(234)
அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை
மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின்பின்
என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
(235)
பற்று மஞ்சள்பூசிப் பாவை மாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்துஎங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி யுடைவேடர் கானிடைக் கன்றின்பின்
எற்றுக்குஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
(236)
நன்மணி மேகலை நங்கை மாரொடு நாள்தொறும்
பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே
கன்மணி நின்றதிர் கா னதரிடைக் கன்றின்பின்
என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே.
(237)
வண்ணக் கருங்குழல் மாதர் வந்துஅலர் தூற்றிட
பண்ணிப் பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே
கண்ணுக் கினியானைக்கா னதரிடைக் கன்றின்பின்
எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே.
(238)
அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே
எவ்வம் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின்பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.
(239)
மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்
படிறு பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே
கடிறு பலதிரி கா னதரிடைக் கன்றின்பின்
இடறஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
(240)
வள்ளி நுடங்கிடை மாதர் வந்துஅலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோழ ரோடு திரியாமே
கள்ளி யுணங்கு வெங்கா னதரிடைக் கன்றின்பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே.
(241)
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டஅப் பாங்கினால்
என்இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்துயான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின்பின்
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே.
(242)
குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனைநான்
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுடை
கடியவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்
கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
(243)
என்றும் எனக்குஇனி யானை என்மணி வண்ணனை
கன்றின் பின்போக்கி னேனென்று அசோதை கழறிய
பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட் டன்சொல்
இன்தமிழ் மாலைகள் வல்ல வர்க்குஇட ரில்லையே.
