(1007)
ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று, இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத் தெந்தையைச்சிந்தையுள்வைத்து,
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே.
பதவுரை
| ஏதம் வந்து அணுகா வண்ணம் |
– |
“துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை |
| நாம் எண்ணி |
– |
நாம் எண்ணியிருப்போமாகில் |
| தொழுதும் எழு மின் என்று |
– |
(நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி |
|
(தேவர்களெல்லாரையுங்கூட்டிக்கொண்டு) |
||
| இமையோர் நாதன் வந்து |
– |
தேவேந்திரன் வந்து |
| இறைஞ்சும் |
– |
ஆச்ரயிக்கப்பெற்ற |
| நைமிச அரணியத்து எந்தையை |
– |
நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை |
| சிந்தையுள் வைத்து |
– |
தியானம் செய்து |
| காதல் மிகுந்த |
– |
பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற |
| கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
| வாய் ஒலி செய்மாலை |
– |
அருளிச் செய்த இச்சொல் மாலையை |
| கற்று வல்லுநர்கள் தாம் |
– |
அப்யஸித்துத் தேறினவர்கள் |
| ஓதம்நீர் வையகம் |
– |
கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை |
| வெண் குடை கீழ் ஆண்டு |
– |
வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு |
| உம்பரும் ஆகுவர் |
– |
நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
#1007 –
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி, எழுமினோ தொழுதும் என்று இமையோர் -;
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து,
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய் மாலை- தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையம் ஆண்டு, வெண் குடைக் கீழ், உம்பரும் ஆகுவர், தாமே. (1-6-10)
ஏதம் வந்தணுகா வண்ணம்– இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்; ஸேவித்தோமாகில் நம் முடைய ஏதங்களெல்லாம் ஓடிப்போய்விடும்’ என்று சொல்லி எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து ஸேவித்திருக்குமிடமாம் நைமிசாரணியம். அவ்விடத்தில் அரண்ய ரூபியாக ஸேவைஸாதிக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திரு மங்கையாழ்வாரருளிச் செய்த இச்சொல்மாலையை ஓதவல்லவர்கள், இவ்வுலகத்து அநுபவங்களில் விருப்பமுண்டாகில் அவற்றை உண்டுகளித்தபின் நித்ய ஸூரிகளின் கோஷ்டியிலும் சென்று சேர்ந்து நித்யாநந்தம் அநுபவிக்கப்பெறுவர்கள் என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
அடிவரவு:- வாணிலா சிலம்பு சூதினை வம்பு இடும்பையால் கோடிய நெஞ்சினால் ஏவினார் ஊன் ஏதம் அங்கண்.
ஆறாந் திருமொழி உரை முற்றிற்று.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
ஜீயர் திருவடிகளே சரணம்.
English Translation
“Gather O celestials, let us chant and praise him, never letting despair come to close us”, Indra leading other gods, to the worship of the Lord Naimisaraniyam Resident O! Kaliyan’s heart is love in abundance,-those who can master and sing his Garland of poems set, will be the rulers, of the Earth and Heaven both.
