(2262)

(2262)

பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், – கனவில்

மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே – மிகக்கண்டேன்

ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,

வான்திகழும் சோதி வடிவு.

 

பதவுரை

பகல் கண்டேன்

இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல்விடிவைக் கண்டேன். (அதாவது என்னவென்றால்)

நாரணனை கண்டேன்

ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதிதயனைக்கண்டேன்,

மீண்டு

இன்னமும்,

கணவில்

மாநஸஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்

மிக மெய்யே

மிகவும் ப்ரத்யக்ஷமாக

ஊன் திகழும் நேமி

திருமேனியில் விளங்குகின்ற திருவாழியையுடையவனும்

ஒளி திகழும் சே அடியான்

பிரகாசம் மிக்கதிருவடிகளையுடையவனுமான அப்பெருமானுடைய

வான் திகழும்

பரமபதத்திலே விளங்குகின்ற

சோதி வடிவு

சோதிமயமான வடிவத்தை

மிக கண்டேன்

(இங்கே) நன்று ஸேவிக்கப்பெற்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் தமக்கு வாய்த்த படியை வாயாரப் பேசுகிறார். இந்த ஸம்ஸாரத்தில் முப்பது நாழகைக்கு ஒருமுறை இராப்பொழுதும் பகற்பொழுதும் மாறி மாறி வந்தாலும் எம்பெருமானுடைய ஸேவை கிடைக்கப்பெறாத காலத்தைக் காளராத்திரியாகவே ஞானிகள் கருதுவர்கள். ஸூரியன் விளங்குங்காலம் பகற்பொழுது என்றும், அங்ஙனல்லாத காலம் இராப்பொழுதென்றும் ஸாமாந்யர்கள் நினைத்திருப்பர்களாயினும், விஷேச ஞானிகள் அங்ஙனம் நினைத்திரார்கள். பகவத் ஸேவை வாய்க்குங்காலம் எதுவோ, அதுவே பகல், மற்றது இரவு – என்பதை இவர்களது ஸித்தாந்தம். அதனை அடியொற்று ஆழ்வார் “பகற் கண்டேன்“ என்கிறார். எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றேன் என்பது இதன் கருத்து. இக்கருத்தை பிறர் தெரிந்து கொள்ளுதல் அதிதாகையாலே தாமே இதனை விவரணஞ் செய்தருள வேண்டி “நாரணனைக் கண்டேன்“ என்கிறார்.

இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானவருளிச் செயல்காண்மின் – “(பகற்கண்டேன் தாளராத்ரியாய்ச் செல்லாதே விடியக்கண்டேன் வடுகர் வார்த்தைபோலே தெரிகிறதில்லை, எங்களுக்குத் தெரியும்படி சொல்லீரென்ன, (நாரணனைக் கண்டேன்) அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்.

இப்படி இவர் “பகற்கண்டேன்“ என்றும் “நாரணனைக் கண்டேன்“ என்றும் சொல்லக் கேட்டவர்கள் ‘நீர் அடிக்கடி கண்டேன் கண்னே என்கிறதெல்லாம் கனவுபோல நெஞசில் தோற்றுகிற தோற்றத்தைதானே சொல்லுகிறீர் இப்போது கண்டேனென்கிறதும் அப்படிப்பட்ட தோற்றத்தானே‘ என்ன இப்போது நான் விலக்ஷணமாகக் கண்டேனென்கிறார் மற்ற அடிகளால், பரமபதத்திலே “ஸதா பச்யந்தி ஸூரய“ என்று நித்யஸூரியர்கள் கண்டுகொண்டிருக்கும் திவ்யமங்கள விக்ரஹத்தை மெய்யே காணப்பெற்றே னென்றாராயிற்று.

வான் திகழும் சோதிவடிவு கைகின்ற சோதி வடிவை என்று முரைப்பர்.

 

English Translation

I have seen the light of day, I have seen Narayana, First I saw him in my dream state. Then I saw him in reality. He wields a conch, his feet are lotus red, he has the radiance of the sky.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top