(934)

(934)

பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட அமரர்க்கு

அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து

கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்

பெரிய வாய கண்க ளென்னைப் பேதைமை செய்தனவே.

பதவுரை

பரியன் ஆகி

மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க்கொண்டு
வந்த

(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்

அஸூரனான இரணியனுடைய
உடல்

சரீரத்தை
கீண்ட

கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு

பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய

அணுகமுடியாதவனும்
ஆதி

ஜகத்காரணபூதனும்
பிரான்

மஹோபகாரகனும்
அரங்கத்து

கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்

பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து

திருமுகமண்டலத்தில்
கரிய ஆகி

கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து

விசாலங்களாய்
மிளிர்ந்து

பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி

செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட

(காதுவரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய

பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்

அந்தத் திருக்கண்களானவை
என்னை

அடியேனை
பேதைமை செய்தன

உந்மத்தனாகச் செய்துவிட்டன.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எப்போதும் அழகியமணவாளனுடைய திருக்கண்களின் பெருமையையே தாம் வாய்வெருவி, பலரும் ‘இவன் பேயன்’ என்று ஏசும்படியான உன்மத்த நிலைமையை அடைந்துவிட்டதாக அருளிச்செய்கிறார்.  “ஏழையராவியு ண்ணுமிணைக் கூற்றங்கொலோவறியேன், ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள் கொலோவறியேன், சூழவுந்தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றுங்கண்டீர், தோழியர்காளன்னைமீர்! என்செய்தேன் துயராட்டியேனே” என்று திருக்கண்களில் ஈடுபட்டு நம்மாழ்வார் பட்டபாடு இவரும் படுகிறார் போலும்.

அவுணனுடல் கீண்ட வரலாறு:- தனித்தனி தேவர் விலங்கு முதலிய பிராணிகளாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம்பெற்ற இரணியன்,  தேவர் முதலியவர்களுக்கும் கொடுமைகள் இயற்றித் தன்னையே கடவுளாக அனைவரும் வணங்கும்படி செய்துவருகையில், அவனது மகனான ப்ரஹ்லாதாழ்வான், இளமை தொடங்கி மஹாவிஷ்ணுபக்தனாய் தந்தையின் கட்டளைப்படி முதலில் அவனது பெயரைச் சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமஞ் சொல்லிவரவே கடுங்கோபங் கொண்ட இரணியன் ப்ரஹ்லாதனைத் தன்வழியில் இணக்குவதற்குப் பலவாறு முயன்றவளவிலும் அங்ஙனம் வழிபடாத அவனைக் கொல்லுவதற்கு என்ன உபாயஞ்செய்தும் அவன் திருமாலருளால் இறவாதொழிய, ஒருநாள் ஸாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘அடா! நீ சொல்லும் நாராயணன் என்பான் எங்கு உளன்? காட்டு’ என்ன; அப்பிள்ளை ‘தூணிலும் உளன் துரும்பிலும் உளன், எங்கும் உளன்’ என்று உறுதியாய்ச் சொல்ல, உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரில் நின்ற ஒரு தூணைப்புடைக்க, அதிலிருந்து திருமால் உடனே மனிதரூபமும் சிங்கவடிவமுங் கலந்த நரஸிம்ஹமூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாசற்படியில் தன் மடிமீது வைத்துக்கொண்டு தனது திருக்கை நகங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டு ப்ரஹலாதனுக்கு அருள்செய்தான் என்பதாம்.

எம்பெருமானது அருள் ஒன்றையே நம்பி அவனுடைய சரணமே சரணம் என்ற உறுதியின்றித் தன்முயற்சியாலே அவனைப் பெறலாம் என்று நினைப்பவர்கள் தேவர்களாயிருப்பினும் அவர்கட்கும் அருமைப்படுவான் எம்பெருமான் என்பார், அமரர்க்கு அரிய என்றார்.  திருக்கண்களை வருணிப்பன பின்னடிகள். கறுத்த நிறமுடைத்தாதல், விசாலமாயிருத்தல், ஒளிபொருந்தியிருத்தல், செவ்வரிபடர்ந்திருத்தல் (சிறுகொடிபோன்ற சிவந்தரேகை ஒடுதல்,) காதளவும் நீண்டிருத்தல் இவை கண்களின் சிறப்புகுறிப்பா மென்க.  பேதைமை – அறிவில்லாமையும், உந்மத்தமும்.

English Translation

The first causes Lord, hard to reach even for the gods, the perfect Lord residing in Arangam, is the one who, tore into the tyrant Hiranya Kasipu’s bowels. His face is set with dark wide red eyes. Aho, those eyes have made me intemperate.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top