(1009)
அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய்* அவுணன்
கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகி ராளனிடம் *
மலைத்த செல்சாத் தெறிந்தபூசல் வன்துடிவாய் கடுப்ப*
சிலைக்கைவேடர் தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.
பதவுரை
அலைத்த பேழ்வாய் | – | (சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும் |
வாள் எயிறு | – | ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய் |
ஓர் | – | ஒப்பற்றதாய் |
கோள் | – | மிடுக்கையுடையதான |
அரி ஆய் | – | நரஸிம்ஹமாய்க்கொண்டு |
கொலை கையாளன் அவுணன் நெஞ்சு இடந்த | – | ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்வைக் கிழித்தெறிந்த |
கூர் உகிராளன் இடம் | – | கூர்மையான நகங்களையுடைய எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாவது:- |
மலைத்த | – | (வேடர்களாலே) ஆக்கிரமிக்கப்பட்ட |
செல் சாத்து | – | வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே |
எறிந்த | – | (பிரதியாகச்) செய்யப்பட்ட |
பூசல் | – | சண்டையிலே |
வல் துடி வாய் கடுப்ப | – | கடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய, |
சிலை கை வேடர் | – | வில்லைக் கையிலேயுடைய வேடருடைய |
தெழிப்பு | – | ஆரவாரமானது |
அறாத | – | எப்போதும் மாறாத |
சிங்கவேள்குன்றம்-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
# 1009
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய், அவுணன்,
கொலைக் கையாளன், நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப,
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேழ்குன்றமே. (1-7-2)
** *-(அலைத்த பேழ்வாய்.) – சீற்றத்தாலே கடைவாயுடனே நாக்கை எற் றிக்கொள்ளுகிற பெரிய வாயையுடைய நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி, பர ஹிம்ஸையே போது போக்கான இரணியனுடைய மார்பைப் பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.
அவ்விடத்தின் நிலைமையைப் பேசுகிறார் பின்னடிகளில்; தீர்த்தயாத்திரையாகப் பலர் அங்குச் செல்லுகின்றனராம்; அவர்களை அவ்விடத்து வேடர்கள் வந்து தகைந்து சண்டை செய்வர்கள்; பரஸ்பரம் பெருஞ்சண்டை நடக்கும்; அந்தச் சண்டையிலே வேடர்களின் பறையோசையும் வில்லோசையும் இடை விடாது இருந்து கொண்டேயிருக்கும். இதுவே அத்தலத்தின் நிலைமை-என்கிறார். உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டுமிறே.
மலைத்த செல்சாத்து = மலைத்தலாவது ஆக்கிரமித்தல்; வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட என்றாவது, வேடர்களை எதிரிட்டு ஆக்கிரமித்த என்றாவது பொருள் கொள்ளலாம். வேடர்கள் வந்து பொருகிறபோது தாங்கள் வெறுமனிரார்களே , தாங்களும் ப்ரதியுத்தம் செய்வர்களே, அதைச் சொல்லுகிற தென்னலாம். (செல் சாத்து.) வடமொழியில் ஸார்த்தம் என்ற பதம் ஸமூஹ மென்னும் பொருளது; அப்பதமே இங்கே சாத்து என விகாரப்பட்டிருக்கின்றது. செல்கின்ற சாத்து எனவே யாத்திரை செய்பவர்களின் கூட்டம் என்று பொருள் கிடைத்தது. பூசல் என்றபதத்திற்கு யுத்தம் என்றும், பெரிய கோஷம் போடுதல் என்றும் பொருளுண்டு. இரண்டு பொருளும் இங்குக் கொள்ளலாம். வேடர்களாலே ஆக்கிரமிக்கப்பட்ட வழிப்போக்கர்கள் போடும் கூசலானது பெரிய பறையடித்தாற்போல ஒலிக்கின்றது என்றும் வேடர்கள் வழிப்போக்கர்களை மறித்துச் செய்கிற சண்டையிலே வேடர்களுடைய பறைகள் கர்ண கடூரமாக ஒலிக்கின்றன என்றும் கருத்தாகலாம்……..(2)
English Translation
Singavel-Kundram is the place where the Lord came,-his mouth gaping wide, displaying his striking white feline teeth,-and toe into the mighty chest of the murderous Hiranya. Bow wielding hunters move in batches through the forest, the din of their hour-glass tabor never ceasing.
