(1015)

(1015)

நாத்தழும்ப நான்முகனு மீசனுமாய் முறையால்

ஏத்த * அங்கோராளரியா யிருந்த வம்மானதிடம் *

காய்த்தவாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழைபோய் *

தேய்த்த தீயால் விண்சிவக்கும் சிங்கவேள் குன்றமே. 

பதவுரை

நான் முகனும் ஈசனும் ஆய்

பிரமனும் சிவனும் கூடிக் கொண்டு

நா தழும்ப

நாக்குத் தடிக்கும்படி

முறையால் ஏத்த

கிரமப்படி ஸ்தோத்ரம் பண்ண

ஓர் ஆள் அரி ஆய்இருந்த அம்மானது இடம்-.

காய்த்த

காய்கள் நிறைந்த

வாகை

வாகை மரங்களினுடைய

நெற்று

நெற்றுகளானவை

ஒலிப்ப

சப்திக்க,

கல் அதர்

கல்வழிகளிலேயுண்டான

வேய் கழை

குழல் மூங்கிற் செடிகள்

போய்

ஆகாசத்தை அளாவிப்போய்

தேய்த்த

(மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினாலுண்டான

தீயால்

நெருப்பினால்

விண் சிவக்கும்

ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற

சிங்கவேள்குன்றம்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1015

நாத் தழும்ப நான்முகனும் ஈசனும் ஆய் முறையால்
ஏத்த, அங்கு ஓர் ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப, கல் அதர் வேய்ங்கழை போய்த்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேழ்குன்றமே.  (1-7-8)

 

        * * *–(நாத்தழும்ப நான்முகனும்.) நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறைவழுவாது துதிக்கும்படியாக விலக்ஷணமான நரசிங்கவுருக் கொண்டு எம்பெருமா னெழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம். அஃது எப்படிப்பட்டது? – காய்கள் காய்த்துத் தொங்கப் பெற்ற வாகை மரங்களின் நெற்றுக்களானவை காற்றடித்துக் கலகலென் றொலிக்கின்றனவாம் சில விடங்களில். மற்றுஞ் சில விடங்களிலோ வென்னில்; ஆகாசத்தளவும் ஓங்கி வளர்கின்ற மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து நெருப்புப்பற்றி யெரிந்து விண்ணுலகத்தையும் சிவக்கடிக்கின்றனவாம்.

        நாத்தழும்ப என்றதனால் இடைவிடாது அநவரதமும் துதிக்கின்றமை தோன்றும். முறையால் ஏத்த என்பதற்கு மாறிமாறித் துதிக்க என்றும் பொருள் கொள்ளலாம். ஒருசந்தை நான்முகனும் மற்றொரு சந்தை சிவனுமாக இப்படியே மாறிமாறி ஏத்துகின்றமையைச் சொன்ன படி.

        நெற்று – உலர்ந்த பழம். அதர் – வழி. வேய் + கழை = வேய்ங்கழை. (8)

English Translation

The four-faced Brahma and Siva alternately chant the Lord’s names till their tongues swell. The Lord who catne as man-lion resides in Singavel-Kundram where dry pods  of the Vagai ‘tree sway and rattle while bamboo thickets amid rocks, rub and create fire that paints the sky red.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top