(985)
மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த மன்னவன்பொன்னிறத்துரவோன்,
ஊன்முனிந்தவனதுடலிருபிளவா உகிர்நுதிமடுத்து, அயனரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் தவிர்த்தவன், தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
பதவுரை
|
ஒருகால் |
– |
(பஞ்சவடியில் எழுந்தருளியிருந்த) ஒரு ஸமயத்தில் |
|
மான் முனிந்து |
– |
மாரிசமாயமானின் மேற் சீறி |
|
வரி சிலை வளைத்த மன்னவன் |
– |
அழகிய வில்லை (அந்த மான் மேலே) வளைத்தெறிந்த செருக்கனாயும் |
|
பொன் நிறத்து உரவோன் |
– |
பொன்போன்ற நிறத்தையுடைய ஹிரண்யனென்னுமொரு பலிஷ்டனுடைய |
|
ஊன் முனிந்து |
– |
உடலை ஒழித்து விடுவதாகச் சீற்றங்கொண்டு |
|
அவனது உடல் இரு பிளவு ஆ |
– |
அவ்வசுரனுடைய சரீரம் இரண்டு பிளவாம்படி |
|
உகிர் நுதி மடுத்து |
– |
நகங்களின் நுனியை (அவ்வுடலில்) அழுத்தினவனாயும், |
|
அயன் தான் அரனை முனிந்து |
– |
நான்முகக் கடவுள் சிவன் மேல் சீறி |
|
இட்ட |
– |
(அவனுக்குக்) கொடுத்த |
|
வெம் திறல் சாபம் தவிர்த்தவன் |
– |
மிகவும் க்ரூரமான சாபத்தைப் போக்கினவனாயுமுள்ள எம் பெருமான் (எங்குள்ளானெனில்;) |
|
தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த |
– |
தபஸ்விகளில் தலைவரான பகீரதர் கொண்டுவந்த |
|
கங்கையின் கரைமேல் |
– |
கங்கையின் கரைமீதுள்ள |
|
வதரியாச்சிராமத்து உள்ளான் |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலுளன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த மன்னவன் பொன்னிறத்துரவோன்*
ஊன்முனிந்தவனதுடலிருபிளவா உகிர்நுதிமடுத்து * அயனரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் தவிர்த்தவன் * தவம்புரிந்துயர்ந்த ‘ மாமுனிகொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
***-[மான்முனிந்தொருகால்.) மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரமபக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமையியற்றி மஹாத்ரோஹியான ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்தொழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்மஹத்திசாபத்தைத் தொலைத்தருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.
அயனரனைத்தான் முனிந்திட்ட வெந்திறல்சாபந்தவிர்த்த வரலாறு:– ஒரு காலத்திலே பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும், அவன் ‘இதற்கு என் செய்வது’ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவந் தொலையப் பிச்சையெடுக்கவேண்டும் : என்றைக் குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்’ என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ்’ சென்று பிச்சை யேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒரு நாள் பதரிகாச்ரமத்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது அப்பெருமான் ‘அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம்.
தவம்புரிந்துயர்ந்தமாமுனிகொணர்ந்த என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர்;- விச்வாமித்ரன் க்ஷத்ரியனாயிருக்கச் செய்தேயும் தவம் புரிந்து ப்ரஹ்மர்ஷித்வமாகிற உயர்த்தி பெற்றானாகையாலே தவம்புரிந்துயர்ந்த மாமுனி யென்று விச்வாமித்ரனைச் சொல்லுகிறது. அவன் கொணர்ந்த கங்கை யென்றது. ஸ்ரீராமலக்ஷ்மணர்களைத் தன்னுடைய யஜ்ஞரக்ஷணார்த்தமாக அழைத்துக்கொண்டு போனபோது கங்கையின் வரலாறுகளைச் சொல்லிக் கொண்டே கங்கைக்கரைமேல் அழைத்துக்கொண்டு போயினனாதலால். தவம் புரிந்துயர்ந்த மாமுனியினால் (ஸ்ரீராமலக்ஷ்மணர்களைத் தன் கரைமீது) கொண்டு வரப்பெற்ற கங்கை என்ற தாயிற்று. இப்பொருள் கொள்வது அரியவழி யென் றெண்ணின ஸ்ரீபராங்குச தாஸரென்பவர் “மாமுனி புகன்ற கங்கையின் கரை மேல்” என்று பாடத்தைத் திருத்திக்கொண்டால் நன்றாகுமே என்றாராம்; அதை நம்பிள்ளை கேட்டருளி உள்ள பாடத்திற்கு நாம் பொருளுரைக்கக் கட மைப் பட்டிருக்கிறோமேயன்றி இல்லாததொரு பாடத்தைக் கற்பிக்க வல்லோமல்லோம்” என் றருளிச் செய்தாராம்.
இனி, தவம்புரிந்துயர்ந்தமாமுனி என்று பகீரதமுனியையே சொல்லிற்றாய், அவனால் கொண்டுவரப்பட்ட கங்கை யென்று உரைத்தலும் ஒன்று. ….. (அ)
English Translation
My Lords in the king in exile who killed the wonder-deer. He tore into the mighty chest of the Asura Hiranya Kasipu with his sharp claws. He is the benevolent one who rid the skull bearing Siva, the curse given by Brahma in anger. On the banks of the river Ganga, — brought out through the great penance performed by Bhagiratha, He resides in Vadari-Ashrama.
