(2607)

(2607)

இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,

இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த,

நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,

தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.

 

பதவுரை

நெஞ்சமே

ஓ மனமே!

நமன் தமர்கள்

யமபடர்கள்

இளைக்க பற்றி

பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து

இளைப்பு எய்த

அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி

நாய்தந்து மோதாமல்

நாய்களை ஏவி நலியாமற்படி

நங்குவான் நல்காப்பான்

(எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யாவிட்டாலும் சரி;

தான்

அந்த எம்பெருமான்தான்

எவ்வுயிர்க்கும்

எல்லாப்பிராணிகளுக்கும்

தாய் தந்தை

தாயும் தமப்பனுமாவன்;

சொன்னேன்

(இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்;

இளைப்பாய் இளைப்பாய்

இனி நீ  அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு.

 

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  (இளைப்பாயிருப்பாய்.) எம்பெருமான் சில ஸமயங்களில் தனது பொருளைப் பிரகாசப்படுத்துவான்; சில ஸமயங்களில் உதாஸீநஸாப்போலே உபேக்ஷையாயிருந்திடுவன். அவன் எப்படியிருந்தாலும் நம்முடைய அத்யவஸாயம் மாத்திரம் மாறக்கூடாது; அவன் நம்மை ரக்ஷிக்கும்போதோடு ரக்ஷியாதபோதோடு வாசியற அவனையே நாம் ஸகலவித பந்துவுமாகக் கருதி விச்வஸித்திருக்கவேணும்- என்கிற சாஸ்த்ரார்த்தத்தைத் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிற முகத்தாலே அஸ்மதாதிகளுக்குத் தெரிவிக்கிறார் இதில்.

நமன்தமர்கள் இளைக்கப் பற்றி, இளைப்பு எய்த காய் தந்து மோதாமல் (எம்பெருமான்) நல்குவான் நல்காப்பாள்; தானே எவ்வுயிர்க்கும் தாய் தந்தை; (இதை) நெஞ்சமே! (உனக்குச்) சொன்னேன்; (இனி) இளைப்பாய் இளைப்பாய்.

*“காவலிற் புலனை வைத்துக் கலிதன்னைக் கடத்தப் பாய்ந்து நாவவிட்டுழி தருகின்றோம்  நமன்றமர் தலைகள்மீதே”  (திருமாலை 1) என்றபடி யமகிங்கரர்களை நாம் தகர்க்கும்படியும் அவர்களால் நமக்கு எள்ளளவு துன்பமும் நேரிடாதபடியும் எம்பெருமான் நம்மைக் காத்தருள்பவன். அப்படி அவன் நம்மைக் காத்தருளாவிடினும் அவனிடத்தில் நம்முடைய ப்ரதிபத்தி குலையக்கூடாது; *சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களம் மேலாத் தாய் தந்தையும் அவரேயினி யாவாரே” (திருவாய்மொழி 5-1-8) என்றபடி அவனையே நாம் ஸகலவித பந்துவுமாக விச்வஹித்திருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அவன் நம்மை ரக்ஷிக்கும்போதுதான் அவனிடத்தில் நாம் ப்ரதிபத்தி வைக்க வேண்டியது, உபேக்ஷித்த காலத்தில் நாமும் அவனை உபேக்ஷித்து விட வேண்டியது என்று ஒருகாலும் கருதவொண்ணாது. நெஞ்சமே! இவ்விஷயம் எல்லார்க்கும் எளிதில் தெரியமாட்டாது; ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை அன்பினால் உனக்குக் காதுபடச் சொன்னேன்; இந்த என் வார்த்தையை நீ உறுதியாகக் கடைப்பிடித்திருப்பாயாகில் உனக்கு ஒருபோதும் இளைப்பு நேரிடாது; இந்த வார்த்தையை நீ அலக்ஷியம் செய்து விச்வாஸம் குலைய நின்றாயாகில் உனக்கு மிக்க இளைப்பு நேரிடும். உண்மை இது; இனி நீ உன் கருத்தின்படி ஒழுகலாம் என்றாயிற்று..

யமபடர்கள் நம்மை வந்து பிடிக்கும்போதே நமக்கு மிக்க க்லேசம் உண்டாகும்படி பிடிப்பார்களாதலால் “நமன்றமர்கள் இளைக்கப்பற்றி” என்றார். அவர்கள் நம்மைப் பிடித்துக்கொண்டு போய், செந்நாய் கருநாய் வெறிநாய் முதலியவற்றை ஏவி நம்மை அளவற்ற க்லேசத்துக்கு ஆளாக்குவர்களாதலால் “இளைப்பெய்த நாய் தந்து மோதாமல்” என்றார்.

நல்குவான் நல்காப்பான் = நல்குதலாவது அருள்பரிதல்; அருள் செய்தாலும் செய்வன். அருள் செய்யாவிடினும் செய்யா தொழிவன் என்றபடி. அவன் எது செய்தாலும் ‘களைவாய் துன்பங் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” (திருவாய்மொழி, 5-8-8) என்றிருப்பதே நமக்கு ஸ்வரூபம் என்கிறார் ஈற்றடியால்.

இளைப்பாய் இளையாப்பாய் = எக்காலத்திலும் அவனே எவ்வுயிர்க்கும் தாய் தந்தை’ என்கிற அத்யவஸாயம் குலையாதிருந்தால் நீ தளர்வடையாமலிருக்கலாம்; அந்த அந்யவஸாயம் குலைந்தால் தளர்வடையாய்; உள்ள விஷயத்தை உனக்கு நான் சொல்லிவிட்டேனாகையால் இனி நீ தளர்ந்தாலும் தளர், தளராதொழிந்தாலும் ஒழி என்கிறார்.

 

English Translation

O Heart! What I say may make you swoon; Yama’s agents will unleash their hounds on us and mangle us sorely, But do not lose strength; the oil-seeing lord who is mother and father to all souls will not see this happen.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top