(328)
கதிரா யிரமிரவி கலந்தெரித் தாலொத்த நீள்முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
அதிரும் கழற்பொருதோள் இரணிய னாகம் பிளந்துஅரியாய்
உதிர மளைந்தகையோ டிருந்தானை உள்ளவா கண்டாருளர்.
(329)
நாந்தகம் சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்துபெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க
வேந்தர்தலைவஞ் சனகராசன்தன் வேள்வியில் கண்டாருளர்.
(330)
கொலையானைக் கொம்புபறித்துக் கூடலர்சேனை பொருதழிய
சிலையால் மராமர மெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
தலையால் குரக்கினம்தாங்கிச்சென்று தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்.
(331)
தோயம் பரந்த நடுவுசூழலில் தொல்லை வடிவுகொண்ட
மாயக் குழவியதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும்
வீயப் பொருது வியர்த்துநின்றானை மெய்ம்மையே கண்டாருளர்.
(332)
நீரேறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறு வாசகஞ் செய்யநின்ற திருமாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு
தேரேற்றி சேனை நடுவுபோர் செய்யச்சிக்கெனக் கண்டாருளர்
(333)
பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறிதுவரை
எல்லாரும்சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.
(334)
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ள விடம்வினவில் உமக்குஇறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை யாகிப்பாரதம் கைசெய்யக் கண்டாருளர்
(335)
நாழிகை கூறிட்டுக் காத்துநின்ற அரசர்கள் தம்முகப்பே
நாழிகை போகப் படைபொருதவன் தேவகி தன்சிறுவன்
ஆழிகொண்டு அன்றுஇரவி மறைப்பச் சயத்திர தன்தலையை
பாழி லுருளப் படைபொருதவன் பக்கமே கண்டாருளர்.
(336)
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம்
திண்ணம் விழுங்கியுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற் கரியதோ ரேனமாகி இருநிலம் புக்கிடந்து
வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்.
(337)
கரிய முகில்புரை மேனிமாயனைக் கண்ட சுவடுரைத்து
புரவி முகம்செய்து செந்நெலோங்கி விளைகழ னிப்புதுவை
திருவிற்பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும்
பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே.
