(688)
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே
(689)
கண்டாரி கழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லால றியாக்கு லமகள்போல்
விண்டோய்ம திள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே
(690)
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும்கு டிபோன்றி ருந்தேனே
(691)
வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே
(692)
வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே
(693)
செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்
அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே
(694)
எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்
டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே
(695)
தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே
(696)
நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே
(697)
விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த
கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே