ஐந்தாந் திருமொழி
(1288)
தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி, மன்னு
காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை,
பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட, எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
(1289)
கவ்வைவா ளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து,இலங்கை
வவ்விய இடும்பை தீரக் கடுங்கணை துரந்த எந்தை,
கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த,
தெய்வநீர் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
(1290)
மாத்தொழில் மடங்கக் செற்று மறுதிற நடந்து வன்தாள்
சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை,
நாத்தொழில் மறைவல் லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
(1291)
தாங்கருஞ் சினத்து வன்தாள் தடக்கைமா மருப்பு வாங்கி,
பூங்குருந் தொசித்துப் புள்வாய் பிளந்தெரு தடர்த்த எந்தை,
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்துவண் டிரிய வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
(1292)
கருமக ளிலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை,
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவி லாத,
திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
(1293)
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலு மரியும் மாவும்,
அண்டமும் சுடரும் அல்ல ஆற்றலு மாய எந்தை,
ஓண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங் கண்ட,
திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.
(1294)
குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்
தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
(1295)
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும்,
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை,
பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய,
செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.
(1296)
பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை,
மூவரி லெங்கள் மூர்த்தி இவன்,என முனிவரோடு,
தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.
(1297)
திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை
மங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார்,
பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும்
வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே.
