(930)

(930)

சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் கிறைவன் தலைபத்து

உதிர வோட்டிஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன்

மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற்

றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே

பதவுரை

சதுரம்

நாற்சதுரமாய்
மா

உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்

மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு

லங்காநகரத்திற்கு
இறைவன்

நாதனான இராவணனை
ஓட்டி

(முதல்நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து

(மறுநாட்போரில்)

தலைபத்து

(அவனது) தலைபத்தும்
உதிர

(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்

ஒப்பற்ற
வெம் கணை

கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்

ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்

கடல்போன்ற (குளிர்ந்த) வடிவையுடையவனும்
வண்டு

வண்டுகளானவை
மதுரமா

மதுரமாக
பாட

இசைபாட

(அதற்குத் தகுதியாக)

மா மயில் ஆடு

சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்

திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதரபந்தம்

திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று

என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது

உலாவுகின்றது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கருத்து:- குலபர்வதங்களையெல்லாம திரட்டிக்கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போல் செறிவும் திண்மையும் உயர்த்தியுமுடைத்தாய் அஷ்டதிக்பாலகர்களுக்கும் எட்டிப்பார்க்கவொண்ணாத மதிள்களாலே சூழப்பட்டிருந்த இலங்கைக்கு அரசனான இராவணனை முதல்நாட்போரில் மிகவும் இளைக்கப்பண்ணி “சசால சாபஞ்ச முமோசவீர:” என்றபடி- அவன் சளைத்துப்போய் வில்லையும் பொகட்டு ஒன்றுஞ் செய்யமாட்டாது நின்றவளவிலே அவன்மேல் இரக்கமுற்று ‘அப்பா! இன்று மிகவும் இளைத்தாய்; இப்போது உன்னை ஒரு நொடிப்பொழுதில் உயிர்தொலைக்கக் கூடுமாயினும் அது தர்மமல்லவென்று விட்டிட்டேன்; இன்று போய் நாளை வா’ என்று சொல்லியனுப்பி, அப்படியே அவன் மறுநாள் மிக வல்லவன்போல வந்து நின்றவாறே ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் பிரயோகித்து அவன் தலைகளை அறுத்துத் தள்ளின வரலாற்றை அநுஸந்திக்கிறார முன் இரண்டடிகளில்.

ஓட்டி என்பதற்கு இராவணனையோட்டி என்று பொருள்கொள்ளாமல், ஓர் வெங்கணையை ஓட்டி என்று பொருள் கூறுவதும் ஒன்று.

ஓதவண்ணன்-கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வல்ல கடல்போன்ற ச்யாமளமான  திருமேனியையுடையவன்.  திருவயிறு உதரம் என்று புநருக்தியன்றோவென்று சங்கிக்கவேண்டா; ‘உதரபந்தம்’ என்பது திருவாபரணத்தின் பெயர் ; அது திருவயிற்றிற் சாத்தப்பட்டுள்ளமையைக் கூறியிருப்பதாக உணர்க.

“திருவயிற்றுதாபந்தனம்” என்றும் பாடமுண்டு.

English Translation

He shot arrows and felled the ten heads of Ravana, the king of fortified Lanka. He is the ocean-hued reclining in Arangam where peacocks dance to the song of bumble-bees. Aho; the cummerbund over his belly remains in my heart and haunts me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top