(1011)
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோ னேதலனின்னுயிரை
வவ்வி * ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மான திடம் *
கவ்வுநாயும் கழுகுமுச்சிப்போதொடு கால் சுழன்று *
தெய்வமல்லால் செல்லவொண்ணாச் சிங்கவேள் குன்றமே.
பதவுரை
எவ்வம் வெம்வேல் | – | துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தையுடையனாய் |
ஏதலன் | – | பாகவத விரோதியான |
பொன் பெயரோன் | – | இரணியனுடைய |
இன் உயிரை | – | இனிமையான பிரானணை |
வவ்வி | – | அபஹரித்து |
ஆகம் | – | (அவனுடைய) சரீரத்தை |
வள் உகிரால் | – | கூர்மையான நகங்களாலே |
வகிர்ந்த அம்மானது இடம் | – | கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது:- |
கவ்வும் நாயும் | – | (கண்டவர்களை) யெல்லாம் கவர்கின்ற நாய்களும் |
கழுகும் | – | கழுகுகளும் (நிறைந்திருப்பதனாலும்) |
உச்சிப் போ தொடு கால் சுழன்று | – | கொழுத்த வெய்யிலும் சுழல்காற்றும் எப்போது மிருப்பதனாலும் |
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா | – | தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட முடியாததான |
சிங்கவேள்குன்றம்-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1011
எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன் ஏதலன் இன் உயிரை
வவ்வி, ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்
கவ்வும் நாயும், கழுகும், உச்சிப்போதொடு கால் சுழன்று,
தெய்வம் அல்லால், செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே. (1-7-4)
* * * – (எவ்வம் வெவ்வேல்.) கையும் வேலுமாயிருக்கிற விருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப்படுத்தவல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்வைப் பிளந்தருளின பெருமான் உறையுமிடமாவது சிங்கவேழ்குன்றம்.
வேற்று மனிசரைக் கண்டபோதே வந்து துடைகளிலே கவ்விக் கடிக்கிற நாய்களும், அப்படி கடிக்கப்பட்டு மாண்டொழிந்த பிணங்களைக் கவ்வுகின்ற கழுகுகளும் ஆங்கு மிகுதியாகக் காணப்படுமாம். செடி மரமொன்று மில்லாமையினாலே நிழலென்பது காணவே முடியாது; உச்சிவேளையில் எப்படிப் பட்ட வெய்யில் காயுமோ, அதுவே எப்போதும் காய்கின்றது; சுழல்காற்றுகள் சுழன்றபடியே யிராநின்றன. இப்படி யிருக்கையினாலே ஸாமாந்யரான மனிசர் அங்குச் சென்று கிட்டுதல் அரிது; மிக்க சக்தி வாய்ந்த தேவதைகளே அங்குச் செல்லுதற்கு உரியர்; இங்ஙனே கஹநமான தலமாயிற்று இது.
எவ்வும் என்றும் எவ்வம் என்றும் பாடபேதம். பொன் பெயரோன் = ஹிரண்யம் என்ற வடசொல் பொன் என்னும் பொருளுடையதாதலால் ஹிரண்யாஸுரனைப் பொன்பெயரோனென்பது. ஏதலன் என்று சத்ருவுக் குப் பெயர்; ஸர்வபூதஸுஹ்ருத்தான எம்பெருமானுக்கு இவன் நேரே சத்ரு வல்லனாகிலும் பாகவதசிரோமணியான ப்ரஹ்லாதாழ்வானுக்கு சத்ருவான முறைமையாலே பகவானுக்கும் சத்ருவாயினன். ஆச்ரிதர்களின் விரோதிகளைத் தன் விரோதிகளாக நினைத்துப் பேசுமவனிறே எம்பெருமான். ”ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்து இன்னுயிரை வவ்வினான்” என்று – மார்வைப் பிளந்தது முன்னமும் உயிரைக் கவர்ந்தது அதன்பின்புமாகச் சொல்ல வேண்டியிருக்க இங்கு மாறாடிச் சொன்னது- இரணியன் நரசிங்க மூர்த்தியைக் கண்ட க்ஷணத்திலேயே செத்தபிணமாக ஆய்விட்டானென்ற கருத்தைக் காட்டு தற்கென்க.
”கவ்வுநாயுங் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம். உச்சிப்போது என்று ஸுர்யனையே சொல்லுகிறதாகக் கொண்டு, நாய்களும் கழுகுகளுங்கூட அவ்விடத்தில் நடக்கும்போது தரையின் வெப்பம் பொறுக்க முடியாமல் கால் தடுமாறி திண்டாடுகின்றன; அப்படியே ஸுர்யனும் அவ்விடத்திலே வந்தால் அவனுக்கும் இதுவே கதி; தன்னுடைய தாபத்தைத் தானே பொறுக்கமாட்டாமல் அவனும் கால் தடுமாறிப் பரிதபிப்பன் என்றவாறுமாம்.
இத்திருப்பதியிற் சென்று ஸேவிக்க விருப்பமுடையரான இவ்வாழ்வார் “தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்று அருமை தோன்ற அருளிச்செய்யலாமோ? எனில்; நரஸிம்ஹமூர்த்தியின் அழகைக்கண்டு அஸூயைப் படுவதற்கும் அவனுக்கு ஏதேனும் அவத்யத்தை விளைப்பதற்கும் உறுப்பாக ஆஸுரப்ரக்ருதிகள் அங்குச் செல்லமுடியாது; எம்பெருமானுடைய ஸம்ருத்தியைக்கண்டு உகந்து பல்லாண்டு பாடவல்ல ஆழ்வார் போல்வார்க்குத்தான் அவ்விடம் அணுகக் கூடியது என்ற கருத்துத் தோன்ற அருளிச் செய்கிறா ரென்க…… (4)
English Translation
The terrible Asura Hiranya’s chest was torn with sharp claws, and he was killed, by the Lord in Singavel-Kundram where hounds, vulnires and the blazing Sun greet devotees who falter through the impenetrable path.
