ஏழாந் திருமொழி
(3297)
சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்,
ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று,
காலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே.
(3298)
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கொதில தந்திடும்,என்
வள்ள லேயோ வையங் கொண்ட வாமனாவோ என்றென்று,
நள்ளி ராவும் நண்பகலும் நானிருந் தோலமிட்டால்,
கள்ள மாயா உன்னை யென்கண் காணவந் தீயாயே.
(3299)
ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றென்று
கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால்,
பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே.
(3300)
காண வந்தென கண்முகப்பே தாமரைக் கண்பிறழ,
ஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று,
நாண மில்லாச் சிறுதகையேன் நானிங் கலற்றுவதென்,
பேணிவானோர் காணமாட்டாப் பீடுடை யப்பனையே?
(3301)
அப்பனே அடலாழியானே, ஆழ்கட லைக்கடைந்த
துப்பனே,உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று,
எப்பொழுதும் கண்ண நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து,
இப்போழுதே வந்திடாயென் றேழையேன் நோக்குவனே.
(3302)
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே,
நாக்கு நீள்வன் ஞான மில்லை நாடோறு மென்னுடைய,
ஆக்கை யுள்ளூ மாவி யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்,
நீக்க மின்றி யெங்கும் நின்றாய் நின்னை யறிந்தறிந்தே.
(3303)
அறிந்து அறிந்து தேறித் தேறி யானென தாவியுள்ளே,
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மல மாகவைத்து,
பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்
நறுந்து ழாயின் கண்ணி யம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே.
(3304)
கண்டு கொண்டென் கைக ளார நின்திருப் பாதங்கள்மேல்,
எண்டி சையு முள்ள பூக்கொண் டேத்தி யுகந்துகந்து,
தொண்ட ரோங்கள் பாடி யாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே,
வண்டு ழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.
(3305)
இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்,
கடவ னாகிக் காலந் தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்,
மடவன் நெஞ்சம் காதல் கூர வல்வினை யேன்அயர்ப்பாய்,
தடவு கின்றே னெங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே?
(3306)
சக்க ரத்தண் ணலேயென்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்ற லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,
மிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை,என்
தக்க ஞானக் கண்க ளாலே கண்டு தழுவுவனே.
(3307)
தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை,
குழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்,சொல்
வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்,
தழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே.
