ஏழாந் திருமொழி
(1008)
அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.
(1009)
அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்,
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப,
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே.
(1010)
ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே.
(1011)
எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.
(1012)
மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே.
(1013)
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே.
(1014)
முனைத்தசீற்றம் விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ் சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும் கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும் செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.
(1015)
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்,
காய்த்த வாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,
தேய்த்த தீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே.
(1016)
நல்லைநெஞ்சே. நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்,
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்,
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து, அதர்வாய்ச்
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே.
(1017)
செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,
எங்களீசனெம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன்,
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே
.
