(2606)

(2606)

காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,

மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்

தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம்,

வீற்றிருக்குமிடம் காணா திளைத்து.

 

பதவுரை

என் மனத்தே

எனது நெஞ்சினுள்ளே

மாலால் குடி புகுந்தார்

திருமால் வந்து சேர்ந்துவிட்டார்;

வல் வினையார் தாம்

(இதுவரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.

வீற்றிருக்கும் இடம் காணாது

(இனிமேலும்) அதிகாரம் செலுத்திக்கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்

கால் பொத திரிந்து

கால் நோவத்திரிந்து அலைந்ததனால்

மேலால்

முன்பெல்லாம்

தருக்கும்

என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த

இடம் பாட்டினொடும்

பெருமையோடே

இளைத்து

வருத்தமுற்று

இன்நாள்

இப்போது

கத்துவாரம்

கத்திக்கொண்டு கிடக்கின்றன போலும்.

 

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (காலே பொதத் திரிந்து.) எம்பெருமானுடைய திருவடிகள் தமது திருவுள்ளத்தில் வந்து சேர்ந்தனவாகக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார். அவயவியான வயக்தியை விட்டு அவபவமான திருவடிகள் தனியே வந்து சேரமாட்டாவாகையால், எம்பெருமானே தமது திருவுள்ளத்தில் வந்து சேர்ந்தமையைக் கூறினபடியாய்த்து. அதை இப்பாட்டில் “மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே” என்று வ்யத்தமாக அருளிச்செய்து, இன்றுவரையில் என்னுடைய நெஞ்சினுள் துக்கங்களும் பாவங்களும் நித்யவாஸம் பண்ணிக்கொண்டு செங்கோல் செலுத்திக்கிடந்தன; இப்போது ,இவற்றுக்கு இங்கு இடம் கிடையாமையாலே ‘எங்கே போய்க் குடியிருக்கலா’மென்று அவை அலைந்து திரிந்து வருந்துகின்றன என்று அருளிச் செய்கிறார்.

என் மனத்தே மாலார் குடிபுகுந்தார் = அடியவர்களிடத்திலே மிக்க மோஹங் கொண்டிருக்கின்ற எம்பெருமான் இன்று என்னுடைய நெஞ்சினுள்ளே குடிபுகுந்துவிட்டார்; இருள் மூடிக்கிடந்தவிடத்தில் ப்ரகாசம் வந்து சேர்ந்தால் பிறகு இருள் தன்னடையே விலகிப்போய்விடுவதுபோல், இதுவரையில் இங்கே குடியிருந்த பாவங்கள் இனி இவ்விடத்தில் தங்கமாட்டாமல் கிளம்பிப்போய் ‘இனி நாம் எங்கே சுகமாக வாழலாம்’ என்று இடந்தேடுகின்றன. “ஊரும் நாடு முலகமும் தன்னைப்போல், அவனுடைய பேருந் தார்களுமே பிதற்ற” (திருவாய்மொழி – 6, 7, 2) என்றபடி நான் வாழ்கிற வூரிலே எல்லாரும் என்னைப்போலவே யிருப்பர்களாதலால் அவை குடிபுகுவதற்கு எங்கே இடம் கிடைக்கும்? கால் பாவி நிற்க எங்கும் இடங்கிடைக்காமையினால் பரிச்ரமப்பட்டுத் திரிந்து அலைந்து பார்த்தன. எங்கும் இடம் வாய்க்கவில்லை; “ஐயோ! இதுவரையில் ஆழ்வாருடைய நெஞ்சில் செங்கோல் செலுத்திக் கொண்டு வாழ்ந்த வெமக்கு இன்று இக்கதி நேர்ந்து விட்டதே! என் செய்வோம்!” என்று கத்துகின்றன.

“வல்வினையார்தாம் மேலால் தருக்குமிடம்பாட்டினொடும் வீற்றிருக்குமிடம் காணாது காலே பொதத் திரிந்து இளைத்துக் கத்துவர்” என்று அந்வயித்துக் கொள்க.

அசேதநங்களான வல்லினைகளை வல்வினையார்தாம் என்று சிறப்பித்துக் கூறுவது ஏன்;  என்னில்; “உவப்பினுமயிர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்பினும் பால்திணை விழுக்கினுமியல்வே” என்பர் நன்னூலார்; இழிவு தோற்றச் சொல்ல வேண்டும்போதும் சீற்றந்தோற்றச் சொல்ல வேண்டும்போதும் பால் திணைகளை மாறாடிச் சொல்லலாம் என்றிருப்பதனால், சீற்றமும் இழிவும் தோற்ற இங்கு வினையார் என உயர்திணையாகக் கூறுகின்றாரென்க. துஷ்டர்களைக்கண்டால் ‘ஸ்வாமி எழுந்தருளுகிறார்” என்று சொல்லுவதுண்டிறே, அதுபோலக் கொள்க.

மேலால் தருக்குமிடம்பாட்டினொடும் வீற்றிருக்குமிடம் காணாது = மேலால் என்பதற்கு. இனிமேல் என்றும், இதற்கு முன்பு என்றும் பொருள் கொள்ளலாம். இதுவரையிலும் என்னை நெருக்கிக்கொண்டு பெருமதிப்போடு எழுந்தருளியிருந்த இந்த வல்வினையார்கள் இப்படியே இன்னமும் எழுந்தருளியிருக்க இடம் காணாமல் என்றபடி, இனிமேல் பிறரை ஹிம்ஸித்துக் கொண்டு வைபவமாகக் குடியிருப்பதற்கு உரிய இடம் காணாமல் என்றுமாம். இடம்பாடு- பெருமை.

வீற்றிருக்குமிடம் = வீற்றிருத்தலாவது வீறுதோற்ற இருந்தால்; வீறு- பெருமை. தனது பெருமைக்குக் குறையில்லாமல் மேனாணிப்போடேயிருத்தல் வீற்றிருத்தலெனப்படும். ‘தாங்கள் விழுந்துகிடக்க இடம் கிடைக்காமல்’ என்று இழிவாகச் சொல்லவேண்டியதை இப்படி மாற்றியருளிச்செய்தாரென்க.

எப்படியாவது ஓரிடத்தில் குடியிருந்து தீரவேண்டியவர்கள் ஓரிடத்தில் இடம் கிடைக்காவிடினும் மற்றுமெங்கேயாவது கிடைக்குமோவென்று பலவிடங்களிலும் திரிந்தலைந்து தடுமாறிப் பார்ப்பதுபோல இப்பாவங்களும் கால்நோவப் பலவிடங்களிலும் திரிந்து பார்த்தனவென்கிறார். காலேபோதத்திரிந்து என்பதனால், அப்படி திரிந்து பார்த்தும், * “பொலிக பொலிக பொலிக! பேபிற்று வல்லுயிர்ச் சாபம், நலியுங்கெடுங் கண்டுகொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல், மலியப்புருந்திசை பாடி பாடி யுழிதரக் கண்டோம்.” (திருவாய்மொழி, 5-2-1) என்னும்படியான இந்நிலத்திலே கால் பாவுவதற்கு எங்கும் இடம் நேராமையாலே, கத்துவராம் = ‘ஐயோ! எங்கள் குடியிருப்புப் போயிற்றே!’ என்று வாய்விட்டுக் கதறுகின்றனவாம்.

இன்று எம்பெருமான் என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே எழுந்தருளினமையால் என்னைப் பற்றிக் கிடந்த பாவங்களெல்லாம் பறந்துபோயின என்று சொல்ல வேண்டியதை இங்ஙனே ஒரு சமத்காரமாக விரிந்துரைத்தாரெனக் கொள்க.

“இனநாள்” என்றும் “இந்நாள்” என்றும் பாடபேதங்களுண்டு; பொருள் ஒன்றை.

 

English Translation

The adorable Lord has entered my heart.  All my tyrant karma kings with their booty of wicked deeds have no place to rest, and are spending their days roaming and moaning with sore feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top