(1008)
அங்கண் ஞாலமஞ்ச வங்கோ ராளரியாய் * அவுணன்
பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் *
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச்
செங்கணாளி யிட்டறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.
பதவுரை
அங்கு | – | (‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே |
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய் | – | அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு) |
அவுணன் பொங்க | – | இரணியன் கிளர்ந்த வளவிலே, |
ஆகம் | – | அவனது உடலை |
வள் உகிரால் | – | கூர்மையான நகங்களாலே |
போழ்ந்த | – | இருபிளவாகப் பிளந்த |
புனிதன் இடம் | – | பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;- |
செம் கண் ஆளி | – | (சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை |
பை கண் ஆனை கொம்பு கொண்டு | – | பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து |
பத்திமையால் | – | பக்தியினாலே |
அடி கீழ் | – | (பகவானுடைய) திருவடிகளிலே |
இட்டு | – | ஸமர்ப்பித்து |
இறைஞ்சும் | – | ஆச்ரயிக்கப்பெற்ற |
சிங்கவேள் குன்றம் | – | அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம். |
முதற்பத்து – ஏழாந்திருமொழி.
அங்கண் ஞாலமஞ்ச அவதாரிகை
கீழ்த் திருமொழியில், தாம் செய்த பலபல பாவங்களை யெடுத்துரைத்து, அந்தோ! இப்படி கணக்கில்லாத பாவங்களைச் செய்துவிட்டேனே!; யமலோகத்திலே யமபடர்களால் நேரக்கூடிய கொடுமைகளை நினைக் குங்கால் அளவற்ற அச்சமும் நடுக்கமும் உண்டாகின்றதே!’ என்று பலவாறாகச் சொல்லித் தம்முடைய அநுதாபந் தோற்றக் கதறினார். அப்படி கதறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! நம்முடைய பக்தனான ப்ரஹ்லாதன் உமக்குத் தெரியுமே ; யமகிங்கரர்களாலும் செய்யமுடியாத துன்பங்களை அவனுக்கு அவனுடைய தகப்பனான ஹிரண்யகசிபு என்பவன் செய்வித்தானென்பதும் உமக்குத் தெரியுமே. அப்படி பல்வகைத் துன்பங்களுக்கு ஆளான அந்த ப்ரஹ்லாதனை நாம் ரக்ஷிக்க வேண்டி ஆச்சரியமான ஒரு அவதாரம் செய்ததும் உமக்குத் தெரியுமே. அந்த நரஸிம்ஹாவதாரம் பிற்பட்டவர்களுக்குப் பயன் படாமற் போயிற்றேயென்று வயிறெரியவும் வேண்டாதபடி நாம் சிங்கவேள் குன்றமென்னும் விலக்ஷணமான திவ்ய தேசத்திலே நித்யஸந்நிதியும் பண்ணி வைத்திருக்கிறோமே. ஆச்ரிதர்களின் விஷயத்தில் நாம் இவ்வளவு பரிந்து காரியஞ் செய்வோம் என்பது உமக்குத் தெரியாதோ ? ஏன் நீர் வருந்துகின்றீர்?” என்றருளிச் செய்ய, ஆழ்வாரும் பரமஸந்தோஷமடைந்து அந்த நரஸிம்ஹாவதாரத்தையும் அந்த திவ்யதேசத்தையும் அநுபவித்து இனியராகிறார் இத்திரு மொழியில்.
கீழ்த்திருமொழியில் ஒன்பதாம் பாட்டிலே ‘தேனுடைக் கமலத்திரு வினுக்கரசே!” என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டுச் சரணாகதி செய்தது போலவே இத்திருமொழியிலும் ஒன்பதாம் பாட்டில் “அல்லிமாதர்புல்க நின்ற ஆயிரந்தோளன்” என்று லக்ஷ்மீஸம்பந்தத்தை முன்னிட்டே அநுபவிக்கிறார்.
இத்திருமொழியில் எட்டாம்பாட்டுவரையில் ஒவ்வொருபாட்டிலும் முன் னடிகளில் நரஸிம்ஹாவதார வ்ருத்தாந்தமும் பின்னடிகளில் சிங்கவேள் குன்றத்தின் நிலைமையும் வருணிக்கப்படுகின்றன. இத்திருப்பதியின் திருநாமம் அஹோ பிலம் என வழங்கப்படும். இது வடநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. ‘சிங்க வேள் குன்றம்’ என்றும் ‘சிங்கவேழ்குன்றம்’ என்றும் இதனை வழங்குவதுண்டு. சிங்கம் – நரஸிம்ஹ ஸ்வரூபியாய், வேள் – யாவராலும் விரும்பப்படுகின்ற கட்டழகுடையவரான பெருமான் எழுந்தருளிய, குன்றம் – திருமலை எனவும்; நரஸிம்ஹமூர்த்தி யெழுந்தருளியிருக்கின்ற ஏழு குன்றங்களையுடைய தலம் எனவும் பொருள் படுமாறு காண்க. இத்தலம், சிங்கம் புலி முதலிய பயங்கரமான விலங்குகள் ஸஞ்சரிக்கப்பெற்ற, கல்லும் புதரும் முள்ளும் முரடுமான கொடிய அரணியமாக இப்போது இருப்பது போலவே ஆழ்வார்காலத்திலும் இருந்த தென்பது இத்திருமொழியில் வர்ணனைகளால் நன்கு விளங்கும்.
இப்படிப்பட்ட பயங்கரமான துஷ்ட மிருகங்களும் கொடிய வேடர் முத லானவர்களும் அத்தலத்தின்கண் இருப்பதும்- மங்களாசாஸநபரர்களான நம் ஆழ்வார்களுக்கு ஒருவகையான ஆநந்தத்திற்கு ஹேதுவாகின்றது போலும் ; எல்லாரும் எளிதாக வந்து அணுகக்கூடிய தேசமாயிருந்தால் ஆஸுரப்ரக்ருதிகளும் பலர் வந்து எம்பெருமானுக்கு ஏதாவது தீங்கு இழைக்கக்கூடுமேயென்கிற அச்சத்திற்கு அவகாசமில்லாமல் ‘தெய்வம ல்லால் செல்ல வொண்ணா” என்னும்படி கஹநமாயிருப்பது மங்களாசாஸநருசியுடையார்க்கு மகிழ்ச்சியேயிறே.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
கலிநிலைத்துறை, பண் : நைவளம், தாளம் :ஏழொத்து
1008:
அம் கண் ஞாலம் அஞ்ச, அங்கு, ஓர் ஆள் அரி ஆய், அவுணன்
பொங்க, ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு, பத்திமையால் அடிக்கீழ்
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேழ்குன்றமே. (1-7-1)
* * *–(அங்கண்ஞாலமஞ்ச.) – கீழ் இரண்டாந் திருமொழியின் நான்காம் பாட்டின் உரையில் நரஸிம்ஹாவதார ப்ரமேயங்களை மிக்க விரிவாக வரைந்தோ மாதலால் அங்கே கண்டு கொள்வது. பக்தசிரோமணியான ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த துன்பங்களை ஸஹிக்கமுடியாமையினாலே எம்பெருமான் அளவற்ற சீற்றங்கொண்டு பயங்கரமான வொரு திருவுருவத்தை ஏறிட்டுக்கொண்டான்; அந்தச் சீற்றம் ப்ரஹ்லாத விரோதியான இரணியனளவில் மாத்திரமே உண்டானாலும், அளவு மீறியிருந்ததனால் ‘உலகங்கட்கெல்லாம் இப்போதே உபஸம்ஹாரம் விளைந்திடுமோ!’ என்று அனைவரும் அஞ்சி நடுங்கும்படி யிருந்தது பற்றி அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் என்றார். இவ்விடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க:- ”நரஸிம்ஹமாயிற்றுத்தான் ஜகத்ரக்ஷணத்துக்காகவிறே; அங்கனேயிருக்கச் செய்தேயும் விளைவதறியாமையாலே ஜகத்தாக நடுங்கிற்றாயிற்று. இது எவ்வளவாயத் தலைக்கட்டுகிறதோ! என்றிருந்ததாயிற்று.”
இனி, அங்கண்ஞால மஞ்ச என்பதற்கு – இரணியனுடைய ஒப்பற்ற தோள் வலியைக் கண்டு உலகமெல்லாம் அஞ்சிக்கிடந்த காலத்திலே என்று பொருளு ரைப்பாருமுளர்.
அங்கு என்றது-
- “எங்குமுளன் கண்ணனென்ற மகனைக்காய்ந்து, இங் கில்லையாலென்று இரணியன் தூண் புடைப்ப, அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் ” என்றபடியே இரணியன் எந்த இடத்தில் எம்பெருமானில்லை யென்று தட்டினானோ அந்த இடத்திலேயே என்றபடி. 1. திருவாய்மொழி 2-8-9.
- ” அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்க வுருவாய் ” என்றார் பெரியாழ்வாரும்.
அவுணன் பொங்க = அசுரர்கட்கு அவுணர் என்று பெயர். இங்கு ஹிரண் யாஸுரனைச் சொல்லுகிறது. இவன் அன்று வரையில் தனக்கு விரோதியாகத் தன் முன்னே வந்து தோற்றின ஒருவனையும் கண்டறியாமல் அன்றுதான் புதிதாக நரசிங்கமூர்த்தியாகிய எதிரியைக்கண்டபடியால் கண்டகாட்சியிலே கொதிப்படைந்தனனாம். அப்படி அவன் கொதிப்படைந்தவளவிலே அவனது ஆகத்தை (மார்வை) தீக்ஷ்ணமான திருநகங்களாலே கிழித்தெறிந்தனன் எம்பெருமான். பொங்க என்பதை ஆகத்துக்கு அடைமொழியாக்கி, அவுணனுடைய அகன்ற மார்பை என்றுரைப்பர் சிலர். 2. பெரியாழ்வார் திருமொழி 1-6-9.
போழ்ந்த புனிதன் = புனிதனென்றால் பரிசுத்தன் என்றபடி. இரணியனது மார்பைப் பிளந்ததனால் என்ன பரிசுத்தி உண்டாயிற்று என்று கேட்கக்கூடும்; ஜகத்தைஸ்ருஷ்டித்தல் முதலிய தொழில்களில் பிரமன் முதலானவர்களை ஏவிக் காரியம் நடத்திவிடுவது போல் ப்ரஹ்லாதனை ரக்ஷிப்பதிலும் ஒரு தேவதையை ஏவிவிடாமல் தானே நேராக வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்தமையே இங்குப் பரிசுத்தியெனக்கொள்க. இப்படி பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் எதுவென்றால், சிங்கவேள் குன்றமென்னும் திருப்பதியாம். அஃது எப்படிப்பட்ட தென்னில் ; சிங்கம் யானை முதலிய பிரபல ஜந்துக்கள் திரியுமிடம் அது என்பதைக் காட்டுகிறார் பின்னடிகளில். பகவானுடைய ஸந்நிதாநமஹிமையினால் அவ்விடத்து மிருகங்களும் பகவத்பக்தி மிக்கிருக்கின்றன வென்கிறார். சிங்கங்கள் யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்குகின்றனவாம். “यदन्नः पुरुषो भवति तदन्नास्तस्य देवता யதந்ந: புருஷோபவதி ததந்நாஸ் தஸ்ய தேவதா” [ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 103-30.] (எந்தெந்த உயிர்கட்கு எது எது ஆஹாரமோ, அந்தந்த உயிர்கள் அந்த ஆஹாரத்தைக் கொண்டு தம் தேவதைகளை ஆராதிக்கும்) என்பது சாஸ்த்ரமாதலால் யானைகளின் அவயவங்களை ஆஹாரமாகவுடைய சிங்கங்களும் யானைத்தந்தங்களைக் கொண்டு பகவதாராதநம் நடத்துகின்றனவென்க.
ஆளி என்று சிங்கத்துக்கும் யாளிக்கும் பெயர் ; இங்கே சிங்கத்தைச் சொல் லுகிறது. செங்கண் = (இங்கே வியாக்கியான ஸ்ரீஸுக்தி) “இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதேயிருக்கச் செய்தேயும் பகவத்பக்தி ஒரு படிப்பட்டுச் செல்லுமாயிற்று; சீற்றம் விக்ருதியாய் பகவத்பக்தி ப்ரக்ருதியாயிருக்கு மாயிற்று.” …. ….. ….. …… …… (1)
English Translation
Singavel-Kundram is the place where the pure Lord came as a man-lion,-while the world stood awe-struck,-and tore the Asura Hiranya’s chest with his claws. Red eyed lions offer worship by heaping elephant tusks at his feet with reverence.
