(975)

(975)

ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்

கூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,

நாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில்,

வாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே.

 

பதவுரை

இருமி இளைத்தீர்

–

“(ஐயங்கார்களே!) இருமலும் இளைப்புமாக ஆனீர்கள்;

உள்ளம் கூசியிட்டீர்

–

நெஞ்சு கூசப் பெற்றீர்கள்;

போமின்

–

அப்பால் ஒழிந்து போங்கள்

ஈ சி

–

சீ சீ ;

ஈங்கு இரேல்மின்

–

இங்கே இருக்கக்கூடாது;”

என்று பேசும்

–

என்றிப்படி அவமரியாதையாகப் பேசுகிற

குவளை அம் கண்ணியர் பால்

–

கருநெய்தல் போன்ற அழகிய கண்ணையுடைய மாதர்களிடத்து

நாசம் ஆன பாசம் விட்டு

–

ஸ்வரூபநாசத்தை விளைக்க வல்ல ஆசாபாசத்தை விட்டுத் துலைத்து

நல் நெறி நோக்கல் உறில்

–

நல்வழி போகப்பார்க்கும் பக்ஷத்தில்

வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதும்

–

பரிமளம் மிக்குக் குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

ஈசிபோமி னீங்கிரேன்மின் இருமியீளைத்தீர் * உள்ளம்

கூசியிட்டீ ரென்றுபேசும் குவளையங் கண்ணியர்பால் *

நாசமான பாசம்விட்டு நன்னெறி நோக்கலுறில் *

வாசம்மல்கு தண்டுழாயான் வதரி வணங்குதுமே.

 

***-[ஈசிபோமின்.) * முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து சென்று குறடேறும்போதே, சீ சீ, நட, நட” என்று துரத்தியடிப்பர்கள் ; வாசலை விடமாட்டாத சாபல்யத்தாலே ‘அம்மா! நான் உள்ளே வரவில்லை; தெருத்திண்ணையிலேயே கிடந்து போகிறேன்’ என்று விநயமாகச் சொல்லி உட்காரப் பார்த்தவளவில், ஈங்கிரேல்மின்’ என்று வெருட்டுவர்கள்; பண்டெல்லாம் ‘ என்னைவிட்டுப் பிரியக்கூடாதென்று சொல்லிக்கொண்டிருந்த நீங்கள் இன்று இங்கனே வெருட்டுவானேன் என்று கேட்டால், இருமி இளைத்தீர், உள்ளம் கூசியிட்டீர் என்பர்கள். அப்படி சொல்லி வெருட்டும் போதும் பாவக் கொடுமையாலே அந்தப் பிளிச்சைக்கண்ணிகளிடத்துப் பாசம் ஒழியாது மயங்கி நிற்குங்கள் கிழப்பிணங்கள்; ஆசாபாசம் விடவொண்ணாதே. அந்த ஆசாபாசம் ஸ்வரூப நாசத்துக்கே உறுப்பாகையாலே அதனை விட்டொழித்து நல்வழிசேர நினைவுண்டாகில் வதரி வணங்குதல் நன்று.

ஈசி-சீ சீ’ என்ற இழிவுரையின் விகார அநுகாரம். குவளையங்கண்ணியர் என்றது-கண்ணழகிலே துவண்டு நிற்கும் கிழப்பிணங்களின் கருத்தாலே யாம். நாசமான என்றது-நாச ஹேதுவான என்றபடி. பாசம்- அன்பு. நன்னெறி – அர்ச்சிராதி மார்க்கம் என்னலாம். …  …    …. ௮

English Translation

Lotus-eyed dames will say, “Ee, Yech, Go away, don’t sit here. Your coughs and moans make our hearts shudder”. ‘Ere that happens, — if you wish to seek a new path, give up your damning passions and seek the Lord with fragrant Tulasi wreath, — Worship Him in Vadari.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top