(1016)
நல்லைநெஞ்சே ! நாந்தொழுதும் நம்முடை நம்பெருமான் *
அல்லிமாதர் புல்கநின்ற வாயிரந்தோளனிடம்
நெல்லிமல்கிக் கல்லுடைப்பப் புல்லிலையார்த்து * அதர்வாய்ச்
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள் குன்றமே.
பதவுரை
நெஞ்சே | – | ஓ மனமே! |
நல்லை | – | நீ மிகவும் நல்லவன்; |
நம்முடை நம்பெருமான் | – | நமக்கு ஸ்வாமியாய் |
அல்லி மாதர் புல்க நின்ற | – | பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய் |
ஆயிரம் தோளன் இடம் | – | ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய், |
நெல்லி | – | நெல்லி மரங்கள் |
மல்கி | – | நிறைந்து |
(கற்களினுள்ளே வேரோட்டத்தினால்) | ||
கல் உடைப்ப | – | பாறைகளை உடைக்கவும் |
புல் இலை ஆர்த்து | – | பனையோலைகள் ஒலிசெய்யவும் |
அதர் வாய் | – | வழிகளிலே |
சில்லி | – | சுவர்க்கோழிகளையுடைய |
சில் என்று ஒல் அறாத | – | சில் என்கிற ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற |
சிங்கவேள் குன்றம் | – | சிங்கவேள்குன்றத்தை |
நாம்தொழுதும் | – | நாம் ஸேவிப்போம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1016
நல்லை, நெஞ்சே! நாம் தொழுதும் : நம்முடை நம் பெருமான்,
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன், இடம்
நெல்லி மல்கி, கல் உடைப்ப, புல் இலை ஆர்த்து, அதர்வாய்
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேழ்குன்றமே. (1-7-9)
* * *-(நல்லைநெஞ்சே!.) கீழ்ப்பாட்டுகளில் தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்றும், சென்று காண்டற்கு அரிய கோயில்” என்றும், ‘தினைத்தனையுஞ் செல்லவொண்ணா” என்றும் இத்திவ்ய தேசத்தின் அருமையைச் சொல்லிவந்தாரே; அந்த அருமை ஆஸுரப்ரக்ருதிகளான பகவத் விரோதிகளுக்கேயொழிய, உகந்திருக்கும் அடியவர்களுக்கு அன்றே. அதனை இப்பாட்டில் வெளியிடுகிறார். பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக்கொண்டு நாம் அஞ்சாமல் சிங்கவேள் குன்றத்திலே சென்று தொழுவோம் நெஞ்சமே! என்கிறார் . அல்லிமாதரான பிராட்டியோடே அணைந்திருப்பதனாலே நரசிங்க மூர்த்தியின் கோபாக்நிக்கு நாம் அஞ்சவேண்டியதில்லையென்றும், அவன் தான் நம்முடை நம்பெருமானாகையாலே அந்நிலத்தின் கொடுமைக்கும் அஞ்ச வேண்டிய தில்லையென்றும் குறிப்பிட்டபடி. நம்பெருமான் என்றாலே போதுமாயிருக்க “நம்முடை நம்பெருமான்” என்றது அடியார் திறத்தில் அவன் மிகவும் விதே யனாயிருக்கும்படியைக் காட்டும்.
அல்லிமாதர்புல்க நின்ற ஆயிரந்தோளன் என்ற சொல் நயத்தால்-பிராட் டியை அணைக்கும் போது எம்பெருமானுக்கு ஸந்தோஷ மிகுதியினால் தழுவுதற்கு உறுப்பான தோள்கள் ஸஹஸ்ர முகமாக வளர்கின்றமை விளங்கும். “இவளணைத்தால் இவளைக் கட்டிக்கொள்ள ஆயிரம் தோள் உண்டாமாயிற்று” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.
1.”தாள்களை யெனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்த பேருதவிக்கைம்மாறாத், தோள்களையாரத் தழுவியென்னுயிரை அறவிலை செய்தனன்” என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணினத்தாலுண்டான ஸந்தோஷத்தினால் 2. “தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணை மலர்க் கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய்” என்னும்படி யானால் பிராட்டியின் சேர்த்தியினால் உண்டாகக் கூடிய உடல் பூரிப்பு சொல்ல வேணுமோ ? 1 & 2 திருவாய்மொழி 8-1-10.
(நெல்லி மல்கி இத்யாதி.) நெல்லி மரங்களானவை கல்லிடைகளிலே முளைத்து வளர்ந்து கல்லிடைகளிலே வேரோடுகையாலே அந்த வேர்கள் பருத்துப் பாறைகளைப் பேர்க்கின்றனவாம். பெரியவாச்சான் பிள்ளையும் ”நெல்லி மரங்கள் வேரோடிக் கற்களையுடையப் பண்ணும்” என்றே அருளிச் செய்கிறார்; இங்கே சிலர் சொல்லும் பொருளாவது – நெல்லி மரங்களிலிருந்து இற்றுவிழுகின்ற நெல்லிக்காய்கள் பாறைகளின் மீது விழுந்து கற்களையுடைக்கின்றன என்பதாம். அப்போது, நெல்லி என்றது ஆகுபெயரால் நெல்லிக்காய்களைச் சொல்லவேண்டும்.
புல்லிலை யார்த்து = மூங்கிலிலைகளின் ஓசையைச் சொல்லிற்றாகவுமாம். பனை யோலைகளின் ஓசையைச் சொல்லிற்றாகவுமாம். ஆர்த்தல் – ஒலித்தல்.
சில்லி சில்லென்றொல்லறாத = வடமொழியில் சுவர்க்கோழிக்கு ‘ஜில்லிகா’ என்று பெயர்; அச்சொல்லே இங்குச் சில்லி யென்று கிடக்கிறது. “நல்லை நெஞ்சே ” (நல்ல நெஞ்சே)” என்பன பாட பேதங்கள் …..(9)
English Translation
O good heart, let us worship our Lord who has a thousand arms eager to embrace lotus-dame Lakshmi. He resides in Singavel-Kundram where gooseberry trees break heavy rocks, palm leaves applaud and scavenger kites fill the path with their ‘Chill’ sounds.
