(1012)

(1012)

மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் * அவுணன்
பொன்றவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் *
நின்றசெந்தீ மொண்டு சூறை நீள்விசும்பூ டிரிய *
சென்று காண்டற் கரியகோயில் சிங்கவேள் குன்றமே. 

பதவுரை

மென்ற பேழ்வாய்

(சீற்றத்தாலே) மடித்த பெரிய வாயையும்

வாள் எயிறு

வாள்போன்ற பற்களையுமுடையதாய்

ஓர்

ஒப்பற்றதாய்

கோள்

மிடுக்கையுடையதான

அரி ஆய்

நரசிங்கமாகி

பொன்றஅவுணன்

(தன்னைக் கண்டமாத்திரத்திலே) செத்துப்போன இரணியனுடைய

ஆகம்

உடலை

வள் உகிரால்

கூர்மையான நகங்களாலே

போழ்ந்த

பிளந்திட்ட

புனிதன் இடம்

பரிசுத்தனான பகவான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-

சூறை

சுழல்காற்றானது

நின்ற செம் தீ மொண்டு

குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு

நீள் விசும்பூடு இரிய

விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே

சென்று காண்டற்கு அரிய கோயில்

கிட்டிச் சென்று ஸேவிக்க முடியாத கோயிலான

சிங்கவேள்குன்றம்-.

       ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1012

 மென்ற பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய், அவுணன்

பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்

நின்ற செந்தீ மொண்டு, சூறை, நீள் விசும்பூடு இரிய,

சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேழ்குன்றமே.  (1-7-5)

 

***- (மென்ற பேழ்வாய்.) சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்றுகொண்டே யிருக்கிற பெரிய வாயையும் ஒளிவிடுகிற எயிற்றையும் மிடுக்கையுமுடைய நரசிங்கமாய்த் தோன்றி இரணியன் உயிர்மாளும்படியாக அவனது மார்வைப் பிளந்த பெருமானெழுந்தருளி யிருக்குமிடம் சிங்கவேழ் குன்றம். அஃது எப்படிப்பட்டது? மாறாமல் நின்று எரிகிற அக்நியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயமெங்கும் பரவி வீசியெறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் கோயில்.

        ”அவுணன் பொன்றவாகம்” என்ற விடத்திற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம். நரசிங்கத்தைக் கண்டவுடனே இரணியன் பொன்ற – முடிந்து போக, முடிந்தபிறகு அந்தப் பிணத்தைக் கிழித்துப்போட்டான் என்னலாம் இது அதிசயோக்தி. அன்றி, அவுணன் பொன்றும்படியாக (முடியும் படியாக) அவனது உடலைக் கிழித்தானென்னவுமாம்.

        சூறை — சூறாவளிக்காற்று எனப்படும். அக்காற்று செந்தீயை மொண்டு கொண்டு ஆகாயத்திலே ஓடுகின்றதாம். “நீள் விசும்பூடு எரி” என்றும் பாட மருளிச்செய்வர். ஆகாயத்திலே போய் ஜ்வலிக்க என்றபடி.

        சென்று காண்டற்கரிய கோயில் என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸுக்தி காண்க. “இப்படி யிருக்கையாலே ஒருவர்க்கும் சென்று காண்கைக்கு அரிதா யிருக்குமாயிற்று. பரமபதம்போலே இந்நிலத்துக்கும் நாம் பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டராகிறார்” என்று . ….. …. ……. (5)

 

English Translation

With a tearing big mouth and dagger like teeth, a powerful; man lion fore the wide chest at the Asura Hiranya. His holy abode is Singavel-Kundram where whirlwinds carry blazing forest fires high into the sky making the temple difficult to reach.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top