(338)
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை
குலம்பாழ் படுத்துக் குலவிளக் காய்நின்ற கோன்மலை
சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்க ளாடும்சீர்
சிலம்பாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.
(339)
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித் தான்பொருந் தும்மலை
எல்லா விடத்திலும் எங்கும் பரந்துபல் லாண்டொலி
செல்லா நிற்கும் சீர்த்தென் திருமாலிருஞ் சோலையே.
(340)
தக்கார்மிக் கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை
எக்கால மும்சென்று சேவித் திருக்கும் அடியரை
அக்கா னெறியை மாற்றும் தண்மாலிருஞ் சோலையே.
(341)
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க் கொழியக் கோவர்த் தனத்துச்செய் தான்மலை
வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி
தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே.
(342)
ஒருவாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன் சென்றுறை யும்மலை
கருவாரணம் தன்பிடிதுறந் தோட கடல்வண்ணன்
திருவாணைகூறத் திரியும் தண்மாலிருஞ் சோலையே.
(343)
ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை
சாவத் தகர்த்த சாந்தணி தோள்சது ரன்மலை
ஆவத் தனமென்று அமரர் களும்நன் முனிவரும்
சேவித் திருக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.
(344)
மன்னர் மறுக மைத்துனன் மார்க்குஒரு தேரின்மேல்
முன்னங்கு நின்று மோழை யெழுவித்த வன்மலை
கொன்னவில் கூர்வேற் கோன்நெடு மாறன்தென் கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென்திரு மாலிருஞ் சோலையே.
(345)
குறுகாத மன்னரைக் கூடுகலக்கிவெங் கானிடைச்
சிறுகால்நெறியே போக்குவிக் கும்செல்வன் பொன்மலை
அறுகால் வரிவண்டுகள் ஆயிரநாமம் சொல்லி
சிறுகாலைப்பாடும் தென்திரு மாலிருஞ் சோலையே.
(346)
சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலிகொடுத்து ஆவத் தனம்செய் அப்பன்மலை
இந்திர கோபங்கள் எம்பெரு மான்கனி வாயொப்பான்
சிந்தும் புறவில் தென்திரு மாலிருஞ் சோலையே.
(347)
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்மலை
பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலைவாய்த்
தெட்டித்திளைக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.
(348)
மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலைதன்னை
கருதி யுறைகின்ற கார்க்கடல் வண்ணனம் மான்தன்னை
விரதம்கொண் டேத்தும் வில்லிபுத் தூர்விட்டு சித்தன்சொல்
கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே.
