(2824)
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே.
(2825)
நயவேன் ஒரு தெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்
புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்
அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே?
(2826)
அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்
கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப்பப்,பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்
படரும் குணன், எம்இராமா னுசன்றன் படியிதுவே.
(2827)
படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்
குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்
கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்
அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே.
(2828)
ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே
போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம்
வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின்வண்ணம்
நோக்கில் தெரிவிரித் தால், உரை யாயிருந்த நுண்பொருளே.
(2829)
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார்த்தரமோ?
இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே
தெருளும் தெருள்தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே.
(2830)
சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே.
(2831)
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர் களெல்லாம்
அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே.
(2832)
ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே.
(2833)
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத்
துரக்கும் பெருமை இராமா னுசனென்று சொல்லுமினே.
(2834)
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே.