(2261)

(2261)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,

ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், – ஆர்ந்த

அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்

படிக்கோலம் கண்ட பகல்?

 

பதவுரை

அடிமை நேர்ந்தேன்

உனது திருவடிகளில் கைங்கரியம்பண்ண நேர் பட்டேன்

ஒரு கண் மலம் அது நினைந்தேன்

அழகிய தாமரைப் பூப்போன்ற அத்திருவடிகளைச் சந்தித்தேன்

உன் சே அடிமேல்

உனது அத்திருவடிகள் விஷயத்திலே

அன்பு ஆய் ஆர்ந்தேன்

அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்

ஆர்ந்த

பரிபூர்ணமான

அடி கோலம்

திருவடிகளினழகை

கண்டவர்க்கு

ஸேவிக்கப்பெற்றவர்கட்கு

படி கோலம் கண்ட முன்னைப் பகல் என்கொல்

திருமேனியின் அழகை ஸேவிக்கப்பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?

(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையேயன்றோ மிகச் சிறந்தது)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திருவடிகளிலே தமக்கு அளவுகடந்த அன்பு அமைந்திருக்கும்படியை முன்னடிகளில் வெளியிட்டார். அதற்குமேல் ‘எம்பெருமானுடைய‘ திருமேனியெல்லாம் உத்தேச்யமன்றோ திருவடியை மாத்திரமே பேசுகின்றீரே, மற்ற அவயங்கள் உத்தேச்யமல்லவோ உமக்கு?‘ என்று ஒரு கேள்வி. பிறந்தாகக்கொண்டு, திருவடியின் அழகுக்குமுன்னே திருமேனியின் அழகு ஒரு பொருளாய்த் தோற்றுமோ? என்கிறார் பின்னடிகளில்.

ஒண்கமலம் அது நினைந்தேன் – ‘கமலம்போன்ற திருவடி‘ என்று சொல்லவேண்டுமடத்து, கமலம் என்றே சொன்னது – ரூபகாதிசயோக்தி யலங்காரமென்க.

உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்தேன் – அன்பு என்று ஒரு வஸ்துவும் அதனையுடைய நான் என்று ஒரு வஸ்துவும் ஆக இரண்டு

வஸ்துக்களின்றியே அன்புதானே நானாக வடிவெடுத்ததென்னப் பொருந்திவிட்டேன் என்கை.

ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்க்கு முன்னடிப்படிககோலகண்ட பகல் என்கொல்? – உலகளந்தகாலத்தில், கீழுலகத்திலுள்ளவர்கட்கும் மேலுலகத்திலுள்ளவர்கட்கும் திருவடிஸேவை கிடைத்தது, நடு உலகத்திலுள்ளவர்கட்குத் திருமேனிஸேவை கிடைத்து, திருமேனியை ஸேவிக்கப் பெற்றவர்களிற் காட்டிலும் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றவர்களின் பாக்கியமே சிறந்த பாக்கியமாதலால் திரு மேனியிற் காட்டிலும் திருவடியே பரம உத்தேச்யமாம் என்பது இப்பாட்டின் ஸாரமான கருத்து.

“அடிக்கோலம் கண்டவர்க்கு“ என்றதை – தன்மையில் வந்த படர்க்கையாகக் கொண்டு, இன்று திருவடிகளை ஸேவிக்கப்பெற்ற வெனக்கு இதற்குமுன் திருமேனியை ஸேவிக்கப்பெற்ற காலம் என்னாவது? அக்காலத்தைவிட இக்காலம் எனக்குசிறந்தது – என்பதாகவும் உரைக்கலாம்.

 

English Translation

Taking me into service, O Lord, -you gave me the love of your feet and the grace of your lotus heart, Having seen and enjoyed the fullness of your feet, will we not see again the beauty of your manikin frame of yore?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top