(929)
மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்
உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே.
பதவுரை
| மந்தி |
– |
குரங்குகளானவை |
| பாய் |
– |
(ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப்பெற்ற |
| வடவேங்கடம் மா மலை |
– |
வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே |
| வானவர்கள் |
– |
நித்யஸூரிகள் |
| சந்தி செய்ய நின்றான் |
– |
பூக்களைக்கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய் |
| அரங்கத்து |
– |
கோயிலிலே |
| அரவு இன் அணையான் |
– |
திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையையுடையனான அழகிய மணவாளனுடைய |
| அந்தி போல் நிறத்து ஆடையும் |
– |
செவ்வானம்போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும் |
| அதன்மேல் |
– |
அப்பீதாம்பரத்தின்மேலே |
| அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ |
– |
பிரமனைப்படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருநாபிக்கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ |
| அடியேன் உள்ளத்து இன் உயிர |
– |
என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்மஸ்வரூபம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கருத்து:- “அடியேனுள்ளத்தின்னுயிர் எழிலுந்திமேலதன்றோ” என இயையும். இங்கு வாநரங்களைக் கூறியது சபலரான ஸம்ஸாரிகளைக் கூறியவாறாம். “நின்றவா நில்லா நெஞ்சினையுடையராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகிற க்ஷுத்ரபல காமிகளான ஸம்ஸாரிகளுக்கு வாநரங்களே ஒத்த நிதர்சநமாம்.
பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்துக்கு முடிசூடியிருக்கிற முக்தரும் நித்யரும் தேஸோசிதமான தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு திருமலையிலே வந்து கைங்கர்யங்கள் பண்ண, அவற்றைப் பெறுகைக்காக அங்கே நித்ய ஸந்நிஹிதனாயிருக்கும் ஸ்ரீரங்கநாதனுடைய திருப்பீதாம்பரத்திலும் திருநாபீகமலத்திலும் என் சிந்தை குடிகொண்டதென்கை.
‘வடவேங்கடமாலை நின்றான்’ என்றவுடனே, வருந்தி ஏற வேண்டும்படியான திருமலையும் நம்போன்றவர்க்குப் பரமபதம்போல் அரிதேயன்றோ என்று சிலர் குறைபட, உடனே, ‘அரங்கத்தரவினணையான்’ என்று எளிமையை அருளிச்செய்தபடி.
“அந்திபோல்நிறம்” என்பதற்கு-அடியாருடைய அஜ்ஞானவிருளைக் கழிக்கவல்ல நன்ஞானமாகிற ஸூர்யோதயத்துக்குக் கிழக்கு ஸந்த்யைபோலவும், அவர்களுடைய தாபத்ரயத்தை ஆற்றுதற்கு மேற்கு ஸந்த்யைபோலவும் இராநின்ற, என்று கருத்துரைப்பர் தூப்புற்பிள்ளை.
முதற்பாட்டில் ஆதி என்ற அடைமொழியால் எம்பெருமானுக்குச் சொன்ன ஜகத்தகாரணத்வத்தை இப்பாட்டில் மூன்றாமடி நிலைகாட்டுகின்றது போலும்.
த்ரயோதேவா ஸ்துல்யா, த்ரிதயமிதமத்வைதமதிகம்
த்ரிகாதஸ்மாத் த்த்வம் பரமிதி விதர்க்காந் விகடயந்
விபோர்நாபிபத்மோ விதிசிவ நிதாநம் பகவத
த்தந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந
என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்தவஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
“சந்திசெய்யநின்றான்“ என்றவிடத்து, சந்தி என்பதற்கு ஆராதநம் என்று எப்படி பொருளாயிற்றென்னில், சந்தி என்று ஸந்த்யாவந்தனத்துக்குப் பேராய் அது ஸ்ரீ பகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யரூபமாகையாலே லக்ஷிதலக்ஷணை‘ என்னும்முறையால் பகவதாராதநத்தைச் சொல்லிற்றாகிறதென்று கொள்ளலாம்.
நின்றான் – வினையாலணையும் பெயர்.
English Translation
He stands in, the monkey forest of Venkatam hills over the North, worshipped by the celestials. He reclines on a serpent in Arangam. Over his sunset-red vesture, the beautiful lotus-seat of Brahma rises from his navel, obsessing my heart and spirit!
