(935)

(935)

ஆலமாமரத்தி னிலைமே லொருபாலகனாய்

ஞாலமேழு முண்டா னரங்கத் தரவி னணையான்

கோலமாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்

நீலமேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே.

பதவுரை

மா

பெரிதான
ஆலமரத்தின்

ஆலமரத்தினுடைய
இலைமேல்

(சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய்

ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான்

ஏழுலகங்களையும் திருவயிற்றிலேவைத்து நோக்கினவனும்
அரங்கத்து

கோயிலிலே
அரவு இன் அணையான்

திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின்மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம்

அழகிய
மா

சிறந்த
மணி ஆரமும்

ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும்

முத்துவடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது

எல்லைகாண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில்

ஒப்பற்ற  அழகையுடையதும்
நீலம்

கருநெய்தல் மலர் போன்றதுமான
மேனி

திருமேனியானது

எனது நெஞ்சினுடைய
நிறை

அடக்கத்தை
கொண்டது

கொள்ளை கொண்டு போயிற்று;

ஐயோ! இதற்கென் செய்வேன்? என்கிறார்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தனித்தனி ஒவ்வொரு அவயவத்திலும் ஈடுபட்டுபோந்த ஆழ்வார், அவயவியான திருமேனியை அநுபவித்துத் தமது நெஞ்சு பரவசமாகப் பெற்ற பெருமையைப் பேசுகிறார் இதில்.

ஓர் அவாந்தரப்ரளயத்தில், ஸாகோபஸகமாக மிகப்பெரியதாய் வளர்ந்திருப்பதொரு ஆலமரத்தின் ஒரு சிறு பசுந்தளிரிலே, தாயும் தந்தையுமில்லாததொரு தனிக்குழவியாய்ப் பள்ளிகொண்டு ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கியருளின திருவரங்கமானது ஸகலதிருவாபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள கரிய திரு மேனியானது எனக்கு ஸேவை ஸாதித்து என் நெஞ்சினது காம்பீர்யத்தைக் கொள்ளை கொண்டு போயிற்றே! என்கிறார்.

என் நெஞ்சினை

“ஐயோ!-பச்சைச் சட்டையுடுத்துத் தனக்குள்ளதை யடையக் காட்டி எனக்குள்ளதையடையக் கொண்டானே!” என்பர் பெரியவாச்சான்பிள்ளை. “நான் எல்லாவற்றையும் நின்று நின்று அநுபவிக்க வேணுமென்றிருக்க, அநுபவபரி  கரமான என் நெஞ்சைத் தன்பக்கலிலே இழுத்துக்கொள்வதே! ஐயோ! என்கிறார்” என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

கோலமா மணியாரங்களையும்; முத்துத்தாமங்களையும், முடிவுஇல்லாத அழகையும், நீலநிறமுடைய திருமேனி என்ற உரைத்தலுமாம்.

நெஞ்சை நிறைகொள்வதாவது-மோஹிக்கச் செய்கை என்க.  நெஞ்சினை- உருபுமயக்கம்.

English Translation

He swallowed seven worlds and lay as a child on a fig leaf. He reclines on a serpent in Arangam. He wears a beautiful gem-set garland and a necklace of pearls on his dark frame. Aho, his matchless beauty has stolen my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top