(286)
ஐய புழுதி உடம்ப ளைந்துஇவள் பேச்சு மலந்த லையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள்
கையி னில்சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பைய ரவணைப் பள்ளி யானோடு கைவைத்து இவள்வருமே.
(287)
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடிகூ டிற்றில
சாய்வி லாத குறுந்தலைச் சிலபிள் ளைகளோ டிணங்கி
தீயி ணக்கிணங் காடிவந்துஇவள் தன்னன்ன செம்மை சொல்லி
மாயன் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே.
(288)
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள்வில்லு மல்லது இழைக்க லுறாள்
கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை
சங்கை யாகிஎன் னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப் பாகின்றதே.
(289)
ஏழை பேதைஓர் பாலகன் வந்துஎன் பெண்மக ளையெள்கி
தோழி மார்பலர் கொண்டு போய்ச்செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறி யாத தென்னும் மூதுரையு மிலளே.
(290)
நாடும் ஊரும் அறிய வேபோய் நல்ல துழாயலங்கள்
சூடி நாரணன் போமிட மெல்லாம் சோதித் துழிதருகின்றாள்
கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவ னோடுஇவளை
பாடு காவ லிடுமி னென்றென்று பார்தடு மாறினதே.
(291)
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்துஇவள் பாடக மும்சிலம்பும்
இட்ட மாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய்ப்புறப் பட்டுநின்றுஇவள் பூவைப்பூ வண்ணா வென்னும்
பட்ட வார்குழல் மங்கை மீர்இவள் மாலுறு கின்றாளே.
(292)
பேச வும்தெரி யாத பெண்மையின் பேதையேன் பேதைஇவள்
கூச மின்றிநின் றார்கள் தம்மெதிர் கோல்கழிந் தான்மூழையாய்
கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய்மொழியாள்
வாச வார்குழல் மங்கை மீர்இவள் மாலுறு கின்றாளே.
(293)
காறை பூணும் கண்ணாடி காணும்தன் கையில் வளைகுலுக்கும்
கூறை யுடுக்கும் அயர்க்கும்தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன் திறம்பி தற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல்இவள் மாலுறு கின்றாளே.
(294)
கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணா லங்கள் செய்துஇவளை
வைத்து வைத்துக் கொண்டுஎன்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த்த லையெழு நாற்றுப் போல்அவன் செய்வன செய்துகொள்ள
மைத்த டமுகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே.
(295)
பெருப்பெ ருத்தகண் ணாலங்கள்செய்து பேணிநம் மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும்ஒன் றெண்ணு கின்றாள்
மருத்து வப்பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன்முன்
ஒருப்ப டுத்திடு மின்இவளை உலகளந் தானி டைக்கே.
(296)
ஞால முற்றும்உண்டு ஆலி லைத்துயில் நாரா யணனுக்குஇவள்
மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை
கோல மார்பொழில் சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலை பத்தும் வல்ல வர்கட்கு இல்லை வருதுயரே.
