத்துவோம் என்று முயன்றார்; “கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே” (திருமாலை 11) என்றபடி ஜாயமாநகடாக்ஷமில்லாதார் பலருளராகையால் அவர்கள் திருந்திவரக் கண்டிலர்; “சொன்னால் விரோதமிது ஆகிலுஞ் சொல்லுவன் கேண்மினோ” (திருவாய்மொழி 3-9-1) என்று நாம் கெஞ்சிக் கெஞ்சி உபதேசித்தவிடத்திலும் பாழும் ஸம்ஸாரிகள் திருந்தாவிடில் நாம் என் செய்வோம்? யானைக்குக் கோமணங்கட்ட யாரால் முடியும்? அளவில்லாமல் பரந்து கிடக்கிற இவ்வுலகத்திலுள்ளா ரெல்லாரையும் திருத்துவதென்றால் இது நம்மாலாகக்கூடிய காரியமோ? நம்மாலானது நாம் நன்மை சொல்லலாம்; ஆனவளவு சொல்லிப் பார்த்தோம்; பாக்கியமுள்ளவர்கள்; ஆனவளவு சொல்லிப் பார்த்தோம்; பாக்கியமுள்ளவர்கள் திருந்துவார்கள்; கர்பதுர்ப்பாக்யசாலிகள் இழப்பர்கள்; யார் எப்படி வேணுமானாலும் செய்யட்டும் என்று முன்னடிகளில், ஸம்ஸாரிகள்மேல் வெறுப்புத்தோற்ற அருளிச் செய்கிறார். இந்த இருள் தருமாஞாலத்திலே இவர்களைப்போல் தான் கெட்டுப் போகாமல் எம்பெருமானை யடிபணிந்து வாழப்பெற்றேனென்று தம்முடைய நிலைமைக்குத் தாம் உகக்கிறார் பின்னடிகளில் வழிப்போக்கர்களின் கைப்பொருள்களையெல்லாம் கொள்ளைகொள்ளுங்கள்வர் நிறைந்த காட்டிலே மற்றெல்லாரும் பறிகொடுத்து நிற்க, ஒன்றும் பறிகொடாமல் தப்பிப்போன வொருவன் “தைவாதீனமாய் நாம் தப்பப்பெற்றோமே!” என்று உகப்பதுபோல, ஆழ்வாரும், எல்லாரையும் மதிகெடுக்கின்ற இவ்விருள் தருமாஞாலத்திலே முந்துற முன்னம் நாம் தப்பிப் பிழைக்கப் பெற்றோமே’ என்று உகக்கிறாராய்ந்து.
ஆரானும் ஆதானும் செய்ய = கற்றுணர்ந்தவர்களோடு கல்லாதவர்களோடு வாசியற எல்லாருமே இந்நிலத்தில் கலங்குவார்களாதவால் ஆரானும் என்கிறார். தேவதாந்தரபாஜநம் பண்ணுவார் சிலர், உபாயாந்தரங்களை அநுஷ்டிப்பார் சிலர். ப்ரயோஜநாந்தரங்களை நச்சுவார் சிலர் என்றிப்படி தப்புச் செய்கைகள் பல இருப்பதால் ஆதானும் என்கிறார். ஸம்ஸாரிகளையெல்லாம் திருத்துவதற்கென்றே திருவவதரித்த ஆழ்வார்தாமும் “அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே!” என்று திருவுள்ளம் வெறுத்துச் சொல்லும்படியாய்த்து ஸம்ஸாரிகளின் பொல்லாங்கு. வழி தப்பி நடக்கும் பிள்ளையின்பக்கல், பெற்ற தகப்பனும் சில ஸமயங்களில் மனம் வெறுத்து “அது எக்கேடு கெட்டாலும் கெடட்டும்” என்று சொல்லிக் கைவாங்கியிருப்பதுண்டிறே.
மனத்தலை என்றவிடத்து, தலை- எழனுருபு; மனத்திலே என்றபடி. தம்முடைய நெஞ்சு திருந்தப்பெற்ற ஸந்தோஷத்தினால் “சீரார்மன” மென்கிறார். “வானொரினத்தலைவன்” என்று பரத்வமும் “கண்ணனால்” என்று ஸௌலப்யமும் சொல்லிற்று. நித்யஸூரிகளுக்கு நிர்வாஹனாயிருக்கையாகிற மேன்மையைப் பாராமல் இடக்கை வலக்கை யறியாத இடையர்களுக்குள்ளே ஒருவனாக வந்து பிறந்து காட்டியருளின ஸௌலப்யகுணத்திலே நான் ஈடுபட்டு என்னுடைய மனத்துன்பங்களையெல்லாம் போக்கிக்கொண்டேன்; துன்பங்களுக்கே நிலமான இவ்விபூதியில் நானோருவனாகிலும் இன்பம் பெற நேர்ந்ததேயென்று ஆநந்திக்கின்றேனென்றாராயிற்று.
English Translation
Let all do what they wish, is it possible to judge and correct the vast world? On my part, I have freed my good heart of untold miseries, through Krishna’s grace.
