(1010)
ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் * அவுணன்
வாய்ந்தவாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மான திடம் *
ஓய்ந்தமாவு முடைந்த குன்று மன்றியும் நின்றழலால் *
தேய்ந்தவேயு மல்லதில்லாச் சிங்கவேள் குன்றமே.
பதவுரை
ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு | – | (வடிவுக்குத்) தகுதியாகப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களையுடைமுடையதாய் |
ஓர் கோள் அரி ஆய் | – | ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி |
அவுணன் | – | இரணியாசுரனுடைய |
வாய்ந்த ஆகம் | – | வளர்ந்த உடலை |
வள் உகிரால் | – | கூர்மையான நகங்களாலே |
வகிர்ந்த | – | கிழித்தெறிந்த |
அம்மானது இடம் | – | ஸ்வாமி எழுந்தருளி யிருக்கிற இடமாவது:- |
ஓய்ந்த மாவும் | – | (கடினமான நிலங்களில் அங்குமிங்கும் திரிந்து அலைந்ததனால்) களைத்துப்போன மிருகங்களும் |
உடைந்த குன்றும் | – | உடைந்துபோன சிறு மலைகளும் |
அன்றியும் | – | இன்னமும் |
நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது | – | இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய இவைகள் தவிர |
இல்லா | – | வேறொன்றுமில்லாத |
சிங்கவேள்குன்றம்-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1010
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய், அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்
ஓய்ந்த மாவும், உடைந்த குன்றும், அன்றியும், நின்று அழலால்
தேய்ந்த வேயும் அல்லது, இல்லாச் சிங்கவேழ்குன்றமே. (1-7-3)
***(- ஏய்ந்த பேழ்வாய்.) வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெரிய வாயையும், ஒளி பொருந்திய (அல்லது, வாள் போன்ற) கோரப்பற்களையு முடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய மாம்ஸஞ் செறிந்த மார்வைப் பிளந்த பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம்.
1. “நறிய மலர்மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாட, பொறி கொள் சிறைவண் டிசைபாடும்” என்றும், 2. “வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை, கொண்டல்மீதணவுஞ்சோலை குயிலினங் கூவுஞ்சோலை” என்றும் வருணிக்கத் தக்க நிலைமையோ அவ்விடத்தது என்றால்; இல்லை, அந்த ஸந்நிவேசம் வேறுவகையானது என்கிறார் . ஆனை குதிரை சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இங்குமங்கும் ஓடியலைந்து ஓய்ந்து நிற்கக் காணலாம்; உடைந்து கிடக்கும் கற்பாறைகளைக் காணலாம்; இன்னமும் சில காணவேண்டுமானால், மூங்கில்கள் நெருப்புப்பற்றி யெரிந்து குறைக் கொள்ளியாயிருக்குமாற்றை விசேஷமாகக் காணலாம்; இவை யொழிய வேறொன்றும் காண்பதற்கில்லையாம் அங்கு. இவையெல்லாம் இவ்வாழ்வார்க்கு வண்டின முரலுஞ் சோலை போலே தோற்றுகின்றன வென்பர் பெரியவாச்சான் பிள்ளை. 3. “அது விதுவுது என்ன லாவனவல்ல என்னையுன் செய்கை நைவிக்கும்” என்றபடி எம்பெருமானுடைய சரித்திரம் எதுவாயிருந்தாலும் எல்லாம் ஆழ்வார்களுடைய நெஞ்சைக் கவர்வது போல், அப்பெருமான் உகந்தருளின நிலங்களில் உள்ளவைகளும் எதுவா யிருந்தாலும் அவ்விடத்தவை’ என்கிற காரணத்தினால் எல்லாம் இவர்க்கு உத்தேச்யம் என்பது அறியத்தக்கது. “பிறர்க்குக் குற்றமாய்த் தோற்றுமவையும் உபாதேயமாய்த் தோற்றுகையிறே ஒரு விஷயத்தை உகக்கையாகிறது” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியுங் காண்க.
ஓய்ந்தமாவும் என்பதற்கு – நிலத்தின் வெப்பத்தினால் பட்டுப்போன மா மரங்களும் என்றும் பொருள் கொள்ளலாம். (1) பெரிய திருமொழி 5-1-1. (2) திருமாலை. 14. (3) திருவாய்மொழி 5-10-2.
English Translation
With a big mouth, dagger-like teeth and surging strength the man-lion tore the might chest of the Asura Hiranya with sharp claws. Drowsy animals, broken rocks, and razed Bamboo thickets, are all there is in Singavel-Kundram.
