(984)

(984)

வெந்திறல்களிறும்வேலைவாயமுதும் விண்ணொடுவிண்ணவர்க்கரசும்,

இந்திரற்கருளியெமக்குமீந்தருளும் எந்தையெம்மடிகளெம்பெருமான்,

அந்தரத்தமரரடியிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி,

மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

 

பதவுரை

வேலை வாய் வெம்திறல் களிறும்

கடலில் நின்றுமுண்டான மிக்க மிடுக்கையுடைய ஐராவதமென்கிற யானையையும்

அமுதும்

அம்ருதத்தையும்

விண்ணொடு

ஸ்வர்க்கலோகத்தையும்

விண்ணவர்க்கு அரசும்

தேவர்களுக்கெல்லாம் அரசனாயிருக்குந் தன்மையையும்

இந்திரற்கு அருளி

இந்திரனுக்குக் கொடுத்தருளி

எமக்கும் ஈந்தருளும்

நமக்கும் வேண்டிய அருளைச் செய்கிற

எந்தை எம் அடிகள் எம்பெருமான்

ஸர்வேச்வரன் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்னில்)

அந்தரத்து  அமரர்

ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்களெல்லோரும்

அடி இணை வணங்க ஸேவித்துப்

எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவித்துப் பிரார்த்திக்க

ஆயிரம் முகத்தினால் அருளி

(அவர்களது வேண்டுகோளின்படி) பலமுகமாகப் பிரவஹிக்கும்படி (கங்கையை நோக்கி) நியமித்தருள

மந்தரத்து இழிந்த

(அவ்வண்ணமாகவே) மந்தர மலையினின்றும் பெருகின

கங்கையின் கரை மேல்

கங்கையின் கரைமீதுள்ள

வதரியாச்சிராமத்து உள்ளான்

ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளவன்.’

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

வெந்திறல்களிறும் வேலைவாயமுதும் விண்ணொடுவிண்ணவர்க்கரசும் *

இந்திரற்கருளியெமக்குமீந்தருளும் எந்தையெம்மடிகளெம்பெருமான் *

அந்தரத்தமரரடியிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி *

மந்தரத்திழிந்தகங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (எ)

 

* * *-(வெந்திறற்களிறும்.) திருமால் தேவர்களின் பிரார்த்தனைக் கிணங்கிக் கடல்கடைந் தருளின காலத்து, கடையப்பட்ட அக்கடலினின்று ஐராவதயானை, உச்சைச்ச்ரவஸ் என்னுங் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயினவென்று புராணங்கள் கூறும். அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவதயானையையும் அமிருதத்தையும் தேவர்கட் குத் தலைவனாயிருக்கும் ஸாம்ராஜ்யத்தையும் கொடுத்தருளி, அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரி யாச்சிரமத்துள்ளான்; அவ்வாச்சிரமம் எங்குள்ளது?–கங்கையின் கரைமேலுள்ளது. அக்கங்கை எப்படிப்பட்டது?– அந்தரத்தமரரடியிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி மந்தரத் திழிந்தது. அதாவது-கங்கையானது ஒரு முகமாக வந்து இழிந்தால் பெரிய விசையோடே வருகிறமிடுக்கைக் கடல் பொறா தென்று தேவர்கள் எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து ‘ கங்கை பல முக மாகப் பெருகும்படி அருள் புரிய வேணும்’ என்று பிரார்த்திக்க, அவன் ‘ அப்படியே ஆகுக’ என்று அருள் கூர்ந்து கங்கையை நியமித்த வளவிலே கங்கை பல முகமாகப் பெருகிற்றாம். “அந்தரத் தமரர் அடியிணை வணங்க ” என்று இன்னாருடைய அடியை வணங்கினராகச் சொல்லாமையால், எம்பெருமானுடைய அடியிணையை வணங்கினராகக் கொள்ளப்பட்டது. அன்றி, கங்காதேவியின் திருவடிகளிலேயே வணங்கிப் பிரார்த்தித்தனரென்றுங் கொள்ளலாம். ”அன்றிக்கே, கங்கை தன்னை யாச்ரயிக்க அதுதானருளுகையாகவுமாம் ” என் றார் பெரியவாச்சான் பிள்ளையும். எம்பெருமானடியிணையை வணங்கினராகக் கொள்ளும் யோஜனையில், மூன்றாமடியின் இறுதியிலுள்ள அருளி என்றதை எச்சத்திரிபாகக் கொள்ளவேணும்; ஆயிரமுகத்தினால் பிரவஹிக்கும்படி அருள என்றபடி. ஆயிரமுக மென்றது அனேகப்ரகாரமாக என்றபடியாமத்தனை. “மேருவிலே யிழிந்து மந்தரத்திலே யிழிந்து ஹிமவானிலே யிழிந்து இங்கனே பலவகைகளாலே வரும்படியைச் சொல்லக் கடவதிறே” என்ற வியாக்கியான ஸ்ரீஸுக்தி காண்க. …………….(எ)

 

English Translation

The great elephant Airavata, the ambrosia from the ilk-Ocean, the big sky and the rule over the celestials, –all these that he grants to Indra, he grants equally to us devotees. My Lord and father, my master, is worshipped by the gods, chanting in a thousand voices, on the banks of the river Ganga that flows down the Mandara-giri Mountain. He resides in Vadari-Ashrama.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top